கொரோனா, ஊரடங்கு என்று பல பிரச்னைகளால் முடங்கியுள்ள கோவை தொழில் துறைக்கு புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது. தொழில் அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் கோவை தொழில் துறை சார்ந்தவர்களுடன் ஆலோனை நடத்தியுள்ளார். அப்போது அவர், “நான் இங்கு பேச வரவில்லை, நீங்கள் பேசுங்கள், உங்கள் பிரச்னைகளைக் கேட்டு, அது குறித்து முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்” என்று சொல்ல, அவர்கள் உற்சாகமாயிருக்கிறார்கள்.

கோவை

Also Read: `தொழில் துறையினருக்கு முக்கியத்துவம் வேண்டும்!’ – கோவை மக்களின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன?

“முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் தொழில் துறை வளர்ச்சிக்கு புதிய முதலீடுகள் மீது அதிக அக்கறை காட்டுகிறார். அதேபோல, ஏற்கெனவே செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களைப் பாதுகாத்து அவை அனைத்தையும் தொடர்ந்து லாபகரமாகச் செயல்படுவதை உறுதி செய்ய அதிக அக்கறை காட்டி வருகிறார்” என்று சொல்லியிருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

கோவை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் இதுவரை இல்லாத பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. வங்கிகளும் அவர்களுக்கு பெரிய அளவில் உதவுவதில்லை என்ற புகார் பரவலாக உள்ளது.

ஸ்டார்ட் அப் ஆலோசனை கூட்டம்

Also Read: தொழில் வளர்ச்சியை நேரடியாக மேற்பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின்..! வேகமெடுக்குமா தொழில்துறை..?

இதையடுத்து, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் சிறிய ஐ.டி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அழைத்து, அவர்களுக்குக் கடன் வழங்குவது, மானியம் வழங்குவது போன்றவை குறித்து பேசி உற்சாகப்படுத்தியுள்ளனர்.

தி.மு.க மாநில மருத்துவரணி துணைச் செயலாளரும், தொழில் முனைவோருமான மருத்துவர் கோகுல், “கொரோனாவுக்கு முன்பிருந்தே பல்வேறு காரணங்களால் கோவை தொழில் துறை ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரியால் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. சிறிய நிறுவனங்களுக்கு கடன் வழங்க வங்கிகள் தயங்குகின்றன. பல காட்டன் மில்கள், ஃபவுண்டரிகள் மூடப்பட்டுவிட்டன. இப்படி கோவையின் முக்கிய அடையாளங்களை இழந்துகொண்டிருக்கிறோம். மறுபக்கம் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வங்கி கடன் கிடைப்பதில்லை. இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய அமைச்சர் தங்கம் தென்னரசிடம் பேசினோம்.

மருத்துவர் கோகுல்

அவர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மாவை சந்திக்கச் சொன்னார். அவரைச் சந்தித்து பிரச்னைகளை எடுத்துக் கூறியதும் உடனடியாக ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய கூறிவிட்டார். அதன் அடிப்படையில்தான் இங்கு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. ஒருபக்கம் பெரிய தொழில் அமைப்புகளை சந்தித்துப் பேசினோம். மறுபக்கம், கோவை டெக் ஸ்டார்ட் அப் குழுவினர், கல்லூரிகள் மூலம் ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது” என்றார்.

ஜி.எஸ்.டி வரி மற்றும் கோவை தொழில் துறைக்குத் தேவையான விஷயங்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது. அன்னப்பூர்ணா ஹோட்டல் குழுமத்தைச் சேர்ந்த சீனிவாசன், “எங்கள் ஹோட்டலுக்கு ஒருவர் வந்து இனிப்பு, காரம், பன் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இனிப்புக்கு 5%, காரத்துக்கு 12%, பன்னுக்கு 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கணினி எப்படிக் கணக்கிடும்? வாடிக்கையாளர், `என்னய்யா மூணு ஜி.எஸ்.டி போட்ருக்கீங்க’ என்று கேவலமாகப் பார்க்கிறார்.

GST

Also Read: பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?

ஒரே ஜி.எஸ்.டி விதித்தால் இந்தப் பிரச்னையே இல்லையே! ஜி.எஸ்.டி கவுன்சிலில் கேட்டால், வட இந்தியர்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவார்கள் என்பதற்காக 5 சதவிகிதமும், தென்னிந்தியர்கள் மிக்சர் அதிகம் சாப்பிடுவார்கள் என்பதற்காக 12 சதவிகிதமும் ஜி.எஸ்.டி வரி நிர்ணயித்ததாக எழுதியே கொடுத்துள்ளனர்” என்று தனது ஆதங்கத்தை நகைச்சுவையாகப் பேசினார்.

கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு, “சுமார் 20 பேர் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்தோம். எல்லோருக்கும் 2 நிமிடங்கள் ஒதுக்கினர். நாங்கள் கூறிய விஷயங்களை அமைச்சரே குறித்து வைத்துக் கொண்டார். தமிழ்நாட்டை ராணுவ தளவாட உற்பத்தி மையமாக அறிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு சோதனை வசதிக்கு மத்திய அரசு 400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. நாமும் 20% பங்களிக்க வேண்டும். இது அமைந்தால் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல, உற்பத்தியாளர்களுக்கு கன்டெய்னர்கள் கிடைப்பதில்லை. கன்டெய்னர் உற்பத்தி குறைவாக உள்ளது. கன்டெய்னர் உற்பத்திக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்தால் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். இதைத்தான் நான் பேசினேன்.

ரமேஷ் பாபு

எல்லோரும் பேசியவுடன் அமைச்சர், “இவ்வளவு பிரச்னைகள் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எல்லாவற்றையும் குறித்து வைத்துள்ளேன். இதில் எவையெல்லாம் சாத்தியமோ, அவற்றை உடனடியாக நிறைவேற்றுவோம். வழக்கம் போல, சம்பிரதாயத்துக்காக வந்து கேட்டுச் செல்கின்றனர் என நீங்கள் நினைக்கலாம். இது காற்றோடு காற்றாகச் சென்றுவிடும் என்று நினைக்காதீர்கள். இந்த அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடியாகத் தீர்வு கொடுப்போம்” என்று கூறினார். அதை நாங்கள் கோவை தொழில்துறைக்கு நல்ல அறிகுறியாக பார்க்கிறோம். அமைச்சர்கள் அடிக்கடி கோவை வந்து எங்கள் பிரச்னைகளைக் கேட்கின்றனர். பிரச்னைகளைக் கேட்பதைப் போல, இவற்றை உடனடியாகச் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும்” என்றார்.

ரியல் ஒர்க் ஸ்டுடியோ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இயக்குநர் சிவபிரசாத் வேலாயுதம், “மாஸ்டர் படத்தில் வரும் குட்டி ஸ்டோரி பாடலை உருவாக்கியது, தலப்பாகட்டி பிரியாணி விளம்பரம் உருவாக்கியது எல்லாம் எங்கள் பணி. அனிமேஷன் தொழில்நுட்பத்தை பிரதானமாக வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். சினிமாதான் என் தொழில். பொதுவாக சினிமா கம்பெனி என்றாலே ஏதோ கறுப்புப் பணத்தில்தான் இயங்குவது போல நினைக்கின்றனர். அதனால், வங்கிகளில் கடன் கிடைப்பதில்லை. Virtual production என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று வங்கியை அணுகினேன். அப்போது அதற்கு சுமார் 25 லட்சம் ரூபாய் செலவாகும். அவர்கள் கடன் கொடுக்கவில்லை. இப்போது அதே தொழில்நுட்பத்துக்கு கோடிகளில் செலவிட வேண்டியுள்ளது.

சிவபிரசாத் வேலாயுதம்

ஆனால், கோவையில் அமர்ந்துகொண்டு நாங்கள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறோம். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பொதுவாக வருவார்கள், கேட்பார்கள், செல்வார்கள் என்பதைத்தான் பார்த்துள்ளோம். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் நாங்கள் பேசியதை உற்றுக் கவனித்தனர். பிரச்னைகளை ஓரளவுக்கு புரிந்து கொண்டதாக நம்புகிறோம். இது வரவேற்கத்தக்க விஷயம். அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கினால், கோவையில் இருந்து கொண்டே பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அசத்தலாம்” என்றார்.

“ஒருமுறை நான் வந்து செல்வதில் எந்தப் பயனும் இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நான் வருகிறேன். நாங்கள் என்ன செய்துள்ளோம். உங்களுக்கு என்ன தேவை என்று அனைத்தையும் ஆலோசிப்போம். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் வரலாற்றில் முதல்முறையாக நாங்களாக முன்வந்து உங்கள் பிரச்னைகளைக் கேட்கத் தொடங்கியுள்ளோம். ஒரே நாளில் எல்லாம் நடக்காது.

ஹன்ஸ்ராஜ் வர்மா

Also Read: “Made in India போல Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்கவேண்டும்!” – மு.க.ஸ்டாலின் விருப்பம்

ஆனால், உங்களது பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான முதல்படியாக இது இருக்கும். விரைவில், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறுகையில், “தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த நிறைய திட்டங்கள் உள்ளன. அது அவர்களுக்கு சரியாகச் சென்று சேர வேண்டும். துறை சார்ந்தவர்களுக்கு சரியான தகவல் கிடைக்க வேண்டும் என்று, பல துறைகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி முடித்துவிட்டோம். பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு நடந்த கூட்டங்களின் அடிப்படையில் வைத்த கோரிக்கைகளுக்கு விதி எண் 110-ன் கீழ் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். கோவை பொருளாதார வளர்ச்சி அதிகம் உள்ள பகுதி. அதனால், தொழில்துறை சார்ந்து கோவைக்கு சிறப்பு கவனம் கொடுக்கிறோம்.

சமீரன்

தொழில் துறைக்கு எது தேவையோ அதன் அடிப்படையில் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை நிறைவேற்றுவோம். அன்னூரில் சிப்காட் வரவுள்ளது. சூலூரில் ராணுவ பூங்கா வரவுள்ளது. அந்தத் திட்டங்களின் மூலம் அந்தப் பகுதிகளுக்கு தேவையான வளர்ச்சிப் பணிகள் நடக்கும். அவர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இதன் மூலம் அவர்களின் பிரச்னைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கொரோனா நோய்த் தொற்று ஓரளவுக்குக் குறைந்துள்ள நிலையில், கோவை தொழில் துறை மீண்டு களைகட்டத் தொடங்கிவிட்டதற்கான அடையாளமாகத்தான் அமைச்சரின் இந்த வருகையைக் கோவை தொழில்முனைவோர்கள் பார்ப்பதாகத் தெரிகிறது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.