முதல் அத்தியாயத்தில் அடிப்படையான முதலீட்டு திட்டங்கள், அவற்றில் நடந்துள்ள மாற்றங்கள் குறித்து பார்த்தோம். ஒவ்வொரு வகையான முதலீட்டையும் தனித்தனியாக விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் தெரிந்துகொள்வோம்.

image

சேமிப்பு என்றால்? – சேமிப்பு என்பது நாம் செலவு செய்தது போக மீதம் இருக்கும் பணத்தை ஒதுக்குவது. குழந்தைகளிடம் கொடுத்து உண்டியலில் சேமிக்க சொல்லலாம் அல்லது சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கலாம். சேமிப்பின் கிடைக்கும் ஒரே பலன், நமக்கு தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம் என்பதைத் தவிர, மற்ற எதுவும் சேமிப்பில் கிடையாது. பணத்தை சேமிக்க வேண்டும் என்னும் எண்ணம் உருவாகுவதைத் தவிர வேறு பலன் கிடையாது.

image

நமக்கு இருப்பது ஒன்று அல்லது இரு வருமானம்தான். ஆனால், ஒவ்வொருவருக்கும் பல விதமான தேவைகள் உள்ளன. கல்வி, திருமணம், வீடு, கார், மருத்துவம் மற்றும் அவசர கால செலவுகள் உள்ளன. இது தவிர, ஓய்வுகால தேவைகள் உள்ளன. சேமிப்பின் மூலம் இவற்றை அடைய முடியுமா என்று கேட்டால், ‘நிச்சயம் முழுமையாக முடியாது’ என்பதே யதார்த்தமான பதில்.

தவிர, தற்போது நம் உண்டியலில் இருக்கும் 1000 ரூபாயின் மதிப்பு அடுத்த ஆண்டு இதே காலத்திலும் 1000 ரூபாயாகவே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வாங்கிய அதே பொருளை அடுத்த ஆண்டும் வாங்க வேண்டும் என்றால், கூடுதல் தொகை தேவைப்படும். எளிதான இந்த நடைமுறையைதான் பணவீக்கம் என்கிறோம்.

image

வங்கி சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பட்சத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானம் கிடைக்காது. அதனால், முதலீட்டின் அடிப்படை நோக்கமே பணவீக்கத்தை தாண்டிய வருமானம் கிடைக்க வேண்டும். மேலும், நம் வாழ்வின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்றால், பணத்தை சரியான வழியில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான்.

முதலீடு: முதலீடு செய்வதன் மூலம் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தவிர, இலக்கு (வீடு, கல்வி, சுற்றுலா உள்ளிட்டவை) நிர்ணயம் செய்து முதலீடு செய்யும்போது, நம்முடைய இலக்குகளை நிச்சயம் அடையலாம். ஒவ்வொரு தேவைக்கும் ஒரு காலம் இருக்கிறது என்பதால், காலத்தை கணக்கிட்டு முதலீடு செய்யலாம். நீண்ட காலத்துக்குப் பிறகு தேவை என்றால், அதிக ரிஸ்க் இருக்கும் முதலீடுகளில் முதலீடு செய்யலாம். குறுகிய மற்றும் நடுத்தர கால தேவை என்றால், அதற்கு ஏற்ற குறைந்த ரிஸ்க் இருக்கும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

நிதி சார்ந்த விஷயங்களில் முதல் படி, முதலீட்டுக்கும் சேமிப்புக்கும் இடையிலான வித்தியாசம் தெரிய வேண்டும். இரண்டாவது படி நம்முடைய தேவைகள் எவை என்பது தெரிந்திருக்க வேண்டும். தேவை எது என்பதில் தெளிவு இருந்தால்தான் அதற்கு ஏற்ற முதலீட்டு திட்டங்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.

முதலீட்டை விரைவாக தொடங்குங்கள்: முதலீடு செய்ய வேண்டும் என முடிவு செய்த பிறகு நாள், காலம், நேரம் என எதையும் பார்க்க தேவையில்ல்லை. ‘விரைந்து தொடங்குதல்’ (Start Early) என்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் கூட்டு வட்டியின் பலனைப் பெறமுடியும்.

image

சேமிப்பில் செய்யும் ஒரு சில ஆண்டு கால தாமதம் பெரும் பாதகங்களை கொண்டு வரக்கூடும். வேலைக்கு சென்றவுடனே சேமிப்பை தொடங்கு வேண்டும் என்பதே பெரும்பாலான ஆலோசகர்கள் வலியுறுத்துவார்கள்.

25 வயதில் ஒருவர் சேமிக்கத் தொடங்குகிறார். மாதம் 6000 ரூபாய் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு ஆண்டும் 12 சதவீத வட்டி கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால் 60 வயதில் ரூ.4 கோடி இருக்கும். ஆனால், 40 வயதில் சேமிக்க தொடங்கும் ஒருவர் தன்னுடைய 60 வயது ரூ.4 கோடி தேவை எனில், மாதம் ரூ.40,000 முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

ஒரு பெரும் சொத்தினை உருவாக்க வேண்டும் என்றால், அதிக காலம் ஆகும். அதனைக் குறுகிய காலத்தில் பெற முடியாது.

“செலவு செய்த பிறகு மீதம் இருக்கும் தொகையை முதலீடு செய்ய வேண்டாம்; முதலீடு செய்தது போக மீதம் இருக்கும் தொகையை செலவு செய்யுங்கள்” என்பார்கள். ஆக, முதலீட்டின் அவசியத்தை புரிந்துகொள்ளுங்கள். மேலும், அந்த முதலீட்டை விரைவாகவும் தொடங்குங்கள்.

முந்தைய அத்தியாயம்: பணம் பண்ண ப்ளான் B – 1: அடிப்படையான முதலீட்டு வாய்ப்புகள் என்னென்ன?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.