`கடன் தொல்லையால் கணவன்-மனைவி விஷம் குடித்தனர்;

பிள்ளைகள் கைவிட்டதால் விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட பெற்றோர்;

பணிச்சுமை காரணமாக மருத்துவ மேற்படிப்பு மாணவர் தற்கொலை;

ஒருதலைக்காதல் விவகாரத்தில் ரயில் முன் பாய்ந்த இளைஞன்;

செல்போன் பயன்படுத்துவதைப் பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் விபரீத முடிவு..!’

– இதுபோன்ற துயரமான செய்திகளைக் கடக்காமல் நம் ஒவ்வொரு நாள் பொழுதும் நிறைவு பெறுவதில்லை. இந்தத் துயர நிகழ்வுகள் ஏன் தொடர்கதையாக நிகழ்கின்றன என்று சற்று நேரம் ஒதுக்கி யோசித்திருக்கிறோமா? நிச்சயமாக இல்லை என்பதால்தான், நம்மில் பலரையும் இரக்கமின்றி விழுங்கிக்கொண்டிருக்கிறது, தற்கொலை எண்ணம். அதன் தீராப் பசிக்கு இரையாகும் நம்மவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது.

மனஅழுத்தம் (மாதிரி படம்)

அண்மையில் நீட் தேர்வு நடந்து முடிந்த நிலையில், தேர்வுக்குத் தயாரானவர்களில் நான்கு மாணவர்கள் தற்கொலைக்கு முயன்று, அதில் மூவர் உயிரிழந்துள்ளனர். சென்னையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாடியிலிருந்து குதித்த மாணவி ஒருவர், சக மாணவர்களின் கண்முன்னேயே பலியானார். பக்குவமாக முடிவெடுக்க வேண்டிய வயது வந்தோரில் சிலரும்கூட தவறான முடிவுகளால் நிலைதடுமாறும் சூழலில், வாழ்க்கையைத் தொடங்கும் முன்னர் பிஞ்சிலேயே உயிரை மாய்த்துக்கொள்ளும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கையும் உயர்ந்து வரும் இன்றைய சூழலில், தற்கொலை தடுப்பு குறித்த ஆழமான விவாதத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கிறது.

பிரச்னைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. ஆனால், சில சிக்கல்கள் நம் அன்றாட வாழ்க்கை முறையையே சிதைத்து, `என்னடா வாழ்க்கை இது’ என்ற விரக்தியை ஏற்படுத்தும்போது, நல்ல தோழமையிடம் மனம் விட்டுப் பேசி மனக்குழப்பங்களுக்கு வடிகால் தேட வேண்டியதுதான் முதலில் நாம் செய்ய வேண்டிய அத்தியாவசியச் செயல். மாறாக, எதிர்மறை எண்ணங்களை மனதிலேயே குடிகொள்ள அனுமதித்தால் பேராபத்து நிச்சயம். லட்சக்கணக்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் இந்தப் பிரபஞ்சத்தில், அதையெல்லாம் சிந்தித்து நம்முடைய பிரச்னைகள் எதுவாக இருப்பினும் அதற்கு மாற்றுத் தீர்வுகளை ஆராய முனைப்பு காட்டாத சிலருக்கு, தற்கொலை எண்ணம் மட்டும் ஏன் அவ்வளவு கெட்டியாகப் பிடித்துப்போகிறது?

மனஅழுத்தம் (மாதிரி படம்)

“தற்கொலை செய்துகொண்டவர்கள் யாராக இருந்தாலும், ஒரு காரணம் மட்டுமே அவரின் அந்த விபரீத முடிவுக்குக் காரணமாக இருக்காது. அதற்குப் பலவிதமான காரணங்களும் அழுத்தங்களும் இருக்கும். ஆனால், கூர்மையான கண்ணோட்டத்துடன் அந்த முடிவுக்கான பதில்களை நாம் தேடுவதேயில்லை. முடிவிலியாக நீண்டுகொண்டே செல்லும் தற்கொலை நிகழ்வுகளுக்கு, இந்தப் போக்கும்கூட காரணமாக அமைகிறது” என்று வருத்தத்துடன் கூறுகிறார், மனநல மருத்துவரும், சென்னையிலுள்ள சிநேகா அமைப்பின் (தற்கொலை தடுப்புக்கான உதவி மையம்) நிறுவனரும், உலக சுகாதார நிறுவனத்தின் தற்கொலைத் தடுப்புப் பிரிவு ஆலோசகருமான லட்சுமி விஜயகுமார்.

தற்கொலை எண்ணம் எதனால் வருகிறது?

“கணவன் மனைவிக்கு இடையேயான கருத்து வேறுபாடு, பொருளாதார அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுடன் கூடிய குடும்ப பிரச்னைகள், காதல் தோல்வி, உடல் மற்றும் மனநலக் கோளாறுகள், எதிர்பாராத ஏமாற்றம், அவமானம், விருப்பமில்லாத திணிப்பு போன்ற பல்வேறு காரணங்களால், வாழ்க்கை மீதான பிடிப்பே முற்றிலும் அறுந்துபோன நிலையில், ஒருவர் எடுக்கத் துணியும் இறுதி முடிவுதான் தற்கொலை.

`யாரும் என்னைப் புரிந்துகொள்ளவில்லை, பலரும் உடன் இருந்தும் தனிமையில் இருப்பதுபோல உணர்கிறேன், என்னை யாருக்கும் பிடிக்கவில்லை, எனக்கு யாரையும் பிடிக்கவில்லை, நான் பிறருக்கு பாரமாக இருக்கிறேன், என்னால் இனி இயங்க முடியாது..!’ – தொடர் மன அழுத்தத்தால் உண்டாகும் இதுபோன்ற விரக்தியே, நாளடைவில் தற்கொலை எண்ணமாக உருமாறும். இந்த எண்ணம்… சாமானியர்கள் முதல் வெற்றி, பணம், புகழ் உடையவர்கள் உட்பட எல்லா தரப்பட்ட மனிதர்களுக்கும் வரக்கூடும்.

மனஅழுத்தம் (மாதிரி படம்)

தற்கொலை எண்ணத்துக்கு முந்தைய அறிகுறிகள்?

சரியான தூக்கம் இருக்காது அல்லது அதிக நேரம் தூங்குவது.

சரியாகச் சாப்பிடாமல் இருப்பது அல்லது அதிகம் சாப்பிடுவது.

எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பது.

கடவுள் நம்பிக்கை முற்றிலுமாக இல்லாமல் இருப்பது அல்லது கடவுள் வழிபாட்டில் மூழ்கிக்கிடப்பது.

வழக்கத்துக்கு மாறாகக் குணநலன்களில் மாற்றம்.

அதிக கோபத்துடன் இருப்பது.

தடாலடியாக முடிவெடுப்பது.

குறிப்பிட்ட சில மனிதர்களையோ, ஒருசில விஷயங்களையோ காரண காரியங்களைத் தாண்டி அதிகம் பிடிக்கும் அல்லது அதிகம் பிடிக்காது.

தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட என்ன தீர்வு?

மனதில் விரக்தியைக் குடிகொள்ள அனுமதித்தவர்கள், `சாகலாமா… வேண்டாமா?’ என்ற தத்தளிப்பில் உழன்று தவிப்பார்கள். அவர்களில் பலரும் `எனக்கு வாழப் பிடிக்கல’ என்று தன்னைச் சார்ந்த சிலரிடம் நிச்சயமாகச் சொல்லுவார்கள். ஆனால், அவர் நம்பிக் கூறும் அந்த ஒருசிலர், பெரும்பாலான நேரங்களில் அவர் சொல்வதன் தீவிரத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதில்லை. `உன்னைவிட கீழுள்ளவங்களைப் பாரு; ஒரு வாரம் லீவ் எடுத்து என்ஜாய் பண்ணிட்டு மறுபடியும் வேலைக்கு வா/போ’ என ஆலோசனை கொடுப்பவர்களே அதிகம். இதையே திரும்பத் திரும்பச் சொன்னால், தற்கொலை எண்ணத்தில் இருக்கும் அந்த நபர், நம்மிடம் மனம் விட்டுப் பேசுவதையே நிறுத்திக்கொள்ள வாய்ப்புண்டு.

மனஅழுத்தம் (மாதிரி படம்)

தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்கள், பெற்றோர், சகோதரர், நண்பர், காதலர் எனத் தங்கள் மனம் முழுமையாக நம்பும் நபரிடம், தங்களுக்குள் இருக்கும் பிரச்னையை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தி உதவி கேட்க வேண்டும். தனக்கிருக்கும் பிரச்னையை அவர் நம்பிக்கூறும் நபர், அந்த நபருக்குத் தற்கொலை எண்ணம் ஏன் வந்தது என்பதையும், அவரின் உணர்வுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவருக்கு இருப்பது பணம், பொருள், படிப்பு, உடல், மனம், வேலை என எது சம்பந்தப்பட்ட பிரச்னையாகவும் இருக்கலாம். அந்தச் சிக்கல் லாஜிக் ஆனது அல்லது லாஜிக் இல்லாதது என ஆராய்வதை விடுத்து, அவரை நாம் முழுமையாகப் புரிந்துகொண்ட உணர்வுடன், `உனக்கு நான் பக்கபலமா இருக்கேன்’ என்ற நம்பிக்கையை அவரது மனதில் ஆழமாக விதைக்க வேண்டும்.

பின்னர், சம்பந்தப்பட்ட நபரின் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான எல்லாவிதமான ஆலோசனைகளையும் சாத்தியக்கூறுகளையும் பக்குவமாக எடுத்துக்கூறி அல்லது உடன் இருந்து வழிகாட்டலாம். மனக்கொந்தளிப்பைத் தணித்து, எமோஷனல் ஆகாமல் நம்பிக்கையுடன் முடிவெடுக்கும் தன்மைக்கு மாற்றிவிட்டால், அதன் பிறகு இயல்புநிலைக்குத் திரும்பி, தற்கொலை எண்ணத்திலிருந்து அவரே விடுபடுவார். அதீத மன அழுத்தத்தில் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபரை மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்லலாம். பொதுவாகவே, குழப்பமான கோபமான நேரங்களில் நிதானமின்றி, சரி தவறுகளை யோசிக்காமல் நாம் எடுக்கும் துரித முடிவுகள் நிச்சயமாக எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். எனவேதான், எந்தச் சூழலிலும் நிதானத்தை மட்டும் இழக்கவே கூடாது.” – மிகச் சிக்கலான தற்கொலை பிரச்னைக்கு, எளிமையான கண்ணோட்டத்தில் தீர்வு சொல்கிறார் லட்சுமி.

மனஅழுத்தம் (மாதிரி படம்)

நல்லது கெட்டதை முழுமையாக உணர்ந்து முன்னேற வேண்டிய பருவத்தில், மாணவர்களுக்கும் இந்தத் தற்கொலை எண்ணம் அதிக அளவில் ஆட்கொள்வதின் பின்னணியில் அறியாமையுடனும், உரிய வழிகாட்டுதல்கள் இல்லாத காரணங்களே அதிகம் ஒளிந்திருக்கிறது. ஆண்டுதோறும் நீட் தேர்வு நடைபெற்று, முடிவுகள் வெளியாகும் நேரத்தில், சில மாணவர்கள் தேடிக்கொள்ளும் துயர்மிகு முடிவுகளால், பெருங்கொதிப்பான சூழல் வெடித்துத் தணியும். `நீட் தேர்வு விஷயத்தில் நிரந்தர தீர்வை முன்னெடுப்பதைக் காட்டிலும், மாணவர்களின் மரணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் போக்கையே பல்வேறு கட்சிகளும் மேற்கொள்கின்றன’ என்பது நடுநிலையாளர்களின் குற்றச்சாட்டு. இதுபோன்ற சூழல்களைச் சமயோஜிதமாக எதிர்கொள்வதற்கு லட்சுமி கூறுவது, பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்குமான அவசியமான ஆலோசனைகள்.

“ `நீட் தேர்வு வேண்டுமா… கூடாதா?’ என்ற விவாதத்துக்குள் செல்லாமல், இந்தப் பிரச்னைக்கு உளவியல் ரீதியான தீர்வை முன்வைக்க விரும்புகிறேன். ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் நீட் தேர்வு எழுதும் நிலையில், அதில் ஆயிரக்கணக் கானோருக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கிறது. வெற்றியை எதிர்பார்த்தே எல்லோரும் தேர்வு எழுதுவார்கள். அது வசமாகாத லட்சக்கணக்கானோரும் தவறான முடிவையா தேர்ந்தெடுக்கிறார்கள்? அப்படி எல்லோருமே இதுபோன்ற முடிவைத் தேடத் தொடங்கினால், நம் கல்விச் சூழல் என்னவாகும்? நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகளை அரசியல் ரீதியாக அணுகி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தவறான முன்னுதாரணத்துக்கே வழிவகுக்கும்.

98 மதிப்பெண் பெறும் மாணவனுக்கும், 95 மதிப்பெண் வாங்கும் மாணவனுக்குமான திறமையில் பெரிதாக வேறுபாடு இருப்பதில்லை. ஆனால், இடைப்பட்ட ஒருசில மதிப்பெண்கள்கூட அவர்களின் வாழ்க்கையையே திசைமாற்றிவிடுகின்றன. மாணவர்களுக்கான தேர்வு முறையால், இந்தியா, கொரியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளில்தான் அதிக இளம்வயது மரணங்கள் நிகழ்கின்றன. இந்த விஷயத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் இருப்போர், வெறும் மதிப்பெண்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கல்வி கற்று, நல்ல பணிகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அந்த நாடுகளிலும் உயர்ந்துகொண்டுதானே செல்கிறது? நம் நாட்டுக் கல்வி முறையில் சீர்செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

Representational Image

எந்த வெற்றியாக இருந்தாலும் அது கொண்டாடப்பட வேண்டியதே. ஆனால், அது பிறருக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களைப் பெரிதாகக் கொண்டாடும் போக்கு வளர்ந்த சில வெளிநாடுகளில் இருப்பதில்லை. அதேபோன்ற முறையை, இந்தியாவில் பள்ளி முதல் சிவில் சர்வீஸ் தேர்வுகள்வரை எல்லாத் தேர்வுகளிலும் அமல்படுத்தலாம். நல்ல அனுபவங்களையும் சிறந்த வேலைவாய்ப்புகளையும் பெருக்கக்கூடிய புதிய படிப்புகளையும் தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குவதுடன், அதை எல்லா தரப்பினர் மனதிலும் பதிய வைப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டிய மிக முக்கிய கடமைகளை மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோரின் பங்குதான் முக்கியமானது. அடுத்துச் சொல்வது அவர்களுக்கானதுதான்…

* படிக்கும் பள்ளியோ, கல்லூரியோ, குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளோ மட்டுமே ஒருவரின் வெற்றியைத் தீர்மானித்துவிடுவதில்லை என்பதை அனைவருமே மனதில் நன்கு பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

* `நம்ம குடும்பமே உன்னை நம்பித்தான் இருக்கு…’, `எதிர்த்த வீட்டு அங்கிளோட பிள்ளையைவிட நீ அதிகமா மார்க் வாங்கணும்…’ – இப்படியெல்லாம் சென்டிமென்ட் கட்டளைகளால் பிஞ்சு மனங்களில் ஏற்றத்தாழ்வுகளையும் நிர்பந்தங்களையும் விதைப்பது, பிள்ளைகளின் மனதில் எதிர்மறை எண்ணங்களைத்தான் குடிகொள்ளச் செய்யும்.

* ஒரு முறை வெற்றி கிடைக்காத பட்சத்தில், அடுத்தடுத்த முறை தேர்வுக்குத் தயாராகலாம். அல்லது மாற்று படிப்புகளைத் தேர்வு செய்யலாம். மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளே உயர்வானவை என்ற சிந்தனையை மாற்றி, மாற்று படிப்புகள் குறித்த விசாலமான தேடலை முன்னெடுத்து, அதையே பிள்ளைகளுக்கும் உணர்த்த வேண்டும்.

* சிறுசிறு தோல்விகள்கூட மாணவர்களுக்குக் குற்ற உணர்வையோ, கவலையையோ ஏற்படுத்தக் கூடாது. தோல்விகளை எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் உழைத்தவர்கள் மட்டுமே வெற்றியாளர்களாக மாறுகிறார்கள். இந்த நம்பிக்கையைப் பிள்ளைகளின் மனதில் வேரூன்றச் செய்ய வேண்டியது பெற்றோரின் தலையாய கடமை.

மனஅழுத்தம் (மாதிரி படம்)

`நாலு பேர் நாலு விதமா பேசுவாங்களே…’ என்ற பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நம் நாட்டினர்தான், நமக்கு எது சரியானது என்பதை மறந்து, புதுப்புது சிக்கல்களை நாமே உருவாக்கிக்கொள்கிறோம். தற்கொலை குறித்த உலகளாவிய ஆராய்ச்சியில், ஒற்றுமை தழைத்தோங்கி, எல்லா வகையிலும் நட்புடன் அன்பு பாராட்டும் குடும்பங்களில் தற்கொலை சார்ந்த சிக்கல்களே எழுவதில்லை. ஆனால், பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர் – பிள்ளை உறவுமுறை என்பது, இருநாட்டுத் தூதுவர்களைப்போலப் பட்டும் படாமலும் பேசிக்கொள்ளும் மரியாதை நிமித்தமான உரையாடலாகவோ அல்லது தோழமை இல்லாத அன்பாகவே இருக்கிறது. குறிப்பாக, பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறோம் என்பதுதான் வாழ்க்கையே தவிர, வெற்றியைச் சமாளிப்பது வாழ்க்கை அல்ல. அதற்கான திறனை வளர்த்துக்கொண்டால் தற்கொலை என்ற எண்ணமே நம்மை யாரையும் நெருங்காது” என்று கூறுபவர், இறுதியாகக் கூறுவது ஊடகங்களுக்கான பொறுப்புணர்வு பற்றியது.

வளரும் நாடுகளில் அதிகமாக நிகழும் தற்கொலைகள் நிகழ்வுகள், உலக அளவில் இந்தியாவில்தான் அதிகம் நடக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை, 2019-ம் ஆண்டில் மட்டும் நம் நாட்டில் 1,75,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சியூட்டுகிறது.

லட்சுமி விஜயகுமார்

“பதற்றத்தை உண்டாக்கும் வகையில் ஒரு தற்கொலைச் செய்தியைக் காட்சிப்படுத்தினால், அடுத்த இரண்டு வாரங்களில் அதே மாதிரியான சூழலில் 13 சதவிகித தற்கொலைகள் அதிகரிக்கும் என்கிறது முக்கியமான புள்ளி விவரம் ஒன்று. கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் மரணம் என்பதுபோன்ற செய்திகள் அவ்வப்போது மீடியாக்களில் தலைப்புச் செய்திகளாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த விஷயம் சிலரின் மனதில் எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்கும். பொதுவாக எந்த ஒரு தற்கொலையைச் செய்தியாக இருந்தாலும், அவர்கள் எப்படி இந்தத் துயர முடிவைத் தேடிக்கொண்டனர் என்பதை விரிவாகக் கூறவே கூடாது.

மாறாக, மரணத்துக்கான சரியான காரணம், சம்பந்தப்பட்டவர்கள் எத்தகைய தீர்வுகளைத் தேடியிருக்கலாம், அவர்களின் இழப்பால் அந்தக் குடும்பத்தில் நேரும் சிக்கல்கள், எதிர்மறை எண்ணங்களில் இருப்போர் கவுன்சலிங் செல்வதற்கான விவரங்கள் என விரிவாக எழுதி, அதுபோன்ற தவறான எண்ணத்துடன் இருப்பவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளும் வகையில்தான் அதுகுறித்த செய்தியை வெளியிட வேண்டும். இதுபோல விரிவாக எழுத முடியாவிட்டால், அந்தச் செய்தியைக் காட்சிப்படுத்தாமல் இருப்பதே நல்லதாக அமையும். இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கமும் இதைத்தான் வலியுறுத்துகிறது. எனவே, தற்கொலை குறித்த எந்தச் செய்தியாக இருந்தாலும், அதை அச்சமூட்டும் விவாதமாக மாற்றக் கூடாது” என்று அக்கறையுடன் முடித்தார் மருத்துவர் லட்சுமி.

மனஅழுத்தம் (மாதிரி படம்)

மன வருத்தங்களுக்குத் தீர்வாக நம்மில் சிலர் எடுக்கத் துணியும் தவறான முடிவுகள், நம்மைச் சார்ந்தோருக்கு என்றென்றும் அகலாத வேதனையை மடைமாற்றிச் செல்லவே வழிவகுக்கும். எனவே, எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடைத்துப் பேசுவோம், தீர்வைப் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கட்டமைப்போம்.

தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள் :

தற்கொலைத் தடுப்பு மையம் – 104

சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் – 044 – 24640050, 28352345.

பெண்களுக்கான தீர்வு மையம் – 1091

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.