மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய அளவில் இன்று முதல் எதிர்க்கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளன. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
கடந்த மாதம் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தன. அதன்படி, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும் திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சிகள் இன்று கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
திமுகவினரும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தங்களது இல்லம் முன், கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல், செல்போன்கள் உளவுபார்க்கப்பட்ட புகார் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து நாட்டின் பிற பகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் இன்று பல்வேறு வகையிலான போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன.