கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்ற ஐபிஎல் தொடரில், 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. முதல் பாதி ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த வேளையில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் இருந்த பயோ பபுளையும் மீறி கொரோனாவால் வீரர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. இச்சூழ்நிலையில், 2-வது பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு, போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
 
ஐபிஎல் தொடரில் ரசிகர்களால் பரம எதிரிகளாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணியின் வீரர்களும் துபாயில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
 
image
சென்னை அணியைப் பொருத்தவரையில், நட்சத்திர வீரர் டூபிளசி காயமடைந்துள்ள நிலையில் அவர் முதல் போட்டியில் பங்கேற்பாரா என சந்தேகம் எழுந்துள்ளது. கரீபியன் பிரீமியர் லீக் தொடரில், விளையாடிய டூபிளசி காயம் காரணமாக கடைசி 3 போட்டிகளில் விளையாடவில்லை. அவருக்குப் பதில், ரூத்துராஜ் கெய்க்வாட்டுடன், ராபின் உத்தப்பா களம் இறங்குவார் எனத் தெரிகிறது. இதேபோல இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் ஆல் ரவுண்டர் சாம் கரண் புதன்கிழமை துபாய் வந்து சேர்ந்ததால், 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார். இதனிடையே பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் தல தோனி, அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கும் வீடியோவை, ஆல் ஏரியாவிலும் தல என பதிவிட்டுள்ளது.
 
மறுபக்கத்தில், நடப்பு சாம்பியனான மும்பை அணி தனது அசுர பலத்தோடு களம் காண காத்திருக்கிறது. கேப்டன் ரோஹித் சர்மா, பும்ரா, டி காக், பொல்லார்டு மற்றும் இளம் வீரர்கள் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சமீப காலங்களில் சரியாக விளையாடாத ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் “பார்ம்” மட்டுமே மும்பை அணியை பொறுத்தவரையில் கவலைக்குரியதாக உள்ளது.
 
இதுவரை 30 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், புள்ளிகள் பட்டியலில் டெல்லி முதலிடத்திலும், சென்னை 2-வது இடத்திலும் உள்ளது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 3-வது இடத்திலும், மும்பை நான்காவது இடத்திலும் உள்ளன. வருகிற 27 நாட்களில், 31 ஆட்டங்கள் நடைபெறவிருக்கும் நிலையில், போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகின்றன.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.