வருமான வரித்துறையினர் ஏற்கெனவே கடந்த 2020, அக்டோபர் மாதம் இளவரசி, சுதாகரன் பெயர்களில் இருந்த சிறுதாவூர் பங்களா உள்ளிட்ட சொத்துகளை முடக்கியிருந்தார்கள். இந்தநிலையில்தான் செப்டம்பர் 15-ம் தேதி சிறுதாவூர் ஏரியாவில் சுதாகாரனுக்குச் சொந்தமாக இருந்த மேலும் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள சில சொத்துகளை பினாமிகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கியிருக்கிறார்கள். தொடர்ச்சியாக சசிகலா தரப்புக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதால், பிரச்னைகளைச் சரிசெய்ய முருகக்கடவுள் பெயர்கொண்டவர் மூலமாக டெல்லி மேலிடத்தில் பேசினார்களாம்.

சசிகலா

ஆனால், டெல்லி மேலிடமோ, “சசிகலா அரசியலுக்கு வர வேண்டாம் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேனே… மீண்டும் ஏன் என்ட்ரி கொடுக்கப் பார்க்கிறார்?” என்று சீறியதாம். இதனால் சசிகலாவும் கடும் அப்செட் என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தில்!

Also Read: மிஸ்டர் கழுகு: உதயநிதி அப்செட்… நள்ளிரவில் ஏர்போர்ட் விரைந்த ஸ்டாலின்!

கடந்த தி.மு.க ஆட்சியின்போது கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடம், 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அப்போது அங்கிருந்த புதிய தலைமைச் செயலகம் திறக்கப்பட்டது குறித்த கல்வெட்டும் அகற்றப்பட்டது. பத்தாண்டுகள் கழித்து தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், கடந்த ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்தநாளன்று ‘கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மருத்துவமனை கட்டப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

கல்வெட்டு

அப்போதே ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மீண்டும் தலைமைச் செயலகம் அமைக்க தி.மு.க அரசு முயல்வதாகச் செய்திகள் கிளம்பின. இந்தநிலையில்தான் சமீபத்தில் மீண்டும் அந்தக் கல்வெட்டு, ஓமந்தூரார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, `புதிய தலைமைச் செயலகத்தை இங்கு அமைக்கலாமா… எதிர்க்கட்சியினர், மக்களின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கிறது என்பதை பல்ஸ் பார்க்கவே சத்தமில்லாமல் கல்வெட்டை மருத்துவமனையில் வைத்திருக்கிறது ஆளும் அரசு’ என்கிறார்கள் விவரமறிந்த அதிகாரிகள்!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 1,097 அரசு கால்நடை மருத்துவர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நியமன விவகாரத்தில் பணி ஆணை வழங்க அப்போதைய துறை சம்பந்தப்பட்ட பிரமுகர்கள் லஞ்சம் கேட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிலர் வழக்கு தொடர அந்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில்தான் தற்போது பணம் கொடுத்த பலரும், ‘அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் வாங்கிக் கொடுங்க… இல்லைன்னா பணத்தை திருப்பிக் கொடுங்க’ என்று ‘மாஜி’ ஒருவரை நெருக்கிவருகிறார்களாம்.

லஞ்சம்

இதையடுத்து, மாஜி இப்போதைய துறை பிரமுகரிடம், “வாங்குனதுல பாதியைக் கொடுத்துடறோம். எப்படியாச்சும் போஸ்ட்டிங் போட்டுக் கொடுத்துடுங்க…” என்று தூதுவிட்டாராம். இதுவரை பதில் ஏதும் வரவில்லை என்கிறார்கள்!

Also Read: பன்னீரின் மணிமண்டபக் கோரிக்கை முதல் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதிய கட்சி நிர்வாகி வரை! -கழுகார் அப்டேட்ஸ்

திருப்பூர் மாவட்ட அமைச்சரான சாமிநாதன் சைலன்ட்டாக வலம்வந்தாலும், அவருடன் நெருக்கமாக வலம்வரும் உடன்பிறப்புகளின் ஆட்டம் ஓவராக இருக்கிறதாம். சாமிநாதனின் நிழலாக வலம்வரும் ‘வடக்கு’ நபரிடம் பேரம் பேசிய ‘மாணவர்’ பிரமுகர், சமீபத்தில் கணிசமான டாஸ்மாக் பார்களை தனது கன்ட்ரோலில் எடுத்துவிட்டார்.

வெள்ளக்கோவில் சாமிநாதன்

இந்த டீலிங்கில் அமைச்சர் பெயரைச் சொல்லி பெரிய ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை வாங்கிவிட்டாராம் வடக்கு பிரமுகர். இதெல்லாம் அமைச்சர் சாமிநாதனுக்குத் தெரியுமா என்று புலம்புகிறார்கள் உள்ளூர் தி.மு.க தொண்டர்கள்!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளருமான கே.வி.ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்திவிக்கு சமீபத்தில் ஈரோட்டில் திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவும் கலந்துகொண்டு மேடையேறி மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்.

என்.கே.கே.பி.ராஜா

இதையடுத்து, “தி.மு.க-வில் ஓரங்கட்டப்பட்டதிலிருந்தே வெளியே தலைகாட்டாமல் இருந்த ராஜா, அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் குடும்ப நிகழ்ச்சிக்கு வந்தது எப்படி?” என்று சென்னையிலிருந்து வந்த கரைவேட்டிகள் சிலர் ஆச்சர்யப்பட்டார்கள். அதற்கு பதிலளித்த கொங்கு மண்டல கரைவேட்டிகளோ, “இதெல்லாம் ஒண்ணும் புதுசு இல்லை… போன வருஷம்கூட ஈரோடு அய்யம்பாளையம் கவர்மென்ட் ஸ்கூல்ல நடந்த பூமி பூஜையில் அப்போதைய அமைச்சர்களான செங்கோட்டையன், கருப்பணன்கூட நிண்ணு இதே ராஜா அண்ணன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். பெரிய சர்ச்சையெல்லாம் ஆனது. ஆனா, ராஜா எதையும் கண்டுக்கலை. கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரைக்கும் தி.மு.க., அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் மாமன், மச்சான்னுதான் இருக்காங்க” என்று விளக்கம் அளித்திருக்கிறார்கள்!

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும், நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணனுக்கும் சில விஷயங்களில் ஒத்துப்போகாததால், நிதித்துறைச் செயலாளர் வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என்கிற பேச்சு கோட்டை வட்டாரத்தில் எழுந்திருக்கிறது. இதையடுத்து, கிருஷ்ணன் மெட்ரோ ரயில் துறையைக் கேட்டிருக்கிறாராம்.

தலைமைச் செயலகம்

நிதித்துறைச் செயலாளர் பதவிக்கு தற்போதைய தொழில்துறைச் செயலாளர் முருகானந்தத்தை நியமிக்க பரிசீலித்துவருகிறார்கள். தொழிற்துறைச் செயலாளர் பதவிக்கு தற்போதைய மெட்ரோ ரயில்துறை தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரதீப் யாதவை அமர்த்தலாம் என்றும் ஆளும்தரப்பில் பேசப்படுகிறது. நிதித்துறை மட்டுமல்ல… பல்வேறு துறைகளிலும் அமைச்சர்களுடன் ஒத்துபோகாத 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றப்படலாம் என்கிறது கோட்டை வட்டாரம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.