நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் என, இந்தியாவில் தொட்ட குறை விட்ட குறையாக, பாதியில் நின்ற 2021 ஐபிஎல்லின் அடுத்த பாகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் தொடர இருக்கிறது.

முந்தைய மோதல்கள்

மும்பை வெர்சஸ் சிஎஸ்கே யுத்தத்தில் இதுவரை, 19 முறை மும்பையும், 12 முறை சிஎஸ்கேயும் வெற்றி பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக, 2019-க்குப் பின் நடந்த போட்டிகளில், ஏழு போட்டிகளில் ஆறில் வென்று, மும்பையின் கரமே ஓங்கியுள்ளது. தற்போதைய சீசனின் முந்தைய சந்திப்பில், பொல்லார்டின் 34 பந்துகளில், 87 ரன்கள் என்னும் அனல் பறந்த ஆட்டத்தால், மும்பை அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் இதுவரை

இந்த சீசனின் முதல் பாகத்தில் சிஎஸ்கே 2020-ன் வலிகளை எல்லாம் மறக்கடிக்குமளவு, விளையாடிய ஏழு போட்டிகளில் ஐந்தில் வென்றிருந்தது. அதிலும், சிஎஸ்கேயின் நெட் ரன் ரேட்டிற்கு அருகில்கூட எந்த அணியாலும் நெருங்க முடியவில்லை. மும்பைக்கோ சென்னையில் நடந்த போட்டிகள் அவர்களுடைய வழக்கமான அதிரடி பாணிக்குக் கை கொடுக்காதுபோக, அவர்கள் ஆட்டத்தின் காட்டம் சற்றே குறைந்திருக்க, ஏழு போட்டிகளில் நான்கில் வென்றிருந்தது. சிஎஸ்கேயும், மும்பையும் தற்போதைய நிலையில் புள்ளிப் பட்டியலில் முறையே இரண்டு மற்றும் நான்காவது இடத்தில் இருக்கின்றன.

Ruturaj

சிஎஸ்கே ஓப்பனர்கள்

2020-ம் ஆண்டு, சிஎஸ்கேவுக்கு பெரிய தலைவலியாக அமைந்தது அவர்களுடைய ஓப்பனிங் குறைபாடு. பவர்பிளே ஓவர்களை சரியாகக் கையாளாததால் பல போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது சிஎஸ்கே. அந்த சோகக் கதையை இந்த சீசனின் முந்தைய போட்டிகளில் மாற்றி எழுதியது டு ப்ளஸ்ஸிஸ் – கெய்க்வாட் கூட்டணி. குறிப்பாக, டு ப்ளஸ்ஸிஸிடமிருந்து மிகச் சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது. இந்நிலையில், டு ப்ளஸ்ஸிஸ் காயத்தால் இப்போட்டியில் ஆடுவாரா என்ற குழப்பம் இன்னமும் நீடிக்கிறது. அப்படி விளையாடாமல் போனால், அது சிஎஸ்கேவுக்குப் பலத்த பின்னடைவாக அமையும். அதே நேரத்தில், அந்த இடத்தில் தோனி யாரை இறக்குவார் என்ற ஆவலோடு, அந்த வாய்ப்பு கடந்த டிஎன்பிஎல்லைக் கலங்கடித்த ஜெகதீசனுக்கா அல்லது உத்தப்பாவுக்கா என்ற விவாதங்களுக்கும் வழி ஏற்படுத்தியுள்ளது.

ரெய்னா – தோனி

பல சீசன்களாக இக்கட்டிலிருந்து அணியை மீட்டெடுத்த பெருமை இந்த இருவரையும் சாரும். ஒரு பிரேக்கிற்குப் பிறகு அணிக்குத் திரும்பிய ரெய்னாவின் மேல் கூடுதலான எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு இந்த சீசனில் ஓரிரு போட்டிகளில் மட்டுமே நியாயம் கற்பித்திருந்தார் ரெய்னா. ஏழு போட்டிகளில் 24.60 சராசரியோடு, 123 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார் ரெய்னா. மிஸ்டர் ஐபிஎல் மீதமுள்ள போட்டிகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்பதுவும் அணியின் வெற்றியை நிர்ணயிக்கும் அதிமுக்கிய காரணியாகும். தோனியைப் பொறுத்தவரை, அவரை பேட்ஸ்மேனாக மட்டுமே சிஎஸ்கே பார்க்கவில்லை என்றாலும், வின்டேஜ் தோனியைப் பார்க்க ரசிகர்களின் கண்கள் தவமிருக்கின்றன. தனது அணி வீரர்களுடனான பயிற்சிப் போட்டியில் தோனி சிறப்பாக ஆடினார் என்னும் செய்திகள் அவர்களது கண்களை மிளிர வைத்துள்ளன.

ரெய்னா

பலமே பேட்டிங்தான்

சிஎஸ்கேயைப் பொறுத்தவரை, இறுதிவரை நீளும், அவர்களது பேட்டிங் லைன் அப்தான் அவர்களது மிகப் பெரிய பலமே. தாக்கூர் மற்றும் சஹாரும் கூட, சமீப காலங்களில் தங்களது பேட்டிங் திறமையை நிரூபித்து இறுதிவரை மும்பை பௌலர்களுக்கு வேலை இருக்கும் என்பதைப் புரிய வைத்து உள்ளனர். இந்த சீசனின் முந்தைய போட்டிகளிலேயே, இதனை வெளிப்படையாகவே காண முடிந்தது. ஒருவர் ஆட்டமிழந்தாலும், அடுத்த வந்தவர்கள், அடுத்தடுத்து ஆள் உள்ளது என்னும் துணிவில் அஞ்சாமல் அடித்து ஆடினர். சாம் கரண் முதல் போட்டியில் ஆட மாட்டார் என்றாலும், அது சிஎஸ்கேவிற்குப் பெரிய பின்னடைவல்ல எனும் அளவிற்கு அவர்களின் பேட்டிங் பலமானதாக உள்ளது.

மும்பை பௌலிங் படை

பௌலர்களின் சாம்ராஜ்யம்

மும்பையைப் பொறுத்தவரை, அவர்களது டெத் பௌலிங்தான் எதிரணியை நிலைகுலைய வைக்கும் ஆயுதம் என்றாலும், போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் அம்சங்களும் அவர்களது பௌலர்களின் கைவசம் உள்ளன. மும்பையின் வெற்றி வார்ப்புகளான பும்ரா மற்றும் டிரெண்ட் போல்ட் வழக்கம் போலவே அதிரடி காட்டக் காத்திருக்க, ஆடம் மில்னியின் சமீபத்திய வெற்றிகரமான ‘பிக் பாஷ் லீக்’ மற்றும் ‘தி ஹன்டிரட்’ பெர்ஃபார்மன்ஸுகளும், ரோஹித்துக்கு நிறையவே சாய்ஸுகள் இருப்பதைக் காட்டுகின்றன. போதாக்குறைக்கு, ஹர்திக், பௌலிங்கும் செய்யலாம் என்பது அணிக்கு மேலும் வலு சேர்க்கிறது. ராகுல் சாஹர் அணிக்கான அசையும் சொத்தாக இந்த சீசனில் உருவெடுத்திருக்க, “நானிருக்கிறேன்”, என குர்ணால் பாண்டியாவும் தன் பங்கிற்கு வருவார் என்பதால், முழுவதுமாக லோட் செய்யப்பட்ட துப்பாக்கியாக நீள்கிறது அவர்களது பௌலிங் கன்.

சச்சின் வருகை

பேட்டிங் கோச்சான மைக் ஹசி இல்லாதது, சிஎஸ்கேவுக்கு சற்றே பலம் குன்றச் செய்கிறதென்றால், அதற்கு நேர்மாறாக, மெண்டராக சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியோடு கை கோத்திருப்பதால், அவர்களது பக்கம் வலிமை கண்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் கழித்து, அணியுடன் இணைந்திருக்கும் சச்சின், அணிக்கு புதுப் பொலிவு சேர்த்திருக்கிறார்.

சச்சின்

ஸ்பின்னா, வேகப் பந்துவீச்சா?!

அரபு மைதானம், சுழல்பந்துகளுக்கு ஆதரவளிக்கும் என்ற கருத்து நிலவினாலும், 2020 சீசனில் விழுந்த விக்கெட்டுகளில், கிட்டத்தட்ட 50 சதவிகிதத்திற்கும் அதிகமான விக்கெட்டுகள் வேகப்பந்து வீச்சாளர்களாலேயே விழுந்திருக்கிறது. எனவே வீரர்களின் தேர்வில் இதுவும் கூடுதல் கவனம் பெறும். இதையும் தாண்டி, முதல் போட்டி என்பதால் விக்கெட் எப்படி இருக்கப் போகிறது, பனிப் பொழிவு எந்தளவிற்கு மாற்றம் கொண்டு வரும் என பல கேள்விகளோடே இப்போட்டி நடைபெற உள்ளது.

நான்கு ஸ்லாட்களில் யார் யார்!?

மும்பையைப் பொறுத்தவரை, சந்தேகமே இல்லாமல் க்விண்டன் டி காக், பொல்லார்ட், போல்ட் ஆகியோரின் இடங்கள் உறுதிசெய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள ஓரிடம் கூல்டர் நைலுக்கோ, ஆடம் மில்னிக்கோ இருக்கலாம். சிஎஸ்கேவைப் பொறுத்தவரை, மொயின் அலி மற்றும் பிராவோ இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இரண்டில் ஓரிடம் நிகிடிக்கோ, ஹாசில்வுட்டுக்கோ கிடைக்கலாம். இந்த சீசனின் முந்தைய போட்டிகளில், நிகிடியின் பந்துகள் ரொம்பவே அடிவாங்கின. இதைக் கருத்தில் கொண்டால் ஹாசில்வுட்டுக்கே வாய்ப்பு பிரகாசிக்கிறது. ஒருவேளை, டு ப்ளஸ்ஸிஸ் களமிறங்க முடியாமல் போனால், அச்சூழ்நிலையில், இந்திய ஓப்பனர்களைக் களமிறக்கி, இம்ரான் தாஹீரையும் சேர்த்துக் களமிறக்கும் சுவாரஸ்யமான முடிவை, தோனி எடுக்கக் கூடும்.

சிஎஸ்கே வீரர்கள் | IPL 2021

சென்னை டு அரபு எமிரேட்ஸ்

பிஞ்ச் ஹிட்டர்களின் பெரிய கூடாரமான மும்பை அணி, பல போட்டிகளில் வான்கடே மைதானத்தில், அவர்களின் உதவியாலே வெற்றி வாகை சூடிப் பழக்கப்பட்டது. அத்தகைய அணியை இந்த சீசனின் முதல் பகுதியில் சென்னை மைதானம் நிரம்பவே சோதித்தது. அங்கிருந்து அரபு மைதானத்துக்கு மாற்றல் வாங்கியுள்ள போட்டிகள் மும்பையின் பவர் ஹிட்டர்களுக்கான வாயிலை அகலமாக்கி உள்ளன. இது பொல்லார்ட், சூர்யக் குமார் யாதவ் போன்றோருக்கு ஆகச்சிறந்த அனுகூலத்தை அளிக்கலாம். அதே நேரத்தில், கடந்த வருடம் அரபு மைதானம் சிஎஸ்கேவிற்கு ஆறாத வடுவைத் தந்தது நினைவில் நிழலாடுவதால், இந்த சீசனில் அது எந்தத் திசையில் பயணிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மொயின் அலி

சிஎஸ்கேவுக்கு எதிர்பாராமல் கிடைத்த பொக்கிஷம் என்றே மொயின் அலியைக் குறிப்பிட வேண்டும். தொடக்க ஓவர்களில், டு பிளஸ்ஸிஸ், கெய்க்வாட் ஆட்டத்தை அற்பதமாகத் தொடங்கி வைத்தால் அதைச் சிறப்பாக முன்னோக்கி எடுத்துச் சென்று, பல போட்டிகளில் முடித்து வைத்தார் மொயின் அலி. அவரை ஏன் ஏலத்தில் எடுத்தனர் என்ற அத்தனை கேள்விகளுக்கும், அது தோனியின் ஸ்மார்டான நகர்வுகளில் ஒன்று என்பதனை 157 ஸ்ட்ரைக்ரேட்டில் வந்து சேர்ந்திருந்த அவரது 206 ரன்களும், வெறும் 6.16 எக்கானமியோடு வந்து சேர்ந்திருந்த ஐந்து விக்கெட்டுகளும் புரிய வைத்தன. இப்போட்டியிலும், அவரது பங்களிப்பு தொடரும் என எதிர்பார்க்கலாம்.

மொயின் அலி

டெத் பௌலர் எங்கே?!

மணிக்கு 145 கிமீ வேகத்தில் பந்து வீசும் ஒரு மிரட்டல் பீரங்கி, சிஎஸ்கேயின் வசம் இல்லை என்பது ஒரு பெரிய குறையாகவே பார்க்கப்படுகிறது. அதை இருக்கும் வீரர்களைக் கொண்டு, சிஎஸ்கே சரிக்கட்ட முனைந்தாலும், அரபு மைதானத்தில் அப்படி ஒரு வீரரின் தேவை சற்றே அதிகம் என்பதால், இதனை எப்படி சிஎஸ்கே சமாளிக்கும் என்பதை பொருத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.

ரசிகர்களுக்கு அனுமதி

கொரோனா பெருந்தொற்றால், கடந்த 89 ஐபிஎல் போட்டிகள், ரசிகர்கள் இன்றி, களம் கண்டன. இந்நிலையில், இப்போட்டியைப் பார்க்க, குறைந்த அளவிலான ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்கி உள்ளது.

CSK | IPL 2021

வெற்றி ஒருவருக்குத்தான் என்றாலும், விளையாடும் இரு அணிகள், சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் என்னும் பட்சத்தில், அது கயிறு இழுக்கும் போட்டியாக ஆட்டத்தை இருபக்கமும் மாறி மாறிச் செல்ல வைக்கும் என்பதுதானே, கடந்த கால வரலாறுகள் சொல்லும் சிறுகதைகள்?!

எனவே முதல் போட்டியே கடைசிப் பந்து வரையோ, சூப்பர் ஓவர் வரையோ கூட நீளலாம்! ஞாயிற்றுக்கிழமைக்கு இதை விட சுவை சேர்க்க வேறு என்ன தேவை?! காத்திருந்து கண்டு களிப்போம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.