நமது நாட்டில் கோவிட் பாதிப்பு குறைந்து கட்டுக்குள் இருந்தாலும், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இன்னும் பாதிப்பு குறையவில்லை. கேரளாவில் கொரோனா பாதிப்போடு சில இடங்களில் நிபா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டு மக்களை பயமுறுத்தி வருகிறது.

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கோவிட் பரவிவிடாமல் எப்படி முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமோ அதே அளவுக்கு நிபா வைரஸும் பரவாமல் தடுக்க வேண்டும்; முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதைத் தமிழக அரசு முனைப்புடன் செய்து வருகிறது.

தொடக்கம்

1999 ஆண்டுவாக்கில், மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பன்றிகளுக்கும் மக்களுக்கும் புதிய வைரஸ் நோய் பரவியது. ஆய்வில், அது நிபா வைரஸ் தொற்று என்று கண்டறியப்பட்டது. அப்போது, 100-க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தியது. நோயைத் தடுக்க 10 லட்சத்துக்கும் அதிகமான பன்றிகளும் கொல்லப்பட்டன.

அதன் பிறகு, நமது நாட்டிலும் வங்கதேசத்திலும் இந்த நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு பலரும் இறந்தார்கள். 2018-ம் ஆண்டில், கேரளாவில் இந்தத் தொற்று ஏற்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், பல ஆசிய நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவர் முத்துச்செல்லக்குமார்

எப்படிப் பரவுகிறது?

பழம் தின்னும் வெளவால்களின் உடலில் இந்த வைரஸ் இருக்கும். இது ஹெனிபா வகை வைரஸாகும். அவற்றில் இருந்து பன்றிகள், குதிரை, ஆடு, பூனை, நாய் போன்ற பிற விலங்குகளுக்கும் வைரஸ் பரவும். ஆகவே, இந்த விலங்குகளைக் கையாளும் நபர்களுக்குத் தொற்று ஏற்படும் அல்லது இந்த விலங்குகளின் ரத்தம், சிறுநீர் அல்லது உமிழ்நீர் போன்ற உடல் திரவங்கள் பட்ட உணவுகளை உட்கொள்வதால் இந்த வைரஸ் பரவிவிடும்.

பதநீரில் வெளவால்களின் சிறுநீர் அல்லது உமிழ்நீர் கலக்க வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், வெளவால்கள் கடித்த பழங்களை உண்பவர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படும். நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிப் பழகும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இதேபோன்றே உடல் திரவங்களால் நோய் ஏற்பட்டுவிடும்.

நிபா அறிகுறிகள்

நிபா வைரஸ் உடலில் நுழைந்த இரு வாரங்களுக்குள் (4 – 14 நாள்கள்) நோய் அறிகுறிகள் தென்படும். சிலருக்கு அறிகுறிகள் தெரியாமலும் இருக்கலாம்.

தொடக்கத்தில், பாதிக்கப்பட்டவருக்கு இருமல், காய்ச்சல், தொண்டைவலி, தலைவலி, வாந்தி என பொதுவான அறிகுறிகள் இருக்கும். ஆனால், இவற்றைத் தொடர்ந்து நோயாளிக்கு சுவாசிப்பதில் சிரமம், வலிப்பு, குழப்பம், தன்னிலை இழந்து பிதற்றுதல், வாய் குழறுதல் ஆகிய மோசமான அறிகுறிகள் தோன்றும். இந்த வைரஸால் மூளை அழற்சி உண்டாகிவிட்டது; மூளை பாதிக்கப்பட்டுவிட்டது என்பதற்கான அறிகுறிகள் இவை.

இதைத் தொடர்ந்து மயக்கம் ஏற்பட்டு, கோமா நிலைக்குச் சென்று நோயாளி இறந்துவிடலாம். தொற்று ஏற்பட்ட இடத்தையும், அங்கு செய்யப்படும் மருத்துவ நடவடிக்கைகளையும் பொறுத்து, இறப்பு விகிதம் 40 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை அமையலாம்.

Patient at Hospital (Representational Image)

Also Read: நிபா வைரஸ்: `தரையில் கிடக்கும் ரம்புட்டான் பழங்களைச் சாப்பிட வேண்டாம்!’ – கேரள அரசு அறிவுறுத்தல்

பரிசோதனைகள்

பாதிக்கப்பட்டவரின் உடல் திரவங்களில், ஆர்டி-பிசிஆர் மற்றும் எலீசா பரிசோதனைகள் செய்வதன் மூலம் இந்த வைரஸ் தொற்றைக் கண்டறிய முடியும்.

சிகிச்சைகள்

நிபா வைரஸை அழிப்பதற்கான மருந்துகள் தற்போதுவரை கண்டறியப்படவில்லை.

அறிகுறிகளுக்கான சிகிச்சைகளும், உடலைப் பராமரிக்க, உயிரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான தீவிர சிகிச்சைகளும் மட்டுமே அளிக்கப்படுகின்றன.

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவரைத் தனி வார்டில் வைத்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

தடுப்பு முறைகள்

நிபா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, அனைத்து மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் என அனைவரும் முழு பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும்.

இந்த வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆகவே, தொற்று ஏற்படாமல் தடுப்பது, தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவைதான், இந்த வைரஸ் நோயின் பிடியில் இருந்து மக்களைக் காப்பதற்கான ஒரே வழி!

நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த உறவினர்கள், நண்பர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர்களது உடல் திரவ மாதிரிகளை புனேயில் உள்ள வைரஸ் தொற்று பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்.

மேலும், இந்த வைரஸுக்கான நோய் அறிகுறிகள் உள்ளவர்களையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளை அழிக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. பாதிக்கப்பட்ட விலங்குகளை அப்புறப்படுத்தும்போதும், கொல்லும்போதும் முழுப் பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நிபா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

Bats (Representational Image)

பொதுவான தடுப்பு முறைகள்

கேரளா போன்ற மாநிலங்களில், பழம் தின்னும் வெளவால்களின் சூழலியல் பற்றிய ஆராய்ச்சி மிகவும் அவசியமாகும். அவற்றிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதைப் புரிந்துகொள்ள ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

மனிதர்களைப்போல பன்றி உள்ளிட்ட விலங்குகளுக்கும் தொற்று பரவுகிறதா என்பதையும் கண்டறிய வேண்டும்.
நோய்வாய்ப்பட்ட வெளவால்கள் மற்றும் பன்றிகளைத் தொடக் கூடாது. மரத்திலிருந்து கீழே விழுந்த பழங்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கடிபட்ட பழமாக இருந்தால் அதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

சிலர், அணில் கடித்த பழம், கிளி கொத்திய பழம், வண்டு விழுந்த பழம் சுவையாக இருக்கும் என்று சாப்பிடுவார்கள். கிளி, அணில், குரங்கு, வெளவால் என எதுவும் அந்தப் பழங்களைக் கடித்திருக்கலாம். அதனால் அத்தகைய பழங்களைத் தவிர்ப்பது நல்லது.

வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, பேரீச்சப்பழம், ரம்புட்டான் என வெளவால்கள் பல பழங்களையும், மலர்களையும், இலைகளையும்கூட தின்னக்கூடியவை. மலர்களில் இருந்து இனிப்பு நீரையும் குடிக்கும். ஆகவே, கடைகளில் பழங்கள் வாங்குவதாக இருந்தாலும், நன்றாகப் பார்த்து வாங்க வேண்டும்.

ரம்புட்டான் பழம்

Also Read: கொரோனா வைரஸ் உருமாற்றம்: ஏன் இந்த வைரஸ் மட்டும் நமக்கு சவாலாக இருக்கிறது?

பல் பதிந்த, துளை விழுந்த, கோடுகள் கீறல்கள் நிறைந்த, ஓட்டை உள்ள, சிதைந்த, கடிபட்ட பழங்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும். வீட்டுக்குக் கொண்டுவந்த பிறகு, பழங்களை நீரில் நன்கு சுத்தம் செய்த பிறகே உண்ண வேண்டும். திறந்த நிலையில் விற்கப்படும் பதநீர், கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பழக் கடைகள், பழச்சாறு விற்கும் கடைகள் ஆகிய இடங்களில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுசெய்து, அங்குள்ள பழங்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து விலகி இருக்க வேண்டும். நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், நோய் பரவாமல் தடுக்கவும் சுகாதார நெறிமுறைகளை முறையாகச் செயல்படுத்த வேண்டும். வெளவால்கள் அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

– பேராசிரியர், மருத்துவர் முத்துச் செல்லக்குமார்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.