சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலையில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரி அங்குள்ள 91 ஏக்கர் அரசு நிலத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளதாக நடந்த வழக்கு விசாரணையில், செங்கல்பட்டு நீதிமன்றம் நிலத்தை மீட்க அரசுக்கு உத்தரவிட்டதையடுத்து அந்த நிலம் அரசால் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலத்தை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ், சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

Also Read: 2 ஆண்டுகளில் ‘3103 ஏக்கர்’ கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன – அறநிலையத்துறை அமைச்சர் பதில்

இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியிருப்பதாவது,” தமிழக அரசுக்கு சொந்தமான 91 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்து. இந்த நிலத்தின் மீதான வழக்கில் நீண்டநாள் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அரசுக்கு சாதகமான தீர்ப்பை செங்கல்பட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது. ரூ. 2,000 கோடி மதிப்பிலான 91 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் மீட்கப்படும். அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்களைக் கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு நேர்மையாக உள்ளது என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு சான்று. சென்னையை சுற்றியுள்ள அதிகமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் விரைவில் மீட்கப்படும்” என்றார்.

இதுகுறித்து சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷிடம் பேசினோம், ” 20 வருடங்களாக இந்த நிலத்தை தனியார் கல்லூரி தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அந்த இடத்தை கல்லூரி, சீவேஜ் ப்ளான்ட் என தங்கள் வசதிக்காக பயன்படுத்திவந்தனர். இந்த வழக்கு 13 வருடங்களுக்கு மேலாக நடந்துவருகிறது. இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவும் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். நானும் நடந்து முடிந்த சட்டமன்றக்கூட்டத்தொடரில் இந்த நில ஆக்கிரமிப்பு குறித்து பேசியிருந்தேன். அரசு இந்த நிலத்தை மீட்டெடுத்து மக்களுக்குப் பயன்படும் வகையில் ஒருகிணைந்த அரசு கட்டிடங்கள், மருத்துவமனை, விளையாட்டுத் திடல் உள்ளிட்டவை அமைத்துத் தரவேண்டுமென கோரிக்கை வைத்தேன். தற்போது நீதிமன்றத் தீர்ப்பும் வந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல சோழிங்கநல்லூரில் 4 ஏக்கர் அளவில் மற்றொரு நிலமும் தனியார் கல்லூரியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்தும் அமைச்சர்களிடத்தில் தெரிவித்துள்ளேன்.” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.