முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 13-ம் நாள் தொடங்கிய கூட்டத்தொடரில் 2021-22ம் ஆண்டுக்கான முதல் காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதேபோல், ஆகஸ்ட் 14-ம் நாள் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முதல்முறையாக தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 23 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர், அரசுத் துறைகளின் பட்ஜெட் மீதான விவாதம், திட்டங்கள், தீர்மானங்கள் என கடந்து, செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது.

பட்ஜெட் : முதல்வர் ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பி.டி.ஆர்

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றபின் நடந்த முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர் தலைமையில் வெளியிடப்பட்ட டாப் 10 அறிவிப்புகளைப் பற்றி இங்கு காண்போம்!

1). பெட்ரோல் விலையில் ரூ.3 குறைப்பு :

ஸ்டாலின் தனது முதல் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில அரசு வரியில் 3 ரூபாய் குறைக்க ஆணையிட்டார். இந்த வரி குறைப்பால் ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றாலும், உழைக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும் என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்தார். நாடுமுழுவதும் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 -ஐ தாண்டி விற்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பெட்ரோல்

2). மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி:

கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட ரூ.2,756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், கூட்டுறவு சங்கங்கள் கடன் கொடுப்பதற்கு ஏதுவாக, 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு கட்டங்களில் நிதி வழங்கும் நடைமுறையை அரசு வகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது மகளிர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மாஸ்க் தயாரிப்புப் பணியில் மகளிர் சுய உதவி குழுவினர்கள்

3). வேளாண் பட்ஜெட் :

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக வேளாண் துறைக்கென்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும்படி புதிதாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம், பாரம்பரிய நெல் உற்பத்தி, பனை பாதுகாப்பு, தோட்டக்கலைக் கல்லூரி, புதிய உழவர் சந்தைகள் என பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் சார்பாக, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டார். இது விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றது.

Also Read: தி.மு.க-வின் முக்கியப் பிரமுகருக்கு சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் பொறுப்பு?!

4). சிங்காரச் சென்னை 2.0 :

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையை மேம்படுத்தும், சீர்மிகு நகரத் திட்டத்துக்காக ரூ.2,350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குறிப்பாக, ரூ.500 கோடி செலவில் 3 புதிய மேம்பாலங்கள், ரூ.2,056 கோடி செலவில் 3 பாதாள சாக்கடை திட்டங்கள், பசுமை நகரம், சுவரொட்டிகள் இல்லா சென்னை, புதிய நிதிநுட்ப நகரம் என `சிங்காரச்சென்னை 2.0′ திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சென்னை வாசிகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

சென்னை மெரினா கடற்கரை – சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

5). இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்:

இலங்கை அகதிகள் முகாமை இனி, ‘இலங்கைத் தமிழர்மறுவாழ்வு முகாம்’ என்று அழைக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், இலங்கை தமிழர்களுக்கு சும்மர் ரூ.108 கோடி மதிப்பீட்டில் 3510 வீடுகள், வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் ரூ. 5 கோடி, பள்ளி கல்லூரி மாணவர்களின் கல்வி ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்புகள் தமிழ் உணர்வாளர்கள், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றது.

பரமத்தி அகதிகள் முகாம்

6). கருணாநிதிக்கு நினைவிடம்:

சென்னை காமராஜர் சாலையில் இருக்கும் அண்ணா நினைவிட வளாகத்தில், சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ. 39 கோடி மதிப்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை, அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களாலும் ஒருமனதாக வரவேற்கப்பட்டது.

கருணாநிதி நினைவிடம்

7). சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம்:

1987-ம் ஆண்டு நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில், உயிரிழந்த 21 சமூக நீதி போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் எனவும், அவர்கள் குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இடஒதுக்கீடு

இந்த அறிவிப்பு, இட ஒதுக்கீடுக்காகப் போராடியவர்களின் குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Also Read: சட்டப்பேரவை சர்ச்சை: துரைமுருகன் விளக்கம்… எடப்பாடி தரப்பு சொல்லும் காரணம்! – திமுக Vs அதிமுக!

8). வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்:

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். இந்த தீர்மானம் விவசாய சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு நம்பிக்கையளித்தது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம்

9). குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானம்:

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) ரத்துசெய்யக் கோரி, அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவந்தார். ஒன்றிய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கும், நாட்டில் நிலவிவரும் மத நல்லிணக்கத்துக்கும் உகந்ததாக இல்லை என்று தெரிவித்த ஸ்டாலின், இந்த சட்டம் இலங்கைத் தமிழருக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம் எனவும் தெரிவித்தார். இந்த தீர்மானம் சிறுபான்மையினர் மற்றும் அகதிகளாக தஞ்சம் புகுந்த மக்களுக்கு ஆறுதல் அளித்தது.

குடியுரிமை சட்டத் திருத்தம்

10) நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் :

மருத்து படிப்புக்கான நுழைவுத்தேர்விலிருந்து தமிழ்நாடு மாநிலத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி, `நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவை‘ முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளில் கொண்டுவந்தார். இது, அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீட் தேர்வு

இது மட்டுமல்லாமல், பெரியார் பிறந்தநாளை `சமூகநீதி நாளாக அறிவித்தது, பாரதியார் நினைவு நாளை மகாகவி நாளாக அறிவித்தது, வ.உ.சி.பெயரில் கப்பலோட்டிய தமிழன் விருது போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான முதல் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை கவனம் பெறச்செய்தது,

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.