வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என மாணவி செளந்தர்யா விரக்தியில் இருந்ததாகவும், மதிப்பெண் குறையும் என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. மாணவியின் இறப்பை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோவொன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ வழியாக முதல்வர், “மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம்! #NEET எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்!” என தற்கொலை தடுப்பு குறித்தும், நீட் விலக்கு குறித்தும் அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

image

வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தவை: “கடந்த செப்டம்பர் 2017-ல் மாணவி அனிதா இறந்தபோது என்ன மனநிலையில் நான் இருந்தேனோ, அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன். கடந்த சனிக்கிழமை மாணவர் தனுஷ் தற்கொலையின்போதே, இனி இப்படியொரு துயரம் நிகழக்கூடாதென மாணவச்செல்வங்களை கேட்டுக்கொண்டேன். ஆனால், நேற்று அரியலூர் மாணவி கனிமொழியும், இன்று மாணவி சௌந்தர்யாவும் தற்கொலை செய்திருக்கின்றனர். இந்த அடுத்தடுத்த செய்திகளை கேட்டதும், நான் சுக்குநூறாக உடைந்துபோய்விட்டேன். இப்போது எனக்கு வேதனையை விடவும், இனி இப்படியொரு துயரம் நடக்கக்கூடாதென்ற கவலைதான் அதிகம் இருக்கிறது. அந்த அக்கறையோடுதான் உங்களிடம் பேசுகிறேன்.

பல தலைமுறைகளாக மறுக்கப்பட்டு வந்த கல்விக் கதவு, இப்போதுதான் கொஞ்சம் திறந்திருக்கு. அதையும் இழுத்து மூடும் செயல்தான், நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. படிப்பதற்கு, தகுதி தேவையில்லை. படிச்சா, தகுதி தன்னால் வந்துவிடும். பல குளறுபடிகளை கொண்ட நீட் தேர்வு, ஏழை எளிய மாணவர்களுடைய கல்விக் கனவை நாசமாக்ககூடியது. அதனாலேயே தி.மு.கழகம் இந்த அநீதி தேர்வுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியது. நாங்கள் இதற்கு முன் ஆட்சிப்பொறுப்பிலிருந்தபோதும் இந்தத் தேர்வை நடத்தவிடவில்லை. ஆனாலும் சிலர் தங்களுடைய சுயலாபத்துக்காக இந்தத் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தனர். சிலர் இப்போதும் இந்த அநீதி தொடரனுமென நினைக்கிறார்கள்.


மருத்துவம் படிக்க வேண்டும், டாக்டர் ஆகவேண்டும் என நினைப்பவர்களுடைய கனவை சிதைக்கும் வகையில் நீட் தேர்வு இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு இன்னும் இதிலிருந்து இறங்கிவராமல் கல்நெஞ்சோடு இருக்கிறது. திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், நீட் தேர்வு குறித்து விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், ‘12ம் வகுப்பை மட்டுமே அடிப்படையாக வைத்து, மருத்துவ சேர்க்கை நடத்தலாம்’ எனக்கூறி நீட் தேர்வை நடத்த வேண்டாமென்ற மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் இதை ஒருமனதாக இருந்து நிறைவேற்றியுள்ளோம். இந்த மசோதாவை, இன்னும் பல்வேறு மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர்களுடன் இணைந்து நீட் ரத்தை உறுதிசெய்வோம். இதுபோன்ற நேரத்தில், நீட் அச்சம் காரணமாக தற்கொலை செய்துக்கொள்வோருடைய செய்திகள், என் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுவதுபோல இறங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி: “நீட்டை முழுமையாக நீக்கும் வரை சமரசமில்லா சட்டப்போராட்டம் தொடரும்” – முதல்வர் ஸ்டாலின்

மாணவர்களே… உங்களுடைய உயிர், விலைமதிப்பில்லாதது. உங்கள் உயிர், உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுகே முக்கியமானது. உங்களுடைய எதிர்காலத்தில் தான் இந்த நாட்டுடைய எதிர்காலமே அடங்கியுள்ளது. அத்தகைய மதிப்பு வாய்ந்த உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என நான் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். உங்களாலும் மருத்துவராக முடியும். உங்களால் நினைச்சதை சாதிக்க முடியும். உங்களால் முடியாதது எதுவுமில்லை. அந்த தன்னம்பிக்கையோட இருங்க. உங்கள் உயிரை மாய்த்து, உங்களின் பெற்றோருக்கு வாழ்க்கை முழுவதும் துன்பம் தந்துவிடாதீர்கள். நீங்கள் கல்வியில் மட்டுமல்ல, தன்னம்பிக்கையிலும் தலைசிறந்த மனிதர்களாக வளரவேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை தன்னம்பிக்கை மிக்கவர்களாக வளர்க்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இங்கே ‘இதுதான் விதி’ என்று எதுமில்லை. விதியை, மதியால் வெல்ல முடியும்.

முயற்சிதான் வெற்றியை தரும் என வள்ளுவர் சொல்லியுள்ளார். அத்தகைய துணிச்சலும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கை கொண்டவராக மாணவர்கள் எல்லோரும் வளரவேண்டும், வாழவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

நீட் எதிர்ப்பு போராட்டம்: முடிவுக்கு வந்தது வழக்கு | Dinamalar Tamil News

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை சொல்ல அரசு சார்பில் 104 என்ற தொலைபேசி எண் உருவாக்கி கொடுத்துக்கொள்ளோம். மாணவ மாணவியருக்கு ஆலோசனை சொல்லவும், அவர்கள் சொல்வதை கேட்கவும் நம்முடைய மனநல மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். உடல் நலன், உள்ள நலன் கொண்டவர்களாக நம் மாணவச் செல்வங்களை வளர்த்தெடுத்தாக வேண்டும். பெற்றோர்களும், தங்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறி அழுத்தம் தரவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியர்கள், சமூக சேவை செய்வோர், திரைத்துறையினோர் அனைவரும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை விதையை விதைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தயவுசெய்து… தயவுசெய்து… மாணவச் செல்வங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என மீண்டும் மீண்டும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்ந்து போராடுவோம். வாழ்ந்து வென்றுகாட்டுவோம்” எனக்கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.