உள்ளாட்சித் தேர்தல்: தனித்துப் போட்டியிடும் கட்சிகள்.. இதுவரை வெளியான அறிவிப்புகள் ஒரு பார்வை. 

தேமுதிக

அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், தனித்துப்போட்டியிடுவதாக அறிவித்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் வரும் 16,17 தேதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று கூறியுள்ளார். 

பாமக

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்துப்போட்டியிடுவதாக பாமக அறிவித்துள்ளது. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனித்துப்போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 தினங்களில் உறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி

உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் மக்களையும், உன்னதமான தத்துவத்தையும் நம்பி தனித்து களமிறங்குவதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், போட்டியிடாத இடங்களே இல்லை என்று சொல்லும் வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்த கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

திமுக

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன், இடப்பகிர்வு குறித்து கலந்துபேசி முடிவெடுக்கும்படி திமுக நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார். 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன், உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கலந்தாலோசித்து, சுமூக முடிவு செய்திடுமாறு திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை துரைமுருகன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெறுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 1800-425-7072, 1800-425-7073,1800-425-7074 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பாக புகார்கள் ஏதேனும் இருந்தால் இந்த எண்களைத் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்கலாம் : உலக அரங்கில் ’கீழடி’ : யார் இந்த அமர்நாத் ராமகிருஷ்ணன்? தமிழகத்தில் இவ்வளவு வரவேற்பு ஏன்? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.