தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது. நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக முதலில் களத்தில் இறங்கியிருக்கிறது பா.ம.க. 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணியிலிருந்த பா.ம.க-வின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

“தனித்துப் போட்டியிடுவதால் பா.ம.க-வுக்குதான் இழப்பு. அ.தி.மு.க-வுக்கு இழப்பில்லை. எங்கள் கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், எங்கள் கட்சியை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலை தொடர்ந்தால் நாங்களும் விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்படும். எழுதப்படாத ஒப்பந்தம் போலச் சிலருடன் சேர்ந்து முடிவுகளை எடுத்திருக்கலாம். அது அவர்கள் விருப்பம். அதனை நான் விமர்சிக்கவில்லை. எங்கள் உட்கட்சி விவகாரங்களைப் பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் தகுதியில்லை” என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

பா.ம.க அறிக்கை

“ஊடக செய்தி அடிப்படையில் பாமகவை ஜெயக்குமார் விமர்சிப்பது சரியல்ல. கூட்டணி குறித்து கட்சிகளுடன் பேச போதிய அவகாசம் இல்லை. நிர்வாகிகள் பெரும்பாலானோரின் கருத்துகள் அடிப்படையிலேயே தனித்துப்போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. – பா.ம.க. இடையே எந்த முரண்பாடும் இல்லை” என பா.ம.க. செய்தித்தொடர்பாளர் கே.பாலு பதிலளித்திருக்கிறார்.

Also Read: மிஸ்டர் கழுகு: தி.மு.க வைத்த மணிமண்டப செக்! – பா.ம.க ஷாக்…

தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பா.ம.க-வின் முடிவு குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம் “உள்ளாட்சித் தேர்தலை வைத்து கூட்டணியில் விலகுகிறார்களா இல்லையா என்பது குறித்துக் கூற முடியாது. இப்போது நடைபெறவுள்ள தேர்தல் வெறும் 9 மாவட்டங்களுக்கான தேர்தல்தான். அதில் கணிசமான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என நினைக்கிறார்கள். இதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க ஆதரவு தேவையில்லை என்று பா.ம.க நினைப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். அப்படி ஏதும் இவர்களால் பா.ம.க-வுக்கு ஆதரவு இருப்பதாகவும் தெரியவில்லை. தென் மாவட்டங்களில் நடக்கும் தேர்தலில் மட்டும் பா.ம.க-வுக்குப் பின்னடைவு இருக்கும். பா.ம.க-வின் நோக்கம் வட மாவட்டங்களில் தாங்கள் பலமாக இருக்கும் பகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. அதன்மூலம் கட்சியை மறு சீரமைப்பு செய்து வலுவாகக் கட்டமைக்க முனைகிறது என்றுதான் தோன்றுகிறது.

ஆர்.கே.ராதாகிருஷ்ணன் – மூத்த பத்திரிகையாளர்

சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வெற்றியோடு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று கட்சிக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும் முயற்சியாகத்தான் எனக்குப்படுகிறது. கூட்டணி வேண்டாம் என்று சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை. அ.தி.மு.க-வின் தேவை இப்போது பா.ம.க-வுக்குத் தேவையில்லை. ஆட்சி அதிகாரத்திலும் அவர்கள் இல்லை என்பதால் அவர்களுடன் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.” என்றவர்

“நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்திலேயே தி.மு.க-வின் அனைத்து தீர்மானங்களுக்கும் பா.ம.க ஆதரவு தெரிவித்தது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பது தி.மு.க-தான் என்பதால் அவர்களை அண்டிக்கொள்ளலாம் என பா.ம.க நினைத்திருக்கலாம். அண்ணா-வின் கொள்கையைப் பின்பற்றி கருணாநிதி வழியில் ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டும் என்றெல்லாம் அவர்களுக்கு என்ன கொள்கையா இருக்கிறது. வன்னிய மக்கள் நன்றாக இருக்க வேண்டும் எனச் சாதியை அடிப்படையாக வைத்து தங்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதுதான் பா.ம.க-வின் மிகப்பெரிய குறை. அதைத்தாண்டி அவர்களுக்குப் பெரிய கொள்கை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியிருப்பவர்கள் எப்போதும் ஆளும் தரப்போடு இணைந்துதான் செயல்பட முடியும். அதனால்தான் தொடர்ந்து அவர்கள் கூட்டணி மாறிக்கொண்டே இருப்பதைப் பார்க்க முடிகிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கியபோது அதைத் தங்களின் வெற்றியாக பா.ம.க பார்த்தது. 20 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டிய இடத்தில் 10.5 சதவிகித என்பது அவர்களுக்குப் பின்னடைவுதான்.

அ.தி.மு.க., பா.ம.க

ஆனாலும், இந்தளவு இட ஒதுக்கீடு கிடைத்ததில் பா.ம.க-வின் பங்களிப்பை நாம் ஒதுக்கிவிட முடியாது. சாதியை, மதத்தை அடியொற்றி வரும் கட்சிகள் மக்களை அறியாமையில் வைத்துக் கொண்டேதான் அரசியல் செய்து வருகிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க உடன் பா.ம.க கூட்டணி வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்படிக் கூட்டணி அமைந்தாலும் அது தி.மு.க அதிகாரத்தில் இருக்கும் வரையில்தான் நீடிக்கும்” என மேலும் விளக்கினார்.

விமர்சனங்கள் குறித்து பா.ம.க செய்தித்தொடர்பாளர் வினோபா பூபதியிடம் கேட்டோம் “தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத, புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கக் கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர். அதனடிப்படையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன்தான் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்திருக்கிறார்.

வினோபா பூபதி – பா.ம.க செய்தித் தொடர்பாளர்

உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்ல எந்தத் தேர்தலிலும் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனையின் பெயரில்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற ஜனநாயகத்தை பா.ம.க தொடர்ச்சியாகப் பின்பற்றி வருகிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் அதன்படிதான் முடிவு எடுத்துத் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். இனி வரும் தேர்தலிலும் இதே ஜனநாயக முறையைத்தான் பின்பற்றுவோம்.” என விமர்சனங்களுக்குப் பதிலளித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.