கிரிக்கெட்டின் ஆண்டவர்கள் இல்லை, பெரிதாகக் கோலோச்சியதாக புள்ளிவிவரங்கள் இல்லை, தொடர் வெற்றிகளும் பெற்றதில்லை. ஆனால், ஜென்டில்மேன் விளையாட்டு என சொல்லப்படும் கிரிக்கெட்டை அந்த தன்மை மாறாமல் விளையாடியவர்கள் ஜிம்பாப்வே வீரர்கள். கிரிக்கெட்டின் அழகிய அணிகளில் ஒன்றாக 90’களில் தடம்பதித்த ஜிம்பாப்வேயின் சமீபத்திய அடையாளமாக இருந்தவர் பிரண்டன் டெய்லர். ஆண்டி ஃப்ளவர், கிரான்ட் ஃப்ளவர், ஹீத் ஸ்ட்ரீக், ஒலாங்கா என பவர்ஃபுல் ப்ளேயர்களைக் கொண்டிருந்த ஜிம்பாப்வேயின் லைன் அப்பில் கடைசி சூப்பர் ஸ்டார் இந்த பிரண்டன் டெய்லர்.

17 ஆண்டுகளாக சர்வதேசக் கிரிக்கெட்டில், எல்லா ஃபார்மட்டுகளிலும், ஜிம்பாப்வேயின் பிரதான வீரர்களில் ஒருவராக வலம் வந்த பிரெண்டன் டெய்லர், ஐயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியோடு நேற்று கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இரண்டு அண்டர் 19 உலகக் கோப்பைகளில், ஜிம்பாப்வேயின் சார்பாகக் களமிறங்கிய டெய்லர், உள்ளூர் கிரிக்கெட்டில் தன்னை நிரூபித்ததன் மூலமாக, தனது 18 வயதிலேயே ஜிம்பாப்வேயின் தேசிய அணியில் இடம் பெற்றார். 2004-ம் ஆண்டு, இலங்கைக்கு எதிராக, தனது ஒருநாள் மற்றும் டெஸ்ட் பயணத்தை, டெய்லர் தொடங்கினார். தொடக்கத்தில், அணிக்குள் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, சில போட்டிகளையும் எடுத்துக் கொண்ட அவருக்கு, ஜிம்பாப்வேயின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுக்க, ஒரு சில ஆண்டுகளே பிடித்தன.

பிரண்டன் டெய்லர்

டெஸ்ட் ஃபார்மட்டைப் பொறுத்தவரை, டெய்லர் அறிமுகமாகி, இரண்டு ஆண்டுகளிலேயே, ஜிம்பாப்வே, துரதிர்ஷ்டவசமாக, டெஸ்ட் விளையாடும் அணிகள் பட்டியலில் இருந்து, ஐசிசியால் விடுவிக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளும், இது தொடர்ந்தது. திரும்பவும் 2011-ம் ஆண்டு, டெஸ்ட் விளையாடும் அந்தஸ்தை, ஜிம்பாப்வே மீட்டு எடுத்த போது, கேப்டன்ஷிப் பொறுப்பு, டெய்லரிடம் கொடுக்கப்பட்டது. அடுத்த நான்கு ஆண்டுகள், டெய்லரின் டெஸ்ட் கரியரில் மட்டுமின்றி ஜிம்பாப்வேயின் டெஸ்ட் வரலாற்றிலும் முக்கியமான ஆண்டுகளாக மாறிப் போனது.

கேப்டன் இன்னிங்ஸை, ஒவ்வொரு போட்டியிலும் ஆடிக் காட்டினார் டெய்லர். குறிப்பாக, 2011-ம் ஆண்டு, 71.6 சராசரியோடும், 2013-ம் ஆண்டு 52.1 ஆவரேஜோடும், டெஸ்ட்டில் ரன்களைக் குவித்தார். டெஸ்ட் போட்டியின், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த சாதனையை, ஒருமுறைக்கும் அதிகமாக நிகழ்த்திக் காட்டிய வீரர்களின் எண்ணிக்கை சொற்பம்தான், அதில், டெய்லரும் (2 முறை) ஒருவர். அவர் கேப்டனாகப் பதவி வகிக்காத கால கட்டத்தை விட, கேப்டனாக இருந்தபோது அவரது தனிப்பட்ட ஆட்டமும் சரி, ஜிம்பாப்வேயின் வெற்றி விழுக்காடும் சரி, குறிப்பிடும்படியாக இருந்தது.

கேப்டனாக வங்கதேசத்துக்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே, முதல் இன்னிங்ஸிலேயே, அரைசதம் கடந்த டெய்லர், இரண்டாவது இன்னிங்ஸிலேயும், சதம் அடித்து, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தக் கால கட்டத்தில் எல்லாமே, சக வீரர்கள் சோபிக்கத் தவறினாலும், டெய்லரின் பேட், ஜிம்பாப்வே ரசிகர்களை ஏமாற்றியது கிடையாது. குறிப்பாக, வங்கதேசத்துக்கு எதிரான போட்டிகளில், டெய்லரின் பேட் இன்னமும் சத்தமாகவே பேசியது.

எனினும், அந்தச் சமயம் வரை, டெஸ்டில், வங்கதேசத்துக்கு எதிராக மட்டுமே ஜிம்பாப்வேயின் வெற்றி சாத்தியம் என்ற நிலை, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக நிலவியது. அதனை மாற்றி, 2013-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய வெற்றியை, ஜிம்பாப்வே பெற்றது. 2001-க்கு முன்னதாக, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக்கூட வீழ்த்தி, பத்து டெஸ்ட் வெற்றிகளை, ஜிம்பாப்வே சுவைத்திருந்தாலும், கிட்டத்தட்ட ஒரு தசமத்துக்கும் மேலாக அப்படிப்பட்ட ஒரு வெற்றிக்காக ஏங்கித் தவித்த ஜிம்பாப்வேயிடம், ஆன்டி ஃபிளவர், ஹீத் ஸ்ட்ரீக் உள்ளிட்ட அவர்களது முந்தைய ஆஸ்தான நாயகர்கள் இல்லைதான்,.எனினும், பிரெண்டன் டெய்லர் என்ற ஒரு நம்பிக்கை நட்சத்திரம் அவர்களின் கைவசம் இருந்தது. அவர் அணிக்குள் கொண்டு வந்திருந்த புது உத்வேகம், ஜிம்பாப்வேவை, 24 ரன்கள் வித்தியாசத்தில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை, பாகிஸ்தானுக்கு எதிராகப் பதிவேற்ற வைத்தது.

டெஸ்டில் கூட, அவர் கேப்டனாக இல்லாத சமயங்களில், டெய்லரின் ஆட்டத்திறன் சிறப்பாக வெளிப்படாமல் போய் இருக்கலாம். ஆனால், ஒருநாள் ஃபார்மட்டில், அவர் விளையாடிய போட்டிகளில், ஜிம்பாப்வேயின் மொத்த ரன்களில், அவரது பங்கே பாதிக்கும் மேல் இருந்து வந்தது.

பிரண்டன் டெய்லர்

அட்டாக்கிங் பேட்ஸ்மேனான அவர், களத்தில் நிற்கும் சமயங்களில், கண்டிப்பாக தனது அணிக்காக ஏதோ ஒரு சம்பவத்தைச் செய்யத் தவறாத தனிப்பெரும் வீரர். மற்ற வீரர்களின் ஆதரவு இல்லாததால், அணிக்கு வெற்றிக்கான உத்தரவாதத்தைக் கொடுக்க முடியா விட்டாலும், பல சமயங்களில், கடைசி வரையில் களத்தில் நின்று போராடுவார். அடங்கிப் போவது அவரது பாணி இல்லை. அவரது கவர் டிரைவ்கள் கவனத்தைக் கவரும் என்றாலும், அவரது ராம்ப் ஷாட்டுகளும், லெக் கிளான்ஸுகளும் கண்களைக் கொள்ளையடிக்கும் ரம்மியமானவை. இன்சைட் அவுட் மூலமாக, எக்ஸ்டரா கவரில் ரன்களைக் குவிப்பதில் அவர் கில்லாடி.

ஒருநாள் போட்டிகளில், அவரை விட அதிகமான இன்னிங்ஸ்களில், ஃபிளவர் சகோதரர்கள், மஸகட்சா உள்ளிட்ட வீரர்கள் களமிறங்கி இருந்தாலும், 11 சதங்கள் என்பதற்கு, பக்கத்தில் கூட யாரும் வரவில்லை. இவருக்கு அடுத்ததாக கேம்ப்பெல் மட்டுமே, 7 சதங்களை, ஒருநாள் போட்டிகளில் அடித்திருந்தார். அதுவும் டெய்லரின் சதங்களில் பெரும்பாலானவை, முக்கியமான தருணத்தில், அணியை மீட்டெடுக்க வந்தவையே.

குறிப்பாக, 2010-ம் ஆண்டு, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில், அவரது 145 ரன்களும், 2015 உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான அவரது 138 ரன்களும், மிக முக்கியமான இன்னிங்ஸ்கள். இரண்டிலும் ஜிம்பாப்வே, தோல்வியையே தழுவியிருப்பினும், இவரது போராட்டம் அப்போதே, தனிக்கவனம் பெற்றிருந்தது. சில சமயங்களில், போராடிப் பெறும் தோல்விகூட, சுலபமான வெற்றியை, திரைமறைவு செய்து, பெரிதாகப் பேசப்படும்… அப்படிப்பட்டவைதான், அந்த இரண்டு சதங்களும்.

முக்கியமாக, இந்தியாவுக்கு எதிரான அந்த 138 ரன்கள், ஐந்து மெகா சிக்ஸர்களையும், 15 பவுண்டரிகளையும் உள்ளடக்கி, வெறும் 110 பந்துகளில் வந்திருந்தன. 3/33 என திணறிக் கொண்டிருந்த அணியை, 235 வரை எடுத்துச் சென்றார் டெய்லர். வலிமை குன்றிய அணியாக, உலகத்தின் கண்களுக்குத் தென்படும் ஒரு அணியிலிருந்து கிளம்பி வந்த ஒரு வீரர், அரங்கத்தையே அன்று அதிர வைத்தார். அப்போட்டிக்கு முன்னதாக, அயர்லாந்துக்கு எதிரான போட்டியிலும், அவரது சதம் வந்து சேர்ந்திருந்தது. உலகக் கோப்பையில், பேக் டு பேக் சதங்களை, தனது அணி வீரர் அடிப்பார் என்பதெல்லாம், அதுவரை, ஜிம்பாப்வே ரசிகர்களுக்கு வெறும் கனவாக மட்டுமே இருந்தது. ஆனால், ஒருநாள் ஃபார்மட்டில், ஏற்கனவே ஒருமுறை, பேக் டு பேக் சதங்களை, டெய்லர் அடித்தவர்தான். அச்சமயம், அதனைச் செய்த முதல் ஜிம்பாப்வே வீரராகவும், அவரே இருந்தார்.

2015-ம் ஆண்டு உலகக் கோப்பை, டெய்லரின் கரியரில், மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. ஜிம்பாப்வே அணியின் சார்பாக அத்தொடரில் அதிக ரன்களை எடுத்தவராக, டெய்லரே இருந்தார். இருப்பினும், அவருக்கான முழு அங்கிகாரம், அவருக்கு ஜிம்பாப்வேயில் கிடைக்கவில்லை. சம்பளப் பிரச்னை காரணமாக, கிரிக்கெட் உலகை, அதிர்ச்சிக்கு உள்ளாக்கி, தனது ஓய்வை 2015-ல் அறிவித்தார் டெய்லர். இந்தியாவுக்கு எதிராக, அவர் அடித்த 145 ரன்கள் இன்னிங்ஸ் மேட்ச்தான், அவரது ஃபேர்வெல் மேட்ச்.

அங்கிருந்து, அவரது கிரிக்கெட் பயணம், டேக் டைவர்ஷனாக, இங்கிலாந்தில் தொடர்ந்தது. நாட்டிங்காம்ஷயருக்காக ஆடத் தொடங்கினார் டெய்லர். 2015-ல் இருந்து 2017 வரை அங்கே நீண்டு தொடர்ந்த அவரது பயணத்துக்கு, அப்படியே முடிவுரை எழுதப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மறுபடியும் ஒருமுறை, சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில், ஜிம்பாப்வே சார்பாக களமிறங்கும் வாய்ப்பை, 2018-ல் டெய்லர் பெற்றார். கிரிக்கெட் வரலாற்றின் ஆகச்சிறந்த கம் பேக்களில், இதுவும் ஒன்று. அந்த ஆண்டு மட்டும், 890 ரன்களை, 21 போட்டிகளில் குவித்தார், டெய்லர்.

பிரண்டன் டெய்லர்

அச்சமயத்தில், ஒருநாள் போட்டிகளில், ஜிம்பாப்வே சார்பாக அதிக ரன்களைச் சேர்த்தவர்கள் பட்டியலில், மூன்றாவது இடத்தில் இருந்த டெய்லர், அங்கிருந்து கிராண்ட் ஃபிளவரைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். 109 ரன்களைச் சேர்த்தால், ஆன்டி ஃபிளவருடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்வார் என்ற நிலையில், அயர்லாந்துடன், ஒரு போட்டி எஞ்சியிருந்த போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை, யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், தனது ஓய்வை அறிவித்தார் டெய்லர்.

கடைசிப் போட்டியில், அதனை நிகழ்த்திக் காட்டி, ஆன்டி ஃபிளவருடன் முதலிடத்தைப் பகிர்வார் என்று நம்பப்பட, ஏமாற்றமளிக்கும் வகையில், ஏழு ரன்களோடு வெளியேறினார் டெய்லர். அது நிறைவேறாத போதும், ஜிம்பாப்வேயின் சாதனை வரலாற்றின் பல பக்கங்கள், தலையங்கமாக, டெய்லரின் பெயரில்தான் எழுதப்பட்டிருக்கிறது.

2006-ல், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், கடைசி ஓவரில், 17 ரன்கள் தேவை என்னும் நிலையில், கடைசிப் பந்தில், டீப் மிட் விக்கெட்டில், மொர்டசாவின் பந்தைப் பறக்க விட்டு, வங்கதேசத்தைப் பதற வைத்ததவர் டெய்லர். 2011-ல் வலிமை மிகுந்த நியூஸிலாந்துக்கு எதிராக, நாதன் மெக்கல்லமின் பந்துகளை அவர் விளாசி சேர்த்த அந்த 75 ரன்கள் என கொண்டாடித் தீர்க்க, பல இன்னிங்ஸ்களை நினைவில் உறைய வைத்துச் சென்றுள்ளார் டெய்லர்.

டெஸ்ட்டில், ஜிம்பாப்வே சார்பாக அதிக ரன்களைக் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டெய்லர், டி20-ல் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். மேலும், ஜிம்பாப்வே சார்பாக, சர்வதேச அளவில், அதிகப் போட்டிகளில் விளையாடியதில், 283 இன்னிங்ஸ்களோடு, டெய்லரே, மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில், இவருக்கு முன்பாக, அதிக அரை சதங்களை எடுத்தவராக, ஆன்டி ஃபிளவர் மட்டுமே பட்டியலில் இருக்கிறார். எனவேதான், ஜிம்பாப்வே அணியில், டெய்லர் இல்லாதது, மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கி வைத்துள்ளது.

பிரண்டன் டெய்லர்

மொத்தமாக, 9,938 சர்வதேச ரன்களோடு விடைபெற்றுள்ளார் டெய்லர். வீழ்ச்சியையும், எழுச்சியையும் சம அளவில், அவரது பேட் பார்த்திருந்தாலும், ஃபிளவர் சகோதரர்களை ஜாம்பவான்களாகக் கொண்டாடிய ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு, புதுமுகமும், பெரிய நம்பிக்கையையும் கொடுத்த இன்னொரு சம கால கிரேட்தான் டெய்லர்.

சிறிய இடைவெளிக்குப் பின், திரும்ப வந்து, அணிக்கு என்னாலானதைச் செய்வேன் என குறிப்பிட்டுள்ள டெய்லர், பயிற்சியாளராக இன்னொரு வலம் வருவார் என உறுதியாக நம்பலாம், அதுவரை, கிரிக்கெட்டில் தடம் பதிக்க விரும்பும், ஜிம்பாப்வேயின் அடுத்த தலைமுறைக்கு, டெய்லரின் சாதனைகளும், மைல்கற்களும், உற்சாக டானிக்காக இருக்கும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.