Press "Enter" to skip to content

இரட்டை இன்ஜின் அரசின் இரட்டைப் பலனுக்கு உ.பி. சிறந்த உதாரணம்: பிரதமர் மோடி புகழாரம்

இரட்டை இன்ஜின் அரசின் இரட்டைப் பலனுக்கு சிறந்த உதாரணமாக உத்தரப் பிரதேசம் தற்போது மாறிவருகிறது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அம்மாநில அரசுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உத்தரப் பிரதேச பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்தின் அலிகார் முனையின் கண்காட்சி மாதிரிகள் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்தையும் பிரதமர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது:

“பாதுகாப்புத் துறையில் அலிகர் முன்னேறி வருவதையும், இங்கு ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டிருப்பதையும் பார்த்து கல்யாண் சிங் மகிழ்ச்சியடைந்திருப்பார். சுதந்திர இயக்கத்துக்கு பல தலைவர்கள், தங்களின் அனைத்து சொத்துக்களையும் கொடுத்தனர். ஆனால், சுதந்திரத்துக்குப் பின் தேசிய நாயகர்கள் மற்றும் நாயகிகளின் தியாகங்களை நாட்டின் அடுத்த தலைமுறையினர் அறியவிடாமல் செய்தது நாட்டின் துரதிர்ஷ்டம். அவர்களின் கதைகளை அறியும் வாய்ப்பை பல தலைமுறைகள் இழந்துவிட்டன. 20-ஆம் நூற்றாண்டின் இந்தத் தவறகளை, 21ஆம் நூற்றாண்டு இந்தியா சரி செய்து கொண்டிருக்கிறது.

image

நம் கனவுகளை நிறைவேற்ற, எந்த அளவுக்கும் செல்லக்கூடிய, வெல்ல முடியாத மனவிருப்பத்தை ராஜா மகேந்திர பிரதாப் சிங்ஜியின் வாழ்க்கை நமக்கு கற்பிக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்தை ராஜா மகேந்திர பிரதாப் சிங் விரும்பினார், இதற்காக வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும், அவர் அர்ப்பணித்தார். விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம் நடைபெற்றுவரும் நேரத்தில், இன்று இந்தியா கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பாதையில் சென்று கொண்டிருக்கும்போது, பாரதத்தாயின் இந்தத் தகுதியான புதல்வரின் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது, அவருக்கு செலுத்தும் உண்மையான ‘கார்யாஞ்சலி’.

பல்கலைக்கழகம், உயர்கல்வி மையமாக மட்டும் இல்லாது, நவீன பாதுகாப்புப் படிப்புகள், பாதுகாப்பு உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாட்டு மையமாகவும் விளங்கும். புதிய கல்விக்கொள்கை சுட்டும் திறமைகளின் அம்சங்கள், உள்ளூர் மொழியில் கற்பது ஆகியவை இந்த பல்கலைக்கழகத்துக்கு மிகவும் பயனளிக்கும்.

தொடர்புடைய செய்தி: ‘மகா பஞ்சாயத்து’களால் பதறும் உ.பி பாஜக… விவசாயிகளால் நெருக்கடியில் யோகி?

நவீன கையெறிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் முதல் போர் விமானங்கள், ட்ரோன்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றை இந்தியா உற்பத்தி செய்வதை நாடும், உலகமும் பார்த்துக்கொண்டிருக்கிறது. ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா என்ற அடையாளத்திலிருந்து மாறி, உலகுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடு என்ற புதிய அடையாளத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தின் மிகப்பெரிய மையமாக உத்தரப் பிரதேசம் மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் உத்தரப் பிரதேச எம்.பி என்ற முறையில் நான் பெருமையடைகிறேன். ஒன்றரை டஜன் ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளையும், கோடிக்கணக்கான முதலீட்டையும் ஈர்க்கும். பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தின் அலிகர் முனையில், சிறு ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் விண்வெளி ஆய்வு தொடர்பான பொருள்கள் தயாரிப்புக்கு உதவ புதிய நிறுவனங்கள் வருகின்றன. இது அலிகர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு புதிய அடையாளத்தை வழங்கும். வீடுகள் மற்றும் கடைகளை பாதுகாக்கும் பூட்டுக்குப் பெயர் போன அலிகர், தற்போது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் பொருள்களைத் தயாரிப்பதில் பிரபலமடையப் போகிறது. இது இளைஞர்களுக்கும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

image

உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் சிறு, பெரு முதலீட்டாளர்களை ஈர்க்கும் இடமாக உத்தரப் பிரதேசம் உருவாகிக் கொண்டிருக்கிறது. முதலீட்டுக்குத் தேவையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதால், தேவையான வசதிகள் கிடைப்பதால் இது நடக்கிறது. இரட்டை இன்ஜின் அரசின் இரட்டைப் பலனுக்கு சிறந்த உதாரணமாக உத்தரப்பிரதேசம் தற்போது மாறிவருகிறது. நாட்டின் வளர்ச்சியில் முட்டுக்கட்டையாகப் பார்க்கப்பட்ட அதே உத்தரப்பிரதேசம், இன்று நாட்டின் மிகப்பெரிய பிரசாரங்களை வழிநடத்திச் செல்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

2017ஆம் ஆண்டுக்கு முன்பு இங்கு நடந்த ஊழல்களையும், அரசு நிர்வாகம் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டதையும் உத்தரப் பிரதேச மக்களால் மறக்கமுடியாது. இன்று உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சியில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உண்மையாக ஈடுபட்டுள்ளது. ஒரு காலத்தில் இங்கு நிர்வாகம் குண்டர்களாலும், மாஃபியாக்களாலும் தன்னிச்சையாக நடத்தப்பட்டது. ஆனால், மிரட்டிப் பணம் பறித்தவர்களும், மாஃபியா ராஜ் நடத்துபவர்களும் தற்போது சிறையில் உள்ளனர்.

image

பெருந்தொற்று சமயத்தில், அதிகம் பாதிக்கக் கூடியவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதில் உத்தரப் பிரதேச அரசின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. தொற்றுக் காலத்தில் ஏழைகளுக்கு உணவு தானியங்கள் கிடைக்கச் செய்ததும் பாராட்டுக்குரியது. சிறிதளவு நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வலுவூட்ட மத்திய அரசு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை 1.5 மடங்கு உயர்த்தப்பட்டது, விவசாயி கடன் அட்டை விரிவாக்கம், காப்பீடு திட்டத்தின் மேம்பாடு, ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் போன்ற பல நடவடிக்கைகள் சிறு விவசாயிகளை மேம்படுத்துகின்றன. உத்தரப் பிரதேசத்தின் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் செலுத்தப்பட்டுள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலப்பு அதிகரித்திருப்பதன் பலனை மேற்கு உத்தரப் பிரதேச கரும்பு விவசாயிகள் பெறுவர்” என்றார் பிரதமர் மோடி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM