Press "Enter" to skip to content

நீட் தேர்வு விவகாரம்: அண்ணாமலையின் ‘லாஜிக்’ எந்தளவுக்கு சரி? – ஓர் அலசல் ரிப்போர்ட்!

நீட் தேர்வு, அதையொட்டிய மாணவர்களின் தற்கொலை மரணங்கள், நீட் தேர்வுக்கு எதிராக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானம் என உச்சக்கட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறது தமிழ்நாடு!

ஆனால், ‘நீட் தேர்வு ரத்து என்று ஏன் பொய்யான வாக்குறுதியை கொடுத்தது தி.மு.க’ என்று எதிர்க்கட்சிகளும், ‘நீட் தேர்வு ரத்து குறித்து தங்கள் கூட்டணிக் கட்சியான மத்திய பா.ஜ.க அரசிடம் பேசத் துணிவில்லாத அ.தி.மு.க-வினர் தமிழ்நாட்டில் தி.மு.க அரசைக் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றனர்’ என்று ஆளுங்கட்சியினரும் வழக்கம்போல் அரசியல் செய்துகொண்டிருக்கின்றனர்.

நீட் தேர்வு மையம்

இவர்களுக்கிடையே, ”நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது பிரிவினைவாத செயல், நீட் தேர்வுக்குப் பயந்து மாணவர் தற்கொலை செய்துகொண்டதற்கு தி.மு.க-வே காரணம்” என்று தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஒருபக்கம் பழி சுமத்துகிறார். பா.ஜ.க-வின் தேசிய மகளிர் அணித் தலைவியும் எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், ”நீட் தேர்வு வேண்டாம் என்றால், 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும்கூட ஒழித்துவிடலாம்” என கிண்டல் செய்கிறார்.

கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையோ, ”நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தலைகீழாக நின்று தீர்மானம் கொண்டுவந்தாலும், கட்டாயம் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்கும்; தமிழக அரசு கொண்டுவரும் தீர்மானத்தால் எந்தப் பயனும் இல்லை!” என்று அசால்ட் காட்டிவருகிறார்.

‘நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானம் வெறும் அரசியல்தானா? இந்த நீட் விலக்கு சட்ட மசோதா மத்திய பா.ஜ.க அரசின் நீட் தேர்வு குறித்த நடவடிக்கைகளில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லையா…?’ என்பதுபோன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

இதுகுறித்து பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, ”தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் என்பது, மாநிலத்தின் உணர்வுகளை வெளிக்காட்டியிருக்கிறது என்பதைவிடவும், இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நிலை என்னவென்பதையும் தெளிவாக்கியிருக்கிறது.

உச்ச நீதிமன்றம்

கடந்தகால அ.தி.மு.க அரசில் கொண்டுவந்த நீட் எதிர்ப்பு தீர்மானம் என்பது தற்போதைய தீர்மானம்போல் முறைப்படி கொண்டுவரப்படவில்லை. எனவே, அந்த தீர்மானத்தோடு இதனை ஒப்பிடமுடியாது. ஏனெனில், ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையிலும் ‘இந்த விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்று பரிந்துரைப்பதின் அடிப்படையிலும்தான் தமிழக அரசு இப்படியொரு தீர்மானத்தையே கொண்டுவந்துள்ளது. எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு மாநிலத்துக்கான அதிகாரம்தான் என்ன என்று கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையை இந்தத் தீர்மானம் உருவாக்கியிருக்கிறது.

தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்தத் தீர்மானம் அடுத்த கட்டமாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அங்கே, என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதைத்தான் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இப்போது தெளிவுபடுத்தியிருக்கிறார். ஏனெனில், இன்றைக்கு மாநிலங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படுவதில் ஆரம்பித்து குடியரசு தலைவர் அயோத்திக்குச் செல்வது வரையிலான நாட்டு நடப்புகள் ஒவ்வொன்றும் மத்திய பா.ஜ.க-வுக்கு ரொம்பவும் நெருக்கமான நிகழ்வுகளாகவே இருக்கின்றன. அதனால்தான் குடியரசுத் தலைவரிடமிருந்து இதுவரை மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிரான ஒரு நடவடிக்கையோ அல்லது எதிர் கருத்தோ இதுவரை வெளிவரவில்லை.

ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் எந்தளவு பலனளிக்கப்போகிறது என்பது நீண்டகால செயல்முறை. எனவே, இதில் உடனடியாக – சுலபமாக தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. உதாரணமாக, ‘கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது’ என்று கூறி அண்மையில், தி.மு.க எம்.எல்.ஏ எழிலன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அதில், ‘எமர்ஜென்சி காலத்தில், கல்வியை மாநில அரசுகளின் அனுமதியின்றி மத்திய அரசு பொதுப்பட்டியலுக்கு மாற்றிக்கொண்டுவிட்டது. அதனால்தான், தற்போது நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளன’ என்ற அம்சம் குறிப்பிடத்தகுந்ததாக இருக்கிறது. இந்த வழக்கு குறித்து மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, இந்த வழக்கினையும் நீட் தேர்வு விலக்கு தீர்மானம் குறித்த செயல்பாடுகளுடன் இணைத்தே பார்க்கவேண்டியிருக்கிறது.

அரசியல் சாசனங்களுக்கு உட்பட்டு, தமிழக அரசு தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறது. இதேபோல், நம் நாட்டின் முதல் குடிமகனில் ஆரம்பித்து நீதித்துறை வரையிலாக அனைத்துத் தரப்பினரின் செயல்பாடுகளும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நியாயமாக நடைபெற்றால், நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும். மாறாக, பா.ஜ.க-வின் கொள்கை அடிப்படையில்தான் அத்தனை துறைகளும் நடந்துகொள்ளுமேயானால், விலக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

நீட் தேர்வு

அரசியல் ரீதியாக பேசுவோர், ‘தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு சாத்தியமில்லை’ என்கிறார்கள். ஆனால், கடந்த காலத்தில் அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான மத்திய பா.ஜ.க அரசில் அங்கம் வகிக்கக்கூடிய தலைவர்களே, ‘தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்’ என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். விலக்கு அளிக்கமுடியும் என்ற நிலை இருந்ததால்தானே, 2017-ம் ஆண்டு வரை தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படவில்லை! இந்த சூழ்நிலையில், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தமிழக அரசால் முறையாக இயற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு மத்திய பா.ஜ.க அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்!” என்கிறார் அழுத்தமாக.

இந்த விவகாரத்தில், அரசியல் விமர்சகர் முன்வைக்கிற கருத்துகளுக்கு விளக்கம் அளித்துப் பேசுகிற தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், ”உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படியும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும் இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட ஒரு மாநிலத்துக்கு மட்டும் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று மக்களிடம் கருத்து கேட்பதோ அல்லது சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றுவதோ மக்களை ஏமாற்றுகிற செயல்தான்.

மு.க.ஸ்டாலின்

கடந்த வாரம்கூட நீட் தேர்வுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் ஒரே நேரத்தில் தள்ளுபடி செய்திருப்பதை நாம் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. இப்படி ஒரு வாரத்துக்கு முன்புகூட உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட விஷயத்தை சட்டமன்றத்தில் தீர்மானமாக இயற்றுகிறார்கள் என்றால் இது தவறான முன்மாதிரி; மக்களை ஏமாற்றுகிற செயல். உதாரணமாக, இந்தியா முழுக்க 15 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதுகிறார்கள். இதில், ஒரு லட்சத்து பத்தாயிரம்பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நீட் தேர்வை எழுத இத்தனை மாணவர்கள் தயாராக இருந்துவரும் சூழலில், தமிழக அமைச்சர்களே, ‘நீட் தேர்வுக்கு எதிராக நாளை தீர்மானம் கொண்டுவருகிறோம்’ என்றெல்லாம் பேசுவது, அந்த மாணவர்களின் நம்பிக்கைகளை சிதைக்கிற செயல்.

Also Read: `பொன்முடி, உள்குத்து அரசியலில் கில்லாடி’ – அமாவாசை டு நாகராஜசோழன்| அரசியல் புள்ளிகள் வளர்ந்த கதை

கடந்தகாலத்தில், அ.தி.மு.க அரசு கொண்டுவந்த ‘அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் பயனால், இன்றைக்கு எண்ணற்ற மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது’. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர்களில் எத்தனைபேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது என்ற புள்ளி விவரங்கள் அடங்கிய ‘வெள்ளை அறிக்கை’யை தி.மு.க அரசால் வெளியிட முடியுமா?

நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்வதற்காக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலஆன கமிட்டி அமைக்கப்பட்டதே ஓர் ஏமாற்றுவேலை. ஏனெனில், கமிட்டியின் தலைவரான ஏ.கே.ராஜன் மற்றும் குழுவினர் ஏற்கெனவே நீட் தேர்வுக்கு எதிரான கருத்துகளை பொதுவெளியில் பகிர்ந்து வந்துள்ளனர். இப்படி ஒரு விஷயத்தில் முன்முடிவோடு இருப்பவர்கள் ஆய்வு அறிக்கையின் வாயிலாக எந்த முடிவை வழங்குவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

கரு.நாகராஜன்

ஏற்கெனவே, தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்ததுதானே என்று சிலர் எதிர்வாதம் வைக்கின்றனர். அது தவறான வாதம். ஏனெனில், நாடு முழுக்க நீட் தேர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதின் பேரில், மத்திய அரசும் நடைமுறைப்படுத்தியது. ஆனால், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்கள் மட்டும் ‘உடனடியாக எங்களால் நீட் தேர்வை அமல்படுத்த முடியாது. ஒரு வருட கால அவகாசம் வேண்டும்’ என கேட்டன. அதன் அடிப்படையில், மத்திய அரசும் சட்டத்திருத்தம் கொண்டுவந்து விலக்கு அளித்தது. ஆனால், மேற்கு வங்கம் இப்போது எந்தப் பிரச்னையும் இல்லாமல் நீட் தேர்வை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் இன்னும் தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்.

More from politicsMore posts in politics »