இந்தி ‘பிக் பாஸ்’ 13-வது சீசனில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகர் சித்தார்த் சுக்லா. படங்கள், சீரியல்கள் என பலவற்றில் நடித்து பிரபலமானவர். நேற்று முன்தினம் (செப் 02) காலை திடீரென சித்தார்த் சுக்லாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இளம் வயதில் சித்தார்த் சுக்லா மரணத்தை தழுவியது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி: பிக் பாஸ் பட்டம் வென்ற சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

பாலிவுட்டில் மட்டுமன்றி கோலிவுட்டிலும் இப்படியான நம்பமுடியாத திடீர் மாரடைப்பு மரணங்களும், இளவயது மரணங்களும் சமீபகாலத்தில் நிறைய பதிவாகி வருகிறது. உதாரணத்துக்கு, நடிகரும் சரும மருத்துவருமான சேதுராமன், நடிகர் விவேக், உதவி இயக்குநரும் நடிகருமான பவுன்ராஜ் என கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக பலர் இதய பாதிப்பு – திடீர் மாரடைப்பு என இறந்துள்ளனர். சினிமா துறையை தாண்டி பார்க்கும்போதும் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், பள்ளி சென்ற மாணவி, பேருந்திலிருந்த 40 வயதையொட்டிய நபரென பலர் இளவயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர். இதுகுறித்து பேசியிருக்கும் டெல்லியை சேர்ந்த மருத்துவரொருவர், “10 – 15 ஆண்டுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில், இப்போது மாரடைப்பு பிரச்னைகள் இளவயதினரிடையே அதிகரித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

image

இந்தளவுக்கு இளைஞர்கள் மத்தியில் இதயப்பிரச்னைகள் அதிகரித்ததன் பின்னணி என்ன என்பது பற்றி, இதய நோய் நிபுணரான மருத்துவர் பாரதி செல்வனிடம் கேட்டோம். நம்மிடையே பேசிய அவர், இன்றைய இளைய சமுதாயம் இதய பாதிப்புகளை தவிர்க்க என்ன மாதிரியான வழிமுறைகள் என்பதை விரிவாக கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், “இதயநோய் ஒரு பிரச்னையாகும்வரை அதுபற்றி பலரும் யோசிப்பதே கிடையாது. இதயமும், நம்முடைய உடலின் மற்ற தசைகளைப் போன்றதே. இதய ஆரோக்கியத்துக்கு, ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த ரத்தம் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. இதற்கு ஆரோக்கியமான வாழ்வியல் முறைகள் மிகவும் அவசியம். இன்றைய சூழலில் இளைஞர்கள் பலரும் மது, புகை பழக்கங்களோடு இருப்பதை பார்க்கமுடிகிறது. இவை இரண்டும் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை என்று தெரிந்தும்கூட, அவர்கள் அதை சமூக அங்கமாக பார்ப்பதுதான் இன்னும் வேதனை. புகைப்பழக்கத்தை பொறுத்தவரை, அது சம்பந்தப்பட்ட ஒரு இளைஞருடன் மட்டும் முடிந்துவிடாது. அவருக்கு அருகில் இருக்கும் ஆரோக்கியமான நபருக்கும் அந்த புகையின் தாக்கம் இருக்கும். அப்படியான பாதிப்பை மருத்துவத்தில் ‘இரண்டாம் நிலை பாதிப்பு’ என்போம். ஒவ்வொருவரும் புகைப்பழக்கம், மதுப்பழக்கத்தை விடுவதே இப்பிரச்னைகளுக்கான முதலும் முக்கியமுமான தீர்வு.

image

இவற்றை தொடர்ந்து, ஆரோக்கியமான வாழ்வியலை கவனித்துக்கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் பலரும் அமர்ந்தபடியே பல மணி நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது. இப்படியானவர்கள் குறிப்பிட்ட மணி நேரத்துக்கு ஒருமுறை இடைவெளி எடுத்து, அருகருகே நடப்பது நல்லது. முக்கியமாக, இவர்கள் அன்றாடம் எளிய உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி என்றாலே எடை தூக்குதல் என பலர் நினைக்கின்றனர். ஆனால் எளிமையாக செய்யக்கூடிய நிறைய பயிற்சிகள் இருக்கிறது. அன்றாடம் 30 முதல் 45 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்வது கூட அதிக நன்மையை உங்களுக்கு கொடுக்கும். இங்கே விஷயம், உங்கள் உடலுக்கு சற்று உழைப்பு தேவை என்பது மட்டுமே. ஆகவே அதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

இதைத்தொடர்ந்து, அதிகம் வறுத்த உணவுகள், பதப்படுத்திய உணவுகள், எண்ணெய் சேர்த்த உணவுகள், குளிர்பானங்கள், ஃபாஸ்ட் ஃபுட்ஸ், கொழுப்புச்சத்து உணவுகளை தவிர்க்க வேண்டும். இளைஞர்கள் பலரும் கடையில் வாங்கி சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். சொந்த ஊரைவிட்டு வெளி மாவட்டத்துக்கு செல்லும் இவர்களுக்கு, சமைக்க முடியாத நிலை இருப்பதால், அவர்களையும் குறைபட்டுக்கொள்ள முடியாது. ஆனால் இந்த இடத்தில் துரிதமாக செயல்படுவது அவசியம். உதாரணத்துக்கு கடையில் இட்லி, தோசை, பானிபூரி, மசாலா பூரி, பிரியாணி, நூடுல்ஸ் என்று வாங்காமல் சிறுதானிய உணவு விடுதிகளில் சத்துமிக்க உணவை எடுத்துக்கொள்ளலாம். நம்மாழ்வார் போன்றோரின் பெயரில், இப்படியான விடுதிகள் செயல்படுவதுண்டு. சிறுதானியத்தில் இருக்கும் நார்ச்சத்து, இதய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். மேலும், கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை உறுதிசெய்யும். அனைத்து வேளையும் இக்கடையை நாடமுடியவில்லை என்றாலும், ஏதாவதொரு ஒரு வேளை உணவாக இதை எடுப்பது நல்லது. முடியாதபட்சத்தில், சுயமாக செய்துக்கொள்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

Junk food is deadlier than what it was 30 years ago, finds study | The  Times of India

அடுத்தபடியாக மாரடைப்புக்கான அடிப்படை காரணங்களான ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதற்கு உரிய மருத்துவ ஆலோசனை அவசியம். சீரான ரத்தஅழுத்தத்தை உறுதிப்படுத்த, ஆறு மாதத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்வது நல்லது. ரத்த சர்க்கரை அளவையும், மருத்துவர் சொல்லும் கால இடைவெளிக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். இது ஒரு சிலருக்கு 3 மாதமாக இருக்கும், இன்னும் சிலருக்கு 1 மாதமாக இருக்கலாம், சிலருக்கு இடைவெளி அதிகரிக்கவும் செய்யலாம். ஆகவே அவரவரின் தனிப்பட்ட மருத்துவரிடம் கேட்டு இந்த இடைவெளியை நிர்ணயிப்பதே சரி.

இளவயது மாரடைப்புக்கு மற்றொரு முக்கிய காரணம், அதீத உடல்பருமன். அந்தவகையில் உடலுக்கேற்ற எடையைப் பராமரிக்க வேண்டும். பி.எம்.ஐ அளவைக் கணக்கிடுவதன் மூலம், இதை உறுதி செய்யலாம்.

image

மனநலனில் அக்கறை தேவை. அந்தவகையில், முடிந்தவரை வேலையை மனதுக்குள் கொண்டு செல்லாத வாழ்வை முன்னெடுப்பது நல்லது. தினமும் தியானம் செய்வது மன அமைதிக்கு வழிவகை செய்யும். உடற்பயிற்சியை நேர்த்தியாக செய்து, தினமும் தியானமும் செய்து வந்தாலே பல மனநல பிரச்னைகளை உங்களால் தவிர்க்க முடியும். கவலையில்லா மனம் இருந்தால், நோயில்லா இதயமும் அமையும்!

இது கொரோனா காலகட்டம் என்பதால், தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கும் இதயப்பிரச்னைகளுக்கான வாய்ப்புகள் உள்ளது. ஆகவே அவர்கள் தங்கள் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி: கொரோனாவிலிருந்து மீள்வோர் இதய பாதிப்பை தடுக்க என்ன செய்யவேண்டும்?- மருத்துவர் வழிகாட்டுதல்

ஒரு சிலருக்கு மரபுவழியில் இதய பாதிப்புகள், மாரடைப்பு போன்றவை ஏற்படலாம். குறிப்பாக 18 வயது, 20 வயது போன்ற வயதிலெல்லாம் ஏற்படும் இதயப் பிரச்னைகள் மரபுவழி சிக்கலாகவே இருக்கும். ஆகவே குடும்பத்தில் தாய் தந்தை யாருக்கேனும் இதயப்பிரச்னை இருந்தால், பிள்ளைகள் இவ்விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். இதில், தந்தைக்கு 55 வயதில் இதயம் சார்ந்து ஏதேனும் உடல் உபாதை ஏற்பட்டிருந்தாலோ; தாய்க்கு 65 வயது ஏற்படுவது என்றிருந்தாலோ அவர்களின் பிள்ளைகள் 30 வயதை நெருங்கிய பின் வருடம் ஒருமுறை உங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுங்கள். இப்படியான மெடிக்கல் ஹிஸ்டரி இல்லாதவர்களும்கூட, வருடம் ஒருமுறை தங்களை சுயப்பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வது நல்லது” என்றார் அவர்.

இதய நலன் காப்போம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.