கொரோனா இரண்டாம் அலை தனி நபர்களுக்கும், குடும்பங்களுக்கும், சமுதாய அமைப்பிற்கும், நாடுகளின் அரசாங்கங்களுக்கும் பல பாடங்களை உணர்த்திச் சென்றுள்ளது என்கிறார் மருத்துவர் சென் பாலன்.
 
2020-ல் முதல் அலை எதிர்பார்த்ததை விட சீக்கிரம் முடிந்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்தோம். ஆனால் முதல் அலையை விடப் பிரமாண்டமாக இரண்டாவது அலை ஏற்பட்டு பெரும் சேதத்தை விளைவித்தது. திரும்பிய பக்கமெல்லாம் படுக்கைக்கான கோரிக்கைகள், ஆக்சிஜன் வேண்டி உதவிக் குரல்கள், இறப்புகள், ஐசியூ வாசம் என நம் வாழ்வையே புரட்டிப் போட்டது இரண்டாவது அலை. இன்னும் இந்த அலை முடிவுக்கு வரவில்லை என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. நோயின் தாக்குதல், நெருங்கிய உறவுகளின் இழப்பு, மருத்துவச் செலவீனம், லாக்டவுன் பொருளாதார இழப்பு என இதனால் பாதிக்கப்படாத குடும்பமே இல்லை என்று சொல்லும் நிலை.
 
இவற்றோடு பல பாடங்களையும் கற்றுக் கொடுத்திருக்கிறது இரண்டாவது அலை. அவ்வாறு, கொரோனா இரண்டாவது அலை கற்றுக் கொடுத்த பாடங்கள் என்னவென்பது குறித்து விளக்குகிறார் மருத்துவரும் எழுத்தாளருமான சென் பாலன்.
 
image
”இரண்டாவது அலை தொடங்கும் முன் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருந்தது. ஆனால், தடுப்பூசியின் முக்கியத்துவம் இரண்டாவது அலையின்போது மக்களுக்குப் புரிந்தது. தடுப்பூசி எடுத்துக்கொண்டோர் நோய் தாக்காமல் தப்பித்ததையும் நோய் வந்தாலும் பெரும் பாதிப்பின்றி குணம் அடைந்ததையும் கண்டோம். முன்னர் வீட்டிற்குச் சென்று தடுப்பூசி வழங்கினால் கூட யாரும் போட முன்வராத நிலையில் இரண்டாவது அலைக்குப் பின் இரவு முதல் வரிசையில் நின்று தடுப்பூசிக்காக காத்திருந்து போடும் நிலை வந்துள்ளது. இப்போதைய நிலையில் மூன்றாவது அலை வராமல் தடுக்கவும், வந்தாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பிக்கவும் தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என உலக வல்லரசு நாடுகள் கூட உணர்ந்துள்ளன.
 
இத்தனை நோய்த்தொற்று வரும், இவ்வளவு இறப்புதான் ஏற்படும் என கணிக்கப்பட்ட அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி பரவியது இரண்டாம் அலை. இதனால் மூன்றாம் அலையை எதிர்கொள்ள மிக மோசமான சூழ்நிலையை எதிர்பார்த்து கணிக்க வேண்டியது அவசியமாகிறது. ஆக்சிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவப் பொருட்களையும் இருப்பு வைக்க வேண்டியுள்ளது. முதல் அலையில் இல்லாமல் இரண்டாம் அலையில் திடீரென தோன்றி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கரும்பூஞ்சைத் தொற்றைப் போல மூன்றாம் அலையில் வேறு ஏதாவது புதிய பக்க விளைவு ஏற்படலாம். அதற்கு ஏற்றார்போலவும் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
 
தடுப்பூசிக்காகவும், சிகிச்சைக்காகவும் முதல்முறை அரசு மருத்துவமனைக்குச் சென்றவர்களை கொரோனா காலகட்டத்தில் காணமுடிகிறது. அரசு மருத்துவமனைகள் மீது ஏற்பட்டுள்ள நன்மதிப்பை தக்கவைக்க அரசுகள் முன்வர வேண்டும். மருத்துவச் செலவும் உடல்நலக் குறைவும் எதிர்பாராதது அல்ல. யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உடல்நலக்குறைவு ஏற்படலாம். அதை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் தயாராக இருக்கவேண்டும் எனும் பாடத்தையும் கொரோனா விட்டுச் சென்றுள்ளது.
 
image
வதந்திகளாலும், சுய மருத்துவத்தாலும், காலதாமதத்தாலும் ஏற்பட்ட உயிரிழப்புகள் தினசரி செய்திகளாக வந்துகொண்டே இருந்தன. உடல்நல விஷயத்தில் அலட்சியம் ஆபத்தைத் தரும். கொரோனாவைப் பொறுத்தவரை அலையாகப் பரவத் தொடங்கிவிட்டால் கட்டுப்படுத்துவது சிரமம். முழு முடக்கம் போன்ற தீவிர நடவடிக்கைகள் கூட பலனளிக்க நாட்கணக்கில் ஆகலாம். அதற்குள் உயிரிழப்பும் பொருளிழப்புமாக சேதாரங்கள் நிகழ்ந்து விடும். எனவே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி பேணுவது போன்றவற்றை சமரசமின்றி பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. வருமுன் காப்பது கோழைத்தனமல்ல, விவேகம்.
 
நாட்டின் பாதுகாப்பில் ராணுவத்திற்கு ஒப்பான துறை மருத்துவத்துறை. அடிப்படை மருத்துவக் கட்டமைப்பு வலிமையாக இருப்பதே ஒரு தேசத்தின் பாதுகாப்பு அம்சம் என்பதை இரண்டாம் அலை உணர்த்திச் சென்றுள்ளது. மருத்துவத் துறையின் மீது அரசுகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும், ராணுவத்திற்கு இணையாக நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும். இல்லையென்றால் ஒரு சிறிய நுண்ணுயிரி கூட பெரும் போரில் ஏற்படும் சேதத்தை விட அதிக சேதத்தை உருவாக்கும் என்பதை புரியவைத்துள்ளது. மக்கள் உயிரைக் காப்பதே நாட்டின் பாதுகாப்பு.
 
இந்தக் கொரோனா இரண்டாம் அலை தனி நபர்களுக்கும், குடும்பங்களுக்கும், சமுதாய அமைப்பிற்கும், நாடுகளின் அரசாங்கங்களுக்கும் பல பாடங்களை உணர்த்திச் சென்றுள்ளது. வரலாற்றில் இருந்து பாடம் கற்பதே அந்த பாதிப்புகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உதவும்” என்கிறார் மருத்துவர் சென் பாலன்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.