தமிழ்நாட்டில் ஊடக நிறுவனங்கள் மீது தொடரப்பட்டிருந்த சுமார் 90 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசின் சார்பில் இன்று வெளியான அறிக்கையில்,

MK Stalin

” 2012 முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. அவற்றுள்‌ ‘தி இந்து’ நாளிதழின்‌
ஆசிரியர்‌ மீது 4 வழக்குகளும்‌, ‘டைம்ஸ்‌ ஆஃப்‌ இந்தியா’ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 5 வழக்குகளும்‌, ‘எக்கனாமிக்ஸ்‌ டைம்ஸ்‌’ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 1 வழக்கும்‌, ‘தினமலர்‌’ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 12 வழக்குகளும்‌, ‘ஆனந்த விகடன்‌’ வார இதழின்‌ ஆசிரியர்‌ மீது 9 வழக்குகளும்‌ ‘ஜுனியர்‌ விகடன்‌’ இதழின்‌ ஆசிரியர்‌ மீது 11 வழக்குகளும்‌ நக்கீரன்‌ இதழின்‌ ஆசிரியர்‌ மீது 23 வழக்குகளும்‌ ‘முரசொலி’ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 17 வழக்குகளும்‌ ‘தினகரன்‌’ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 4 வழக்குகளும்‌ போடப்பட்டிருந்தன. மேலும்‌. புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, நியூஸ்‌ 7 தொலைக்காட்சி, ‘சத்யம்‌’ தொலைக்காட்சி, ‘கேப்டன்‌’ தொலைக்காட்‌சி, ‘என்‌.டி.டி.வி’ தொலைக்காட்சி, ‘டைம்ஸ்‌ நவ்’ தொலைக்காட்சி மற்றும்‌ ‘கலைஞர்‌’ தொலைக்காட்சி ஆகியவற்றின்‌ ஆசிரியர்கள்‌ மீது தலா ஒரு வழக்கு வீதம்‌ 7 அவதூறு வழக்குகள்‌ போடப்பட்டிருந்தன.

திராவிட முன்னேற்றக்‌ கழகத்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ “பத்திரிகையாளர்கள்‌ மீது பழிவாங்கும்‌ நோக்கத்தில்‌ போடப்பட்ட அவதூறு வழக்குகள்‌ அனைத்தும்‌ திரும்பப்‌ பெறப்படும்‌” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும்‌ வகையில்‌, பத்திரிகையாளர்கள்‌ மீது போடப்பட்ட 90 வழக்குகளைத்‌ திரும்பப்‌ பெறுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று ஆணையிட்டுள்ளார்கள்‌” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்குகளை ரத்து செய்துள்ள முதல்வருக்கு விகடன் சார்பில் நன்றி. அதேசமயம் ஒரு உண்மையை தெளிவாக்க வேண்டியுள்ளது. விகடன் குழும இதழ்கள்மீது இருந்த வழக்குகள் அனைத்தும் தேர்தலுக்கு முன்பே உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இதுகுறித்து நாம் ஏற்கெனவே ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் இதழ்களில் கடந்த மார்ச் மாதம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

வழக்கறிஞர் ரமேஷ்

இந்நிலையில், இன்று வெளியான அரசு அறிவிப்பில் “‘ஆனந்த விகடன்‌’ வார இதழின்‌ ஆசிரியர்‌ மீது 9 வழக்குகளும்‌, ‘ஜுனியர்‌ விகடன்‌’ இதழின்‌ ஆசிரியர்‌ மீது 11 வழக்குகளும்‌” திரும்பப் பெற்றதாக வந்தது குறித்து நமது வழக்கறிஞர் என். ரமேஷிடம் கேட்டோம்:

“எனக்கும் அந்த அறிக்கையைப் பார்த்ததும் அதிர்ச்சியாகிவிட்டது. அ.தி.மு.க அரசின் சார்பில் போடப்பட்ட 50 அவதூறு வழக்குகளும் சட்டரீதியாக எதிர்கொள்ளப்பட்டு முறைப்படி வழக்காடி, தேர்தலுக்கு முன்பே அவை அனைத்தும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தனிப்பட்ட முறையில் ஜூனியர் விகடன் மீது போட்ட சிவில் அவதூறு வழக்கு ஒன்று மட்டும் இன்னும் நிலுவையில் உள்ளது. மற்றபடி அரசு சார்பில், விகடன் இதழ்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கும் நிலுவையில் இல்லை. தவறான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது” என்று விளக்கமாகச் சொன்னார்.

Also Read: அவதூறு வழக்கு எனும் அபத்த ஆயுதம்!

Also Read: “துணிச்சலுடன் எதிர்கொள்வோம்!”

பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவெடுத்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது. அரசுகள் மாறினாலும் எந்த பத்திரிகைகள் மீதும் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் வழக்குகள் போடுவது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.