தஞ்சாவூரில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் எனக் கூறி டாக்டர்கள், விஐபி-க்கள், தொழிலதிபர்களிடம் போனில் பேசி `அரசுத் திட்டப்பணிக்கு பணம் தேவைப்படுது. உங்களால முடிஞ்ச உதவியைச் செய்யுங்க’ என்று கேட்டு அக்கவுன்ட் நம்பரை அனுப்பிப் பணம் கேட்டு மோசடி செய்ய முயன்ற கணவன், மனைவியை போலீஸார் கைதுசெய்தனர். இதற்கு முன் அந்தத் தம்பதி பல மாவட்டங்களில் கலெக்டர் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட ரீட்டா பபியா

தஞ்சாவூரில் கடந்த வாரம் பிரபல மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள், ஜவுளிக்கடை உரிமையாளர்கள், முக்கியப் புள்ளிகள் பலருக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், `நான் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் நேர்முக உதவியாளர் பேசுறேன். கொரோனா தடுப்பு பணி மற்றும் அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பணம் தேவைப்படுது. நீங்கள் ரூ.50,000 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்’ என அதிகாரிபோலவே பேசி, `பேங்க் அக்கவுன்ட் நம்பர் மற்றும் டீடெய்ல் அனுப்பிவைக்கிறேன். பணத்தை அக்கவுன்ட்ல போடுங்க’ எனக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.

கலெக்டர் பணம் கேட்கச் சொல்லி அவர் உதவியாளரே பேசுறாரே என்று சிலர் பணம் செலுத்த முடிவு செய்தனர். இருந்தாலும் மற்ற சிலருக்கு ஏதோ பொறி தட்டி சந்தேகம் எழ, கலெக்டரைத் தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்த கலெக்டர், `நான் யாரிடமும் பணம் கேட்கச் சொல்லலை. என் பேரைத் தவறாக பயன்படுத்தி யாரோ பணம் பறிக்க முயற்சிக்குறாங்க. நீங்க பணத்தை அக்கவுன்ட்டுக்கு அனுப்பி ஏமாந்துறாதீங்க’ என்று சொல்லியிருக்கிறார்.

தஞ்சை கலெக்டர் அலுவலகம்

இதையடுத்து உடனடியாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இதில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார். பின்னர் சைபர் க்ரைம் போலீஸார் இது குறித்து துரித விசாரணையில் இறங்கியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த மோசடியில் ஈடுபட்ட தம்பதியான கணவன், மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். `போனில் பேசியவர் சொன்ன அக்கவுன்ட் நம்பரை ஆய்வு செய்ததில், அந்த நம்பர் கோயம்புத்துார் மாவட்டம் ஓண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரெஜினா (40) என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. உடனடியாக குறிப்பிட்ட வங்கிக் கணக்கை முடக்கிவிட்டு விசாரணைக்காக கோயம்புத்துார் சென்றோம். அங்கு ரெஜினா குறித்து விசாரித்தோம். அங்கு அவர் பியூட்டி பார்லர் நடத்திவருவது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில் ரெஜினாவுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆசைகாட்டி அவரது வங்கிக் கணக்கை வாங்கி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தானபாரதியும் (65) அவரின் மனைவி ரீட்டா பபியாவும் (50) மோசடி செய்தது தெரியவந்தது.

Also Read: 15 வருடங்களுக்கு முன்பே மோசடி மன்னர்களாக வலம்வந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ்; பெற்றோர் கைது!-நடந்தது என்ன?

இதையடுத்து அந்தத் தம்பதியைக் கண்காணித்ததில் அது உண்மையெனத் தெரியவந்தது. அதன் பிறகு ரீட்டா பபியா, தலைமறைவாக இருந்த சந்தான பாரதி இருவரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல கலெக்டர்களின் பெயரைச் சொல்லி அவர்கள் ஏமாற்றிவந்த அதிர்ச்சித் தகவலும் கிடைத்தது. ரீட்டா பபியா, சந்தானபாரதியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர். இருவரும் சொகுசாக வாழ ஆசைப்பட்டு பல்வேறு மோசடிச் செயல்களைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் திருட்டு வழக்கு, திருப்பூரில் மோசடி வழக்கு எனத் தொடர்ந்து கைவரிசை காட்டிவந்ததில் இரண்டு முறை கைதுசெய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பின்னர்தான் `கலெக்டர் பெயரைப் பயன்படுத்தி பணம் கேட்டால் எல்லோரும் நம்புவாங்க. ஈஸியா பணம் கிடைக்கும். எந்த ரிஸ்க்கும் இருக்காது’ எனத் திட்டமிட்டு அதை அரங்கேற்றத் தொடங்கியுள்ளனர்.

கலெக்டர் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்தவர்

கரூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கலெக்டரின் உதவியாளர் பேசுவதாகக் கூறி முதலில் சந்தானபாரதி போனில் பேசுவார். பின்னர் தன் மனைவி ரீட்டா பபியாவின் அக்கவுன்ட் நம்பரை அனுப்பிவைப்பார். கலெக்டர் உதவி கேட்பதாக நினைத்துக்கொண்டு பலரும் ரூ. 50,000 வரை செலுத்தியுள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராதபடி நேர்த்தியாகப் பேசுவதில் கில்லாடியாக வலம்வந்திருக்கிறார் சந்தானபாரதி. ஆனால் இவை கலெக்டர் பெயரில் செய்யப்பட்ட மோசடி என்பது தெரியவந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் தங்கள் அக்கவுன்ட் நம்பரை கொடுத்திருந்ததால் சிக்கிக்கொண்டனர். சிறையிலிருந்ஹ்டு வெளிவந்த பிறகுதான் அவர்கள் புது டெக்னிக்கை பயன்படுத்தத் தொடங்கினர். தங்களின் அக்கவுன்ட் நம்பரைக் கொடுத்தால் சிக்கிக்கொள்கிறோம், வேறு யார் நம்பரையாவது அனுப்பினால் மாட்டிக்கொள்ள மாட்டோம் எனத் திட்டமிட்டனர்.

முதலில் இதற்காகப் பேசுவதற்கு தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுடைய ஆதாரைப் பயன்படுத்தி, அவர்களது பெயர்களில் சிம் கார்டு வாங்கிப் பேசிவந்துள்ளனர். அதிலும் சிக்கல் வந்துள்ளது. பின்னர் பகடைக்காயாக பியூட்டி பார்லர் நடத்தும் பெண்கள், மதுபழக்கத்துக்கு ஆளான ஆண்கள் ஆகியோரைக் குறிவைத்து செயல்பட்டுள்ளனர்.

எந்த மாவட்டத்தில் மோசடி செய்வது என்பதை முடிவு செய்துகொண்டு அந்த மாவட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து இந்தத் தம்பதியர் தங்குவார்கள். அந்தப் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தும் பெண்களிடம், “சினிமா ஷூட்டிங் நடக்க இருக்கிறது. பெரிய பட்ஜெட் படம், கிட்டத்தட்ட 100 ஆர்டிஸ்ட் நடிக்கப்போறாங்க. நீங்க மேக்கப் போட வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் ஆகும்?” எனக் கேட்டு ஆசையைத் தூண்டுவார் சந்தானபாரதியின் மனைவி. சினிமா ஷூட்டிங்குக்கு மேக்கப் போடம் ஆசையில் அவர்களும் வேறு விவரம் எதுவும் கேட்காமல் ஒப்புக்கொள்வார்கள். `அட்வான்ஸ் பணத்தை தயாரிப்பு தரப்பு மேனேஜர் மூலமா அக்கவுன்ட்ல போடச் சொல்றேன். உங்க நம்பர் கொடுங்க; என்று வாங்கி தன் கணவர் சந்தானபாரதியிடம் கொடுத்துவிடுவார்.

சந்தானபாரதி, தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகிலுள்ள சிலரை நோட்டமிடுவார். அவர்கள் மது குடிக்கம் ஆளா இருந்தால், தன் செலவில் தினமும் மது வாங்கிக் கொடுத்து நன்கு பழகிக்கொள்வார். பின்னர் தனக்கு யாரும் இல்லை எனக் கூறி அவர் ஆதாரைப் பெற்று, சிம்கார்டு வாங்கி அந்த நம்பரிலேயே `கலெக்டர் உதவியாளர் பேசுறேன்’ என்று பேசுவார். போன் பேசுவதற்கு வேறு ஒருவர் பெயரில் சிம், பணம் பெறுவதற்கு வேறு ஒரு நபரின் அக்கவுன்ட் நம்பர் எனச் சதித்திட்டத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

Also Read: திருத்தணி: `அரசு வேலை ஆசை; பல லட்சம் ரூபாய் மோசடி!’ – முகநூல் விளம்பரத்தால் சிக்கிய நபர்

பேசுபவர்கள் பணம் செலுத்திவிட்டால், உடனே அந்த பியூட்டி பார்லர் பெண்ணைச் சந்தித்து, `வேறு ஒரு நம்பருக்குப் போட வேண்டியதுக்கு பதிலா உங்க அக்கவுன்ட்ல பணத்தைப் போட்டுட்டாங்க. உங்களுக்கு அப்புறம் அட்வான்ஸ் போடுறதா சொன்னாங்க’ என்று திருப்பி வாங்கிவிடுவார்கள் அல்லது குறிப்பிட்ட பணத்தை அட்வான்ஸா வெச்சுகுங்க, பாக்கிப் பணத்தை எடுத்துக் கொடுங்க என்று பல காரணங்களைக் கூறி அவர்களின் அக்கவுன்ட் நம்பருக்கு வந்த பணத்தைத் தம்பதியர் வாங்கிவிடுவார்கள்.

இதனால் யாருக்கும் சந்தேகமும் வரவில்லை. போலீஸில் சிக்கிக்கொள்ளவும் இல்லை. கடந்த 2017-ம் ஆண்டு, வேலுார், நீலகிரி, 2019-ம் ஆண்டு கரூர் உள்ளிட்ட கலெக்டர்கள் பெயரைப் பயன்படுத்திப் பணம் பறித்துள்ளனர். இதேபோல் தஞ்சாவூர் கலெக்டர் பெயரைப் பயன்படுத்தி மோசடிச் செயலில் இறங்கியுள்ளனர். பணம் கேட்டவர்கள் சுதாரித்துக்கொண்டு கலெக்டரின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றனர்.

கைதுசெய்யப்பட்ட ரீட்டா பபியா

அவர் உடனடியாக இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சைபர் க்ரைம் போலீஸ் டீமும் தீவிர ஆக்‌ஷனில் இறங்கி விசாரணை மேற்கொண்டதில் கலெக்டர் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுப்பட்ட கணவன், மனைவி பற்றி தெரியவந்ததுடன் அவர்களும் சிக்கிக்கொண்டனர். முதலில் ரீட்டா பபியாவை கைது செய்து திருச்சியில் பெண்கள் சிறையில் அடைத்தோம். பின்னர் தலைமறைவாக இருந்த அவரின் கணவர் சந்தானபாரதியைக் கைதுசெய்தோம். மேலும் அவர்களுடன் விசாரணை தொடர்ந்து வருகிறது. இவர்களுக்கு ஒரு மாவட்டத்திலுள்ள முக்கியஸ்தர்களின் நம்பர் எப்படிக் கிடைக்கிறது என்பது குறித்தெல்லாம் விசாரணை நடைபெற்றுவருகிறது” எனத் தெரிவித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.