சிறுவர்களுக்காகவே தனியாக இன்ஸ்டாகிராம் சேவையை உருவாக்கிக் கொண்டிருப்பதை ஃபேஸ்புக் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள விதமே, இந்த சேவை தொடர்பான கவலைகளை உறுதியாக்கியுள்ளது. புகைப்படப் பகிர்வு சார்ந்த சமூக ஊடக சேவையான இன்ஸ்டாகிராம் நமக்கு பரிட்சயம்தான். ஆனால் இதென்ன புதிதாக சிறுவர்களுக்கென இன்ஸ்டாகிராம் சேவை என உங்கள் மனதுக்குள் கேள்வி எழலாம். இந்த சேவை பெற்றோர்கள், குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டவர்களையும் ஏன் கவலையில் ஆழ்த்தியுள்ளது என்பதுபற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்.

இன்ஸ்டா என்றாலே புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு இன்ஸ்டாகிராம் முன்னணி சமூக ஊடக சேவைகளில் ஒன்றாக இருக்கிறது. அடிப்படையில் இன்ஸ்டா புகைப்படப் பகிர்வு சேவைதான் என்றாலும், பிரபலங்கள் மத்தியிலும் இளசுகள் மத்தியிலும் இந்த சேவை, செல்வாக்கு மிக்கதாகவே இருக்கிறது. இன்ஸ்டாவில் கோலோச்சும் செல்வாக்காளர்களும்கூட இருக்கின்றனர். இன்ஸ்டா சார்ந்த இணைய கலாசாரம் தற்போது வெகுவாக உருவாகியிருக்கிறது. இதனாலேயே இன்ஸ்டாவை மையமாகக் கொண்டு கண்ணுக்குத் தெரியாத மார்க்கெட்டிங் வலையும், விளம்பர வலையும் பின்னப்பட்டுள்ளன.

image

இன்ஸ்டாவின் சாதக, பாதகங்கள் பற்றியே நாம் தனியே விவாதிக்கலாம். அந்த விவாதத்துக்கு தொடக்க புள்ளியாக இதன் தாய் நிறுவனமான ஃபேஸ்புக், புதியதொரு இன்ஸ்டாகிராம் சேவையை சிறுவர்களை மனதில் கொண்டு உருவாக்கி வருவதாக தகவல் கசிந்ததை எடுத்துக்கொள்வோம். இது பலருக்கும் திகைப்பையும், கவலையையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இங்கே சிறுவர்கள் என்பது, 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குறிக்கிறது. இவர்கள் பயன்படுத்துவதற்காக என்றே, பிரத்யேக குழந்தைகளுக்கான இன்ஸ்டாகிராம் சேவையை ஃபேஸ்புக் உருவாக்கி கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

ஃபேஸ்புக் இதுபற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் பஸ்ஃபீட் இணையதளம், ஃபேஸ்புக்கிற்குள் புழங்கிய குறிப்பை அடிப்படையாக கொண்டு, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

கணிக்கப்பட்டது போலவே இந்தத் தகவல் வெளியானவுடன், பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக ஊடக பயன்பாடு தொடர்பாக பல்வேறு பிரச்னைகளும், விவாதங்களுக்கும் இருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு என்று இன்ஸ்டாகிராம் சேவை அறிமுகாவது நிச்சயம் பிஞ்சு உள்ளங்களை பாதிக்கும் வகையிலே அமையும் என்று கடும் விமர்சனமும், எதிர்ப்பும் உண்டானது.

image

அமெரிக்காவில் மக்கள் பிரதிநிதிகளும், சமூக உளவியல் வல்லுநர்களும் ஃபேஸ்புக் திட்டத்தை கடுமையாக விமர்சித்ததோடு, இந்த உத்தேச சேவையை கைவிடுமாறு அரசு வழக்கறிஞர்கள் சிலர் கூட்டாக ஃபேஸ்புக் நிறுவனருக்கு கடிதமே எழுதியுள்ளனர்.

13 வயதுக்கு குறைவான குழந்தைகளை சமூக ஊடக செயல்பாட்டிற்கு அறிமுகம் செய்வதில் உள்ள அபாயங்களையும், விபரீதங்களையும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர். சிறுவர்கள் உருவக் கேலிக்கு உள்ளாகலாம், இணைய தாக்குதலுக்கு இலக்காகலாம் போன்றவற்றை எல்லாம் குறிப்பிட்டிருந்தனர்.

குறிப்பாக சமூக ஊடக செயல்பாடு ஏற்படுத்தக்கூடிய அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் சமாளிக்கும் திறன் இல்லாத பருவத்தில், குழந்தைகளுக்கென இன்ஸ்டாகிராம் சேவையை அறிமுகம் செய்வது ஆபத்தானது என குழந்தைகள் நலன் வல்லுநர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இளந்தளிர்களின் பாதுகாப்பு கருதிதானே 13 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடக சேவைகளை பயன்படுத்த அனுமதிக்க கூடாது எனும் கட்டுப்பாடு இருக்கும்போது, குழந்தைகளுக்காக என்று தனியே இன்ஸ்டாகிராம் சேவையை அறிமுகம் செய்வதன் விபரீதத்தை எளிதாக நாமும் புரிந்துகொள்ளலாம் அல்லவா?

image

ஆனால், சிறுவர்களில் பலரும் வயது விஷயத்தில் பொய் சொல்லி இன்ஸ்டாகிராம் சேவையை பயன்படுத்தி வருவதால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பிரத்யேகமான சேவையை உருவாக்க இருப்பதாக, இதற்கு ஃபேஸ்புக் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் விமர்சனங்கள், எதிர்ப்புகள் பற்றி எல்லாம் கவலை இல்லை என்பது போல, குழந்தைகளுக்கான இன்ஸ்டாகிராம் சேவையை உருவாக்குவதில் தீவிரமாக இருப்பதை ஃபேஸ்புக் உறுதி செய்துள்ளது. ஆனால், ஃபேஸ்புக் இதை நேரடியாக அறிவிக்காமல், ‘சமூக ஊடக பயன்பாட்டிற்கான உறுதி செய்வது எப்படி?’ என்பது தொடர்பான பதிவில் இந்த தகவலை மிக நேர்த்தியாக தெரிவித்துள்ளது.

13 வயதுக்கு உட்பட்டவர்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக சேவையை பயன்படுத்தக்கூடாது எனும் கட்டுப்பாடு இருந்தாலும், பல சிறுவர்கள் பொய்யான வயதைச் சொல்லி உறுப்பினராகிவிடுவதாக குறிப்பிட்டுள்ள ஃபேஸ்புக், இந்த சிக்கலை எதிர்கொள்ள அடையாள அட்டை போன்றவற்றை காண்பிக்கச் சொன்னாலும் அவற்றிலும் சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளது.

image

இதன் விளைவாகவே, பயனாளிகளின் வயதை கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு சார்ந்த உத்திகளை கடைப்பிடிப்பதாக குறிப்பிட்டுள்ளது. பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும்போது வயது குறிப்பிடப்படுவது மற்றும் பிறந்தநாள் வாழ்த்து வாசகங்களில் இடம்பெறும் குறிப்பிட்ட வார்த்தைகள் ஆகியவற்றை எல்லாம் கொண்டு ஒருவர் 18 வயதுக்கு மேற்பட்டவரா என்பதை கண்டறிந்து, அவர்களுக்கான செய்தி பகிர்வுகள் பாதுகாப்பாக அமைவதை உறுதி செய்யும் வழிமுறையை உருவாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் சேவைகளில், வயதுக்கு ஏற்ற செய்திகள், தகவல்கள் தோன்றுவதை உறுதி செய்ய இந்த நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக குறிபிட்டுள்ளதோடு, இதே நுட்பத்தை குழந்தைகளுக்கான ஃபேஸ்புக் சேவையிலும் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஆக, சுற்றி வளைத்து குழந்தைகளுக்கான ஃபேஸ்புக் உருவாக்கத்தை உறுதி செய்துள்ளது. எப்படியும் 13 வயதுக்கு குறைவானவர்கள் பொய் தகவல் மூலம் இன்ஸ்டாகிராமை பயன்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், குழந்தைகள் பாதுகாப்பிற்காக அவர்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பொருத்தமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தங்கள் வயது பற்றி பொய் சொல்லி இன்ஸ்டாகிராமில் இணையும் ஊக்கத்தை குறைக்கும் வகையில், குழந்தைகளுக்கு என்று தனியே ஒரு சேவையை உருவாக்குவது சரியாக இருக்கும் என்றும் ஃபேஸ்புக் குறிப்பிட்டுள்ளது. குழந்தைகளுக்கு பாதுகாப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த சேவையை உருவாக்க, இத்துறை வல்லுநர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

image

குழந்தைகளுக்கான ஃபேஸ்புக் எனும் ஃபேஸ்புக்கின் வாதத்தை வல்லுநர்கள் ‘தேவையில்லாத ஆணி’ என்கின்றனர். சில மாதங்களுக்கு முன் இது தொடர்பாக கார்டியன் நாளிதழ் வெளியிட்டிருந்த கட்டுரையில், குழந்தைகளுக்கான இன்ஸ்டாகிராம் உருவாக்க கூடிய ஆபத்துகளை பட்டியலிட்டிருந்தது. சமூக ஊடக கணக்கை நிர்வகிக்கும் சவாலை எதிர்கொள்ளும் திறன் அற்ற வயதில் பிள்ளைகள் சமூக ஊடகத்தை பயன்படுத்துவது அவர்கள் மன நலனுக்கு ஆபத்தாக அமையும் என உணர்த்திய இந்தக் கட்டுரைக்கு, ‘ஒருவருமே கேட்டிராத சமூக ஊடக சேவை – இன்ஸ்டாகிராம் ஃபார் கிட்ஸ்’ என மிகப் பொருத்தமாக தலைப்பிடப்பட்டிருந்தது.

ஆக, விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் கண்டுகொள்ளாமல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வலையை குழந்தைகளுக்கும் விரிக்க தயாராகி இருக்கிறது. இதன் விபரீதத்தை உணர்த்தும் வகையில், விமர்சனங்களும், விழிப்புணர்வும் அதிகரிக்கச் செய்யும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

– சைபர்சிம்மன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.