கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் ‘மாஸ்டர் கார்டு’ (Master Card) விநியோகத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இதற்கு ‘டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தகவல்களை சேகரிக்கும் டேட்டா மையங்கள், இந்தியாவில் இருக்க வேண்டும்’ என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த உத்தரவை ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனம் பின்பற்றாமல், ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு தடை வாங்க முடியுமா என திட்டமிட்டு வந்தது. அதனொரு பகுதியாக, ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனம் புதிய கார்டுகளை விநியோகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது., இது தவிர, ‘டின்னர்ஸ் கிளப்’ மற்றும் ‘அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட கார்டுகளையும் ரிசர்வ் வங்கி தடை செய்திருக்கிறது. இதனால், ஏற்கெனவே சந்தையில் உள்ள கார்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றாலும், புதிதாக கார்டுகளை விநியோகம் செய்ய முடியாது.

image

இந்திய கார்டு சந்தையில் மாஸ்டர் கார்டின் பங்கு 30 சதவீதமாக இருக்கிறது. விசா மற்றும் ரூபே என்னும் இரு கார்டு நிறுவனங்கள் மட்டுமே இந்திய சந்தையில் இருப்பதால் மாஸ்டர் கார்டின் சந்தையை இந்த இரு நிறுவனங்கள் கைப்பற்றும் நடவடிக்கையில் உள்ளன.

தனியார் வங்கிகள் பாதிப்பு: இந்தத் தடையால் பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகளே அதிக பாதிப்படையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஆர்.பி.எல். வங்கி, யெஸ் பேங்க் மற்றும் பஜாஜ் பின் சர்வ் ஆகிய நிறுவனங்கள் 100 சதவீதம் மாஸ்டர் கார்டு நிறுவனத்தை நம்பியே இருக்கின்றன. ஹெச்டிஎஃப்சி, இண்டஸ் இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை 35 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை மட்டுமே மாஸ்டர் கார்டு நிறுவனத்தை நம்பி உள்ளன. எஸ்பிஐ கார்டும் மாஸ்டர் கார்டு பயன்படுத்துகிறது. ஆனால், எஸ்பிஐ கார்டுக்கு பாதிப்பு குறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை ரூபே கார்டுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி 60 கோடி கார்டுகளை வழங்கியுள்ளன. ஆனால், இவற்றில் பெரும்பகுதி டெபிட் கார்டுகள்தான். கிரெடிட் கார்டுகள் சுமார் 9.7 லட்சம் கார்டுகளை மட்டுமே வழங்கியுள்ளன. தற்போது மாஸ்டர் கார்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், கிரெடிட் கார்டு சந்தையிலும் ரூபே கார்டு பலமாகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

image

ஒரு கார்டு நிறுவனத்தில் இருந்து மற்றொரு கார்டு நிறுவனத்துக்கு மாறுவதற்கு குறைந்தபட்சம் 8 முதல் 12 வாரங்கள் ஆகும் என தெரிகிறது. இதனால் ரிசர்வ் வங்கி, ஒவ்வொரு வங்கியும் இதுதொடர்பாக என்ன திட்டத்தை வைத்திருக்கின்றன என்பதை கேட்டறிந்ததாக தெரிகிறது. மாஸ்டர் கார்டு தடைக்குப் பிறகு ஒவ்வொரு வங்கியும் கார்டு வழங்குவதற்கு என்னென்ன நடவடிக்கை எடுத்து வருகின்றன என்பதை கேட்டுவருகிறது.

மற்ற நாடுகள் என்ன செய்கின்றன? – தகவல் யுகத்தில் ஒவ்வொரு நாடுகளும் தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்த விதியை இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல முக்கிய நாடுகளும் விதித்திருக்கின்றன. சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, இந்தோனேஷியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் வாடிக்கையாளர்களின் தகவல்களை சேகரிக்கும் சர்வர்களை அந்தந்த நாட்டின் எல்லைக்குளே இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் வாடிக்கையாளர்கள் தகவல்கள் ஐரோப்பிய யூனியனுக்குள்தான் இருக்க வேண்டும். கிட்டத்தட்ட இதே விதிமுறையைதான் இந்தியாவும் உருவாக்கி இருக்கிறது.

தகவல் பாதுகாப்பில் சமரசம் என்னும் பேச்சுக்கே இடமில்லை என்பதை ரிசர்வ் வங்கி சொல்லாமல் சொல்லிவிட்டது. மாஸ்டர் கார்டுக்கு இந்தியாவில் 30 சதவித சந்தை இருக்கிறது. தடைக்குப் பிறகு மாஸ்டர் கார்டு வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்துக்கு மாறி இருப்பார்கள் என்பதால், இன்னும் சில மாதங்களுக்கு பிறகு அனுமதி கிடைத்தாலும் இதே அளவுக்கு சந்தையை கைப்பற்ற முடியுமா என்பது சந்தேகமே.

– வாசு கார்த்தி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.