அர்ஜென்டினாவின் தென் பகுதியான படாகோனியா பகுதியிலுள்ள உப்புநீர் ஏரியொன்றிலிருந்த தண்ணீர்யாவும், அச்சமளிக்கும் வகையில் அடர்நிற பிங்க் நிறத்துக்கு மாறியுள்ளது. ரசாயன கழிவுகள், சுற்றுப்புற மாசுகள் யாவும் அதிகப்படியாக நீரில் கலந்தால் இந்த நிறமாற்றம் ஏற்படுமென்று சுற்றுச்சூழல் நிபுணர்களும் செயற்பாட்டாளர்களும் கருத்து கூறி வருகின்றனர். இந்த ஏரியின் புகைப்படங்கள் யாவும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.

ஆண்டி பாக்டீரியல் தன்மை கொண்ட சோடியம் சல்ஃபைட் என்ற ரசாயனம் நீரில் கலந்தால் இப்படி அடர் பிங்க் நிறத்தில் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இந்த ரசாயனம், மீன் தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்படுவதற்காகவும் பிற தேவைகளுக்காகவும் அதிகம் பயன்படுத்தப்படும். படாகோனியா பகுதியிலுள்ள சப்பட் ஆற்றில் (Chubut river), மீன் தொழிற்ச்சாலையொன்றிலிருந்து கழிவுகள் கொட்டப்பட்டதாகவும், அந்தக் கழிவுகள் அங்கிருந்து கார்ஃபோ (Corfo) பகுதியிலுள்ள ஏரி உட்பட பல நீர்நிலைகளுக்கும் இந்த ரசாயனம் கலந்த நீர் சென்றிருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் சொல்லியுள்ளது. நிறம் மாறியது மட்டுமன்றி, படாகோனியா ஏரி உட்பட இந்தக் கழிவு கலந்த அனைத்து நீர் நிலையிலும் மோசமாக துர்நாற்றம் வீசியதாகவும் அப்பகுதி மக்கள் ஊடகங்களில் கூறியுள்ளனர்.

image

சுற்றுச்சூழல் நிபுணரும் வைராலஜிஸ்டுமான ஃபெடிரிக்கோ என்பவர் இதுபற்றி பிரான்ஸ் ஊடக நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், “மீன் தொழிற்சாலைகளின் கழிவுகளிலுள்ள சோடியம் சல்ஃபைட் தான் ஏரியன் இந்த நிறமாற்றத்துக்கு காரணம்” என்று கூறியுள்ளார்.

அந்நாட்டை சார்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் லடா என்பவர் கூறுகையில், “சட்ட விதிப்படி, ரசாயனங்கள் யாவும் கழிவுகள் வெளியேற்றப்படுவதற்கு முன்னரே முறையாக அப்புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்ட விதிமீறலை யார் தட்டிக்கேட்க வேண்டுமோ, அவர்களே இப்படி மக்களுக்கு விஷத்தை தருவதை அனுமதிக்கின்றனர்” என அந்நாட்டு அரசை குறைகூறியுள்ளார்.

கடந்த வாரங்களில், மீன் தொழிற்சாலியிருந்து பல ட்ரக்குகளில் குப்பைகளை இங்கு வந்து நிறுவனத்தினர் கொட்டினார்கள் என்றும், அதற்காக அவர்கள் சாலைகளில் வரிசையாக அணிவகுத்து நின்றார்கள் என்றும் அப்பகுதி மக்கள் செய்திகளில் கூறுயுள்ளனர். பல ட்ரக்குகளில் குப்பைகளை அள்ளி வரும் அவர்களை, தடுத்து தடுத்து தாங்கள் ஓய்ந்துவிட்டதாக வேதனையுடன் உள்ளூர் செய்திகளில் மக்கள் பதிவுசெய்துள்ளனர்.

image

தற்போது ஏரி நிறமாறியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அதன்பின்னர் அந்நாட்டு அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை இவ்விஷயத்தில் முறையான வழிகாட்டுதலை கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும் அந்த தொழிற்சாலை இனி முறையாக இயங்குமென்றும், குப்பைகளை சரியாக அகற்றுக்குமென்றும் உறுதியளித்துள்ளது அந்நாட்டு அரசு.

அந்நாட்டின் சுற்றுச்சூழல் முதன்மை அதிகாரி ஜான், “இந்த சிவப்பு நிறம், எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. சில நாட்களில் இவை மறைந்துவிடும்” என்றும் கூறியுள்ளார்.

இந்தத் தொழிற்சாலை, அப்பகுதி மக்களுக்கு பிரதான வேலைவாய்ப்புக்கான அம்சமாக இருக்கிறது. ஏறத்தாழ 60,000 பேராவது இதனால் பயன்பெற்றிருப்பர் என கணிக்கப்படுகிறது. அர்ஜென்டினாவில், பல டஜன் வெளிநாட்டு தொழிற்சாலைகள் அந்நாட்டு அரசுக்கு கீழ் செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.

image

ஆனால் மக்கள் பொருளாதார ரீதியாக பயன்பெறுகிறார்கள் என்பதற்காக மட்டுமே இதை ஆதரிக்க முடியாது எனக்கூறியுள்ளார் அந்நாட்டு சுற்றுச்சூழல் நிபுணர் லடா. அவர் இதுபற்றி கூறுகையில், “மீன் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் வேலையை உருவாக்குகிறது என்பது உண்மைதான். அனைத்துமே பல மில்லியன் டாலர் லாபம் பார்க்கும் நிறுவனங்கள். ஆனாலும்கூட அவை தங்களின் கழிவுகளை, 35 மைல் தொலைவில் உள்ள புவேர்ட்டோ மாட்ரினில் இருக்கும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல விரும்பவில்லை. தனி சுத்திகரிப்பு ஆலையை நெருக்கமாக உருவாக்கவும் அவை இங்கு விரும்பவில்லை. மீண்டும் மீண்டும் குப்பைகளை ஆற்றிலேயே விசுகின்றன” எனக்கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.