நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுப்பட்ட கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த15 ஆண்டுகளாகவே அவர்கள் ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி பேர்வழிகளாக இருவரும் வலம் வந்துள்ளனர் என்றும், அப்போதே அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுப்பட்டதாக ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்றழைக்கப்படும் சகோதரர்களான எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் மீது எழுந்த புகார் குறித்து கடந்த 25.7.21 தேதியிட்ட ஜூவி இதழில் `பிராண்ட இமேஜ்…கோடிகளில் மோசடி!” சிக்கலில் கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாகவே ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மோசடி பேர்வழிகளாக வலம் வந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்கள் பலரிடம் லட்சகணக்கில் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அவர்களுடைய பெற்றோர் ராமதாஸ், வேதவல்லி இருவரும் கைது செய்யப்பட்டு பத்து நாள் சென்னை சிறையில் இருந்த தகவலும் அம்பலமாகி யிருக்கிறது. இது குறித்து 16.04.2008 -ல் வெளியான ஜூவி இதழில் ‘அம்பி’களை அம்போவாக்கும் அடேங்கப்பா மாமி! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டதும் குறிப்பிடதக்கது.

ஹெலிகாப்டர்

இது குறித்து சிலரிடம் பேசினோம், `கும்பகோணம் ஜபருல்லா – பைரோஜ்பானு தம்பதியினர், `ஹெலிகாப்டர் பிரதர்ஸ் எங்களிடம் ரூ.15 கோடி பெற்று கொண்டு மோசடி செய்து விட்டதாக போலீஸில் புகார் கொடுத்ததுமே சகோதரர்கள், நிதி நிறுவனத்தில் முக்கிய பணியிலிருந்த சிலர் மற்றும் சகோதரர்களுக்கு உறுதுணையாக இருந்த திருமண மண்டப உரிமையாளரான ரகு உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கப்பட்டது. வசமாக சிக்கப் போகிறோம் என்பதை அறிந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் போலீஸ் நெருங்குவதற்குள் சுதாரித்து கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.

பின்னர் அவர்களது நிதி நிறுவனத்தின் பொது மேலாளரான ஸ்ரீகாந்த், அக்கவுன்டன்ட்டாக இருந்த அக்கா, தம்பியான மீரா, ஸ்ரீதர் உள்ளிட்ட மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். ஹெலிகாப்டர் பிரதர்ஸ் தங்களிடம் உள்ள சொகுசு கார்களை நிறுத்துவதற்கென்றே தனி வீடு எடுத்து வைத்திருந்தனர். அதிலிருந்த சுமார் ரூ. 8 கோடி மதிப்புடைய 12 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் சகோதரர்கள் தொடர்பான வழக்கில் தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு மெயிலில் புகார்கள் வந்து கொண்டே இருந்ததையடுத்து இதற்கான விசாரணை வேகமெடுத்தன.

ஹெலிபேடு

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு, `பெயர் குறிப்பிடாமல் மெகா மோசடி என்ற தலைப்பில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் ரூ. 600 கோடி மோசடி செய்துள்ளனர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?’ என கும்பகோணம் முழுவதும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை உண்டாக்கினர். வெளிநாடு ஒன்றில் உள்ள லாக்கரில் ரூ 3,000 கோடி இருப்பதாகவும் கொரோனா லாக்டெளன் உள்ளிட்ட காரணங்களால் அதை எடுக்க முடியவில்லை எனவும் பிரதர்ஸ் தங்களுக்கு நெருக்கமான சிலரிடம் கூறி வந்ததாகவும் போலீஸுக்கு தகவல் கிடைத்துள்ளது. மோசடியின் மூலம் வசூல் செய்த பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் மீரா, ஸ்ரீதரிடம் நடத்திய விசாரணையில், `சிங்கப்பூர்- மலேசியா அருகே உள்ள தீவு ஒன்றிற்கு பிரதர்ஸ் இருவரும் ஹெலிகாப்டர்ல அடிக்கடி போவாங்க. வசூல் செஞ்ச பணத்தையும் ஹெலிகாப்டர்ல தீவுக்கு எடுத்துட்டு போவாங்க. ஆனால் அங்கு என்ன செய்றாங்க பணம் என்ன ஆனது என எதுவுமே எங்களுக்கு தெரியாது’ என கூறியுள்ளனர். தஞ்சாவூரில் உள்ள மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் வடநாட்டு சாயல் கொண்ட இளைஞர் ஒருவரிடம் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்செய் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டார். அந்த இளைஞரும் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்ததாக போலீஸ் தரப்பிலேயே பேசி வருகின்றனர்.

புகார் அளித்த தம்பதி

இந்நிலையில் 2005-ம் ஆண்டிலேயே ஹெலிகாப்டர் பிரதர்ஸால் பாதிக்கப்பட்ட சிலரிடம் பேசினோம், “எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் இருவரும் சிங்கப்பூர்ல கிருஷ் எஜிகேஷன் இன்ஸ்டியூசன் என்ற பெயரில் டிரஸ்ட் நடத்தி வந்தனர். அவர்களது பெற்றோர் ராமதாஸ் – வேதவல்லி இருவரும் சென்னை மடிப்பாக்கத்துல சாதரண வீட்டுல வசித்து வந்தனர். தன் மகன்கள் இருவரும் லண்டன் அரண்மனை குடும்பத்துல நெருக்கமா இருக்காங்க. தங்க நகை தொழில் செய்றாங்க.

தங்கத்தட்டுல, தங்க ஸ்பூன்ல தான் அவங்க சாப்பிடுவானு ஏகத்துக்கும் அள்ளி விட்டதை நாங்க உண்மையென நம்பினோம். கணேஷ் மாமனார் ஜம்புநாதன் திருச்சியில் இருந்தார். கணேஷ் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி வந்த நிலையில் மாமனார் மற்றும் அவர்களது பெற்றோர் மூலமாக 2005-ல் 8 பேர் வேலைக்காக ரூ.33 லட்சம் கணேஷிடம் பணம் கொடுத்தோம். மேலும் பலர்கிட்ட அப்ப பணம் வசூல் செஞ்சாங்க. அப்பவே வசூலித்த பணம் ரூ 1 கோடி இருக்கும். பல மாதங்களாகியும் யாருக்கும் வேலை வாங்கி தரவே இல்லை. சகோதரர்களிடமிருந்தும் முறையான பதிலும் இல்லை. அப்பதான் ஏமாந்துட்டாங்கன்னு தெரிய வந்துச்சு.

Also Read: கும்பகோணம்: ஹெலிகாப்டர் சகோதரர்கள் நிதி நிறுவன வழக்கு; அக்கவுன்டன்ட் இருவர் கைது!

இதையடுத்து அவங்க வீட்டுக்கு சென்று கேட்டோம். “பொம்பளைங்க இருக்க வீட்டுல வந்து கைய பிடிச்சு தப்பா நடந்துக்கிட்டேனு புகார் கொடுத்திடுவோம்னு” குடும்பமே சேர்ந்து மிரட்டுனாங்க. பிரதர்ஸ நம்பி பணத்தை பறிகொடுத்த பலர் நடுத் தெருவுக்கு வந்தாங்க. எல்லோரும் பெரும் மன உளைச்சலில் தவிச்சோம். பின்னர் பிரதர்ஸ் குடும்பத்தினர் மீது சென்னை காவல் துறையிலும், சிங்கப்பூருக்கே நேரில் சென்று சிங்கப்பூர் போலீஸ் மற்றும் இந்திய தூதரகத்திலும் புகார் கொடுத்தோம். அப்போது சிங்கப்பூர்ல அவர்கள் மீது செக் மோசடி வழக்கு இருப்பதும் தெரிய வந்துச்சு.

இதையடுத்து சகோதரர்களின் பெற்றோர் ராமதாஸ்-வேதவல்லி இருவரும் கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் பத்து நாளில் ஜாமீனில் வெளிவந்தனர். தங்களுக்கு எதிராக புகார் கொடுத்தவர்கள் மீது சகோதரர்கள் போலீஸில் பொய்யான புகார்களை கொடுத்தனர். பணம் கேட்டா நீ யார்னே தெரியாதுனும், எங்கிட்ட வச்சிக்கிட்டா பெரிய கேசுல சிக்க வச்சுருவோம்னு மிரட்டுனாங்க. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நாங்கா சோர்ந்து போயிட்டோம். சிங்கப்பூர் அரசும், தமிழக போலீஸும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கலை.

கைது செய்யப்பட்டவர்கள்

இதையடுத்து பிரதர்ஸ், தீவு ஒன்றுக்கு போய் தலைமறைவாகிவிட்டதா தகவல் வந்துச்சு. அவங்க குடும்பத்தை சேர்ந்த யாரையும் பாக்க முடியல. சகோதரகள் குறித்து ஆர்.டி.ஐல தகவல் கேட்டதுக்கு இருவரும் தலைமறைவா இருப்பதாக பதில் வந்தது. நம்ம தலையெழுத்து அவ்வளதான்னு நொந்துக்கிட்டோம். மோசடி பிரதர்ஸால இனி யாரும் பாதிக்காம இருக்கனும் என்பதற்குத்தான் அப்ப நாங்க போலீஸ்ல புகார் கொடுத்தோம்.

ஆனால் சகோதரர்கள் கும்பகோணத்தில் செட்டில் ஆனதுடன் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுப்பட்ட தகவல் ஜூ.வில் படிச்சு அதிர்ச்சி அடைஞ்சோம். மோசடி தொகை ரூ.1,000 கோடி இருக்குமுனு சொல்றத கேட்டா மயக்கமே வருது. உடனடியாக தஞ்சாவூர் எஸ்.பிக்கு மெயிலில் புகார் அனுப்பியிருக்கோம். அப்பவே போலீஸ் அவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுத்திருந்தா இன்னைக்கு இவ்வளவு பெரிய மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை.

ஹெலிகாப்டர் சகோதரர்கள்

அவங்களோட ஸ்டைலே ஒரு இடத்துல சில வருடங்கள் இருந்து மோசடியின் மூலம் பணம் வசூல் செய்வாங்க. பிரச்னை ஆக தொடங்கியதுமே வெளிநாடுகளில் உள்ள தீவுகள்ல தலைமறை வாகிடுவாங்க. பின்னர் அந்த பிரச்னை அடங்கியதும் வேறு ஒரு ஊர்ல கடைய போட்டு ஏமாத்த ஆரம்பிப்பாங்க. இப்போதாவது ஹெலிகாப்டர் பிரதர்ஸை தப்ப விடாமல் நடவடிக்கை எடுக்கனும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு” என தெரிவித்தனர்.

Also Read: கார்கள் நிறுத்தவே தனி வீடு! – ஹெலிகாப்டர் பிரதர்ஸ்-க்குச் சொந்தமான 12 சொகுசு கார்கள் பறிமுதல்

மேலும் சிலர், வழக்கு விசாரணையில் மெத்தனம் காட்டப்படுகிறது. கும்பகோணத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திலும் அவர்கள் மீது பல புகார்கள் வந்துள்ளன. சகோதரர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள டெல்லி மேலிடத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரை அனுகியுள்ளனர். மோசடி தொகை கோடிகளில் இருப்பதால் சி.பி.சி.ஐ.டி போலீஸிற்கு வழக்கு விசாரணை மாற்றப்ப டுவதற்கும் வாப்புள்ளதாக கூறுகின்றனர். வழக்கின் விசாரணை அதிகாரியான திருவிடைமருதூர் டி.எஸ்.பி அசோகனிடம் பேசினோம், `விசாரணை தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. மற்றவை பின்னர் தெரிய வரும்’ என்று மட்டும் கூறி முடித்து கொண்டனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.