பூந்தமல்லியை அடுத்த வரதராஜபுரம் கிராம மக்கள் மாட்டு சாணத்தில் இருந்து உயிரி வாயு எடுத்து, அதன் மூலம் மின்சாரம் தயாரித்து வருகிறார்கள். நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட முயற்சி இன்று 50 தெருவிளக்குகளுக்கு மின்சாரம் கொடுக்கும் அளவிற்கு ஆக்கபூர்வமாக மாறியுள்ளது.

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள நகர் சூழல் பெற்ற கிராமம்தான் வரதராஜபுரம். கால்நடை வளர்ப்பையே பிரதான தொழிலாக கொண்டு இயங்கும் இந்த கிராமத்தில், 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கறவை மாடுகள் மூலம் பால் உற்பத்தி செய்து வருகின்றனர்.

image

மாடு மேய்ச்சலுக்காக அந்தக் கிராமத்தில் உள்ள மண்ணாங்கட்டி குட்டை அருகே உள்ள பகுதியை பயன்படுத்தியுள்ளார்கள். மாட்டுத் தொழுவத்தில் உள்ள கழிவுகளை இந்த குட்டைக்கே அனுப்பியிருக்கிறார்கள். மாசடைந்த குட்டையை சீர்படுத்துவதற்காக 2018-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஷ்வரி ரவிக்குமார், சாண எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்குவதற்கான முயற்சியில் இறங்கினார்.

image

மாவட்ட ஆட்சியருடன் கைகோத்த ஊர்மக்கள் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்களின் முயற்சியால், 2020-ம் ஆண்டில் ரூ.60 லட்சம் செலவில் சாண எரிவாயு மூலம் பசுமை ஆற்றல் தயாரிக்கும் மின் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியது. ஒரு வருடங்களாக கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் பசுமை மின் ஆற்றல் உற்பத்தி நிலையம் செயல்பாட்டிற்கு வந்தது.

கால்நடை சாணத்தை சேமிக்க கிராமப் பஞ்சாயத்து சார்பில் ஆட்கள் நியமிக்கப்பட்டு நாள்தோறும் மாட்டு சாணத்தை சேகரிக்கிறார்கள். நாள்தோறும் சராசரியாக 1,150 கிலோ மாட்டு சாணம் கால்நடை விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு, அதன் மூலம் 200 யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

image

சாணம் சேகரிக்கப்பட்டு மிதவை உருளையில் நாள்கணக்கில் அடைத்து வைக்கப்படும்போது, அதிலிருந்து உயிரி ஆற்றல் உருவாகிறது. உயிரி ஆற்றலில் மீத்தேன், கார்பன்-டை-ஆக்சைடு, சல்பர் ஆகிய வாயுக்கள் கலந்திருக்கும். அதில் தேவையற்ற கார்பன்-டை- ஆக்சைடு, சல்பர் ஆகியவற்றை தவிர்த்து மீத்தேன் வாயு தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது.

பின்னர், அந்த உயிரி ஆற்றல் உதவியுடன் இன்ஜின் இயங்குகிறது. இன்ஜினுடன் இணைந்திருக்கும் மின் இயக்கியும் சூழலுவதால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மாட்டு சாணத்தின் மூலம் இங்கு இயற்கை உரங்களும் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

image

தற்போது 50 தெருவிளக்குகளுக்கு இந்த மின் நிலையத்தின் மூலமே மின்சாரம் தரப்படுகிறது. இதற்காக இரவில் 12 மணி நேரம் இந்த பசுமை மின் ஆற்றல் உற்பத்தி நிலையம் செயல்படுகிறது. தற்போது கார்பன்லூப் நிறுவனம் என்கிற தனியார் நிறுவனத்துடன், கிராம பஞ்சாயத்து இணைந்து இந்த பசுமை மின் ஆற்றல் நிலையத்தை பராமரித்து வருகிறது.

image

மின்தேக்கிகளை வாங்குவதற்கு அரசு பஞ்சாயத்து மூலம் நிதி ஒதுக்கினால் கிராமத்தின் மின் தேவையின் பாதியை இந்த மின்நிலையத்தின் மூலம் போக்க முடியும் என தெரிவிக்கும் கிராம மக்கள், தங்கள் கிராமம் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையம் (Electric charging station) இதன்மூலம் அமைக்கும் திட்டமுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.

வரதராஜபுரம் போல கிராமங்களுக்கான மின் தேவையை மரபு சாரா ஆற்றல் மூலம் பூர்த்தி செய்யும் திட்டங்களை அரசுகள் விரைவுபடுத்துவதே வருங்கால மின் பற்றாக்குறையை போக்க வழிவகுக்கும். சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பாக அமையும்.

– சிவக்குமார், பால வெற்றிவேல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.