டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவர் பஜ்ரங் புனியா. மல்யுத்த வீரரான இவர் தனது முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார். 27 வயதான இவர் கடைசியாக பங்கேற்று விளையாடிய இரண்டு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியிலும் பதக்கங்களை வென்றுள்ளார். 

image

யார் இவர்? – ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜாஜ்ஜர் மாவட்டத்தின் குடன் கிராமத்தை சேர்ந்தவர். வாழையடி வாழையாக அவரது குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் பாரம்பரிய விளையாட்டான மல்யுத்த விளையாட்டை விளையாடுவது வழக்கம்.

பஜ்ரங் புனியாவின் தந்தையும் மல்யுத்த வீரர். அதனால் தந்தை விளையாடுவதை பார்த்து அவருக்கும் அந்த விளையாட்டின் மீது ஆர்வம் வர ஏழு வயதில் மல்யுத்த பயிற்சிக்காக தனது கிராமத்தில் இயங்கி வந்த பாரம்பரிய மல்யுத்த பயிற்சி கூடத்தில் பயிற்சியை தொடங்கி உள்ளார் பஜ்ரங் புனியா. அதன் பிறகு நடந்தது அனைத்துமே வரலாறு. 

வறுமை ஒரு பக்கம் அவரது கனவை அடைய விடாமல் தடுத்த சூழலிலும், அதனுடன் மல்லுக்கட்டி மல்யுத்த வீரராகி உள்ளார். 

image

“பாரம்பரிய பயிற்சி முறையை பின்பற்றி வருவதால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்!” – “நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் கடின உழைப்பு எப்படி இருக்கும் என்பதை நன்றாக அறிந்தவன். எங்கள் கிராமத்தில் யாருமே தம்பில்ஸ், வெயிட் பிளேட் மாதிரியானவற்றை கொண்டு பயிற்சிகளை செய்வதில்லை. அங்கு பேன்சி ஜிம்கள் கூட இல்லை. இருந்தாலும் எங்கள் உடல் இரும்பு போல இருக்கும். அதற்கு காரணம் பாரம்பரிய பயிற்சிகள். 

சிறு வயதில் இருந்தே நான் பாரம்பரிய முறை பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இன்று சகல வசதிகளும் கொண்ட பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொள்ளும்போதும் அதனை கைவிடவில்லை. இந்திய தண்ட் (தண்டால்) மற்றும் இந்திய பைத்தக் (Baithak) மாதிரியான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இந்த பாரம்பரிய பயிற்சி முறை நிச்சயம் எனக்கு ஒலிம்பிக் பதக்கம் பெற்றுக் கொடுக்கும்” என தெரிவித்துள்ளார் பஜ்ரங் புனியா. 

image

பதக்கத்திற்காக பலம் வாய்ந்த போட்டியாளர்களுடன் போட்டி: 65 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்த பிரிவில் பங்கேற்கிறார் பஜ்ரங் புனியா. மிகவும் கடுமையான சவால் மிக்க போட்டியாளர்களை எதிர்கொண்டு போட்டியிட வேண்டியுள்ளது. 

தொடர்ந்து இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றது, காமன்வெல்த்தில் கிடைத்த தங்கம் மாதிரியான அனுபவங்களின் மூலம் சவால் மிக்க சக போட்டியாளர்களை அவர் சமாளிப்பார் என நம்புவோம். 

அண்மையில் அவரது வலது காலில் ஏற்பட்ட காயம் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலைக்கு அவரை தள்ளியுள்ளது. இருப்பினும் ஒரு வார காலத்திற்குள் அவர் பயிற்சிக்கு திரும்புவார் என்று தெரிவித்துள்ளது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு. 

சென்று… வென்று வாருங்கள் பஜ்ரங்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.