தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேல்மட்ட பாலம் சேதமடைந்து கடந்த 18 மாதங்களுக்கு மேலாக பராமரிப்பின்றி கிடக்கிறது. ஒருவழி பாதையாக இருந்த பழமையான மேம்பாலத்திற்கு மாற்றாக பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரு வழி மேம்பாலம் இன்று தரமில்லாத கட்டுமானத்தால், மீண்டும் ஒரு வழி மேம்பாலமாக மாறி கிடக்கும் பரிதாபக் கதை இது…

கன்னியாகுமரி – காஷ்மீர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை உடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கி.மீ. தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 2013-ம் ஆண்டு முடிவடைந்து வாகனப் போக்குவரத்து தொடங்கியது.

இந்தச் சாலையில் வல்லநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்கு வழிப் பாலம் அமைக்கப்பட்டு 2013-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்தப் பாலத்தைக் கடந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

image

கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளே ஆன நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் நடுவே பெரிய ஓட்டை விழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் பாதையில் 108 நாட்கள் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரூ.3.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பாலம் முழுவதுமாக சீரமைக்கப்பட்டது.

சீரமைக்கப்பட்ட 3 ஆண்டுகளில் மீண்டும் பாலத்தில் இரண்டு இடங்களில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பெரிய அளவில் ஓட்டைகள் விழுந்தன. இதனால் இந்த வழியாக வாகனப் போக்குவரத்து கடந்த 14.03.2020 முதல் நிறுத்தப்பட்டது. தற்போது 15 மாதங்களாகியும் இன்னும் பாலம் சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் கடந்த 15 மாதங்களாக ஒருவழிப் பாதையில் செல்வதால் வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரத்தில் இந்தப் பாலத்தை கடக்க வாகன ஓட்டிகள் திண்டாடுகின்றனர். மேலும், ஒரே வழியில் செல்வதால் இரவு நேரங்களில் அதிகம் விபத்து ஏற்படுகிறது என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

image

இந்தப் பாலத்துக்கு அருகில் சுமார் 125 ஆண்டுகள் பழமையான மேம்பாலம் சிறிய சேதம் கூட ஏற்படாமல் இன்றும் கம்பீரமாக உள்ளது. ஆனால், அதனருகில் புதிய பாலம் கட்டப்பட்டு சில ஆண்டுகளிலேயே அடிக்கடி சேதமடைவதால் அதன் தரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் சங்கரிடம் கேட்டபோது, “சேதமடைந்துள்ள வல்லநாடு தாமிரபரணி மேம்பாலத்தை ஆய்வு செய்த மத்திய சாலை ஆராய்ச்சி வல்லுநர்கள் (Central Road Research Institute) பாலத்தை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ளனர். அதன்படி ரூ.11 கோடி செலவில் இன்னும் 30 நாட்களில் ஆகஸ்ட் மாதம் மேம்பாலம் சரிசெய்யும் பணிகள் தொடங்கி நிரந்தர தீர்வாக பணிகள் முடிவடையும்” என்றார்.

– நாகராஜன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.