சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள்/பத்திரிகைகள் வாயிலாக பலரும் சமுதாயம், அரசியல் உள்ளிட்டவை சார்ந்த ஆக்கப்பூர்வமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், சிலர் சுய விளம்பரத்திற்காக ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து, சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை தூண்டி வருகின்றனர். அதிலும் குறிப்பிட்ட சிலர், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சொந்த ஆதாயத்திற்காகவும், மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மலிவான, தரம் தாழ்ந்த கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.

இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைப்பதற்கும், குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுகின்றன. காவல் துறையைப் பொறுத்தவரை, சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கட்சி, சாதி, மதம் சார்ந்த இரு தரப்பினருக்கிடையே மோதல்களைத் தூண்டும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்தால் அதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்தகைய சட்ட நடவடிக்கைகள் காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

image

இவ்வாண்டு மே மாதம் முதல் தற்போது வரையில் மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் எல்லை மீறிய அளவில் அவதூறுப் பதிவுகளை மேற்கொண்ட 16 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத்திலும் மட்டுமே காவல் துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஏற்கெனவே இணையக்குற்றங்களுக்காக சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அவதூறு பரப்பினால், ஐபிசி 499,500 சட்டம் பாயும். பெண்களை இழிவுசெய்தால் ஐபிசி 294, 509 சட்டம் பாயும். புகைப்படம், வீடியோ மூலம் அவதூறு பரப்பினால், IT Act 67, 66e பாயும். குழந்தைகளுக்கு எதிராக பதிவிட்டால், ஐபிசி 294, 509, IT Act 67, 66e, போக்சோ சட்டம் பாயும்.

இதுகுறித்து யூடியூபர் ஐயன் கார்த்திகேயன் பேசுகையில், “காலத்திற்கு தேவையான எச்சரிக்கைதான். மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும், வன்முறையை அறிவிப்பது போன்ற வீடியோக்கள் அதிகம் பகிரப்படுகின்றன. சின்ன சின்ன குழந்தைகள் பேசும் வீடியோ பேசுவதை பெற்றோர்களே ஆதரிக்கும் வகையில் எல்லாம் வீடியோக்கள் வெளி வந்ததை பார்க்க முடிந்தது.

சமூக வலைதளங்களில் பொய் சொல்பவர்கள் அதிகமாகி விட்டனர். மக்களை திசைதிருப்ப சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இணையபழக்கம் அதிகமாகிவிட்டது. அதேசமயம் சைபர் கிரைமும் அதிகமாகிவிட்டது. அவதூறு செய்திகளை மக்கள் ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். இது ஒரு குரூரமான செயல். மற்றவர்கள் கஷ்டப்படுவதை ரசிப்பது எந்தமாதிரியான மனநிலை. அர்த்தம் இல்லாத வீடியோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதில் யாரை குறை சொல்வது. என்னவேண்டுமானலும் பேசி நிறைய பார்வையாளர்கள் வேண்டும் என நினைக்கின்றனர்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.