தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் பிறந்து, காங்கிரஸ் கட்சியில் முழு நேர அரசியலில் ஈடுபட்ட ரங்கராஜன் குமாரமங்கலம் சேலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், திருச்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார். அதே போல், ரங்கராஜன் குமாரமங்கலம் 1991-1992 காலகட்டத்தில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மனின் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அதைத், தொடர்ந்து காங்கிரஸில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த அவர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் 1998-2000 வரை அங்கம் வகித்தார்.

மத்திய அமைச்சராகப் பதவியில் இருக்கும் போதே 2000-ல் ரத்த புற்றுநோய் காரணமாக ரங்கராஜன் குமாரமங்கலம் உயிரிழந்தார். குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் (67) டெல்லியில் அவரது மறைவிற்குப் பிறகு தனியாக வசித்து வந்தார். அவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் கூட. இவர்களது மகன் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் காங்கிரஸ் கட்சியில் பதவியில் இருக்கிறார். சேலத்தை சேர்ந்த அவர் தற்போது தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பெங்களூரூவில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் தனியாக வசித்துக் கொண்டிருந்த கிட்டி குமாரமங்கலத்தின் வீட்டில் நேற்று நடந்த கொள்ளை சம்பவம் ஒன்றில் அவர் தலையணை கொண்டு அழுத்தி கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம்

சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் டெல்லி போலீஸார், கிட்டியின் வீட்டில் வேலை செய்து வரும் பணிப்பெண் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கொலைச் சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறுகையில், “நேற்றிரவு சுமார் 9.00 மணியளவில் கிட்டி குமாரமங்கலம் அவரது வீட்டில் தனியாக இருந்த போது வழக்கமாகத் துணி சலவை செய்யும் நபர் ஒருவர் இரண்டு நபர்களுடன் சேர்ந்து கதவைத் தட்டியிருக்கிறார். அப்போது பணிப்பெண் மஞ்சு என்பவர் கதவைத் திறந்திருக்கிறார்.

கொள்ளையர்கள் அவரை தாக்கி உள்ளே தள்ளிவிட்டு கொள்ளை அடிக்கும் நோக்கில் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு அவரை அடித்து ஒரு அறையில் கட்டிப் போட்டு விட்டுக் கிட்டி குமாரமங்கலத்தின் அறைக்கு சென்றிருக்கின்றனர். அங்கு உறங்கி கொண்டிருந்த அவரை தாக்கி படுக்கையறையில் தள்ளி விட்டு தலையணையைக் கொண்டு அழுத்தி கொலை செய்து விட்டு அவரது வீட்டிலிருந்த பணம், நகை மற்றும் உடைமைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர். சம்பவம் நடந்து சில மணி நேரம் கழித்துச் சரியாக 11.00 மணிக்குத் தான் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, விரைந்து கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து இருந்த பணிப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். பணிப்பெண் அளித்த தகவல்களின் பேரில் முக்கிய குற்றவாளி ஒருவரைப் பிடித்து விட்டோம். அவருடன் இருந்த 2 நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறோம்” என்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவியும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.