‘ஜகமே தந்திரம்’ சில நாட்கள் முன்பு வெளியானது. இந்தப் படத்தில் நட்சத்திர பட்டாளங்களே நடித்தித்திருந்தாலும் அதிக கவனம் ஈர்த்தவர் சிவதாஸ் கேரக்டரில் நடித்த ஜோஜு ஜார்ஜ். மலையாள ‘விஜய் சேதுபதி’ என அழைக்கப்படும் ஜோஜு ஜார்ஜ் சமீப காலமாக பேசப்படும் ஒரு நடிகராக மாறியிருக்கிறார். தினமும் 50 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட் முதல் தேசிய விருது வரை ஜோஜுவின் பயணம் மிகவும் வலி நிறைந்தது. அவரின் வெற்றி பயணத்தை விரிவாக பார்ப்போம்.

image

1977-ல் திருச்சூர் பகுதியில் உள்ள குரூரில் உள்ள ஸ்ரீமுருகா டாக்கீஸில் தொடங்கியது ஜோசப் ஜார்ஜ் என்னும் ஜோஜு ஜார்ஜின் சினிமா கனவு. அப்பாவின் பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், வகுப்பை கட் அடித்து, தியேட்டருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த சிறுவனாக இருந்த ஜோஜு ஜார்ஜூக்கு சினிமா மேல் பைத்தியமே வந்தது. பரீட்சை எழுதி மார்க் வாங்குவதோ, அதன்மூலம் நல்ல வேலையில் சேர வேண்டும் என்ற கனவுக்கு பதில், ஒரு சினிமா நடிகராக வேண்டும் என்பதே ஜோஜுவின் உட்சபட்ச கனவு. கஷ்டங்கள் நிறைந்த, நம்பிக்கையூட்டும் ஜோஜுவின் சினிமா வாழ்க்கைக் கதை இங்கே தொடங்குகிறது.

1990-களில் சினிமாவில் தோன்ற மலையாளிகள் பலரும் தேர்ந்தெடுத்த வழி மிமிக்ரி. அதற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அப்போது கேரளாவை தங்கள் மிமிக்ரி கலையால் அசரடித்து கொண்டிருந்தது கலாபவன் மணி தலைமையிலான கலாபவன் குழு. இந்தக் குழுவில் உள்ள பலருக்கு மிமிக்ரி கலையால் சினிமா கதவு திறக்கப்பட, அதே பாணியை ஜோஜுவும் தேர்ந்தெடுத்தார். கலாபவன் குழுவில் சேர பல முயற்சி செய்தும்,குரல்வளம் இல்லை என இடம் மறுக்கப்பட்டது. உடனே தளர்ந்துவிடவில்லை, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடும் முயற்சியை தொடர்ந்தார் ஜோஜு.

image

ஒருவழியாக பெரிய திரையில் முகம் காண்பிக்க முதல் வாய்ப்பு ‘மழவில் கூடாரம்’ என்னும் திரைப்படம் மூலம் வந்தது. இதற்கான ஷூட்டிங் நாளன்றில்தான் கல்லூரி தேர்வும் வந்தது. தேர்வை விட தனது கனவே பெரிது என சினிமா மீது கொண்ட தீராக் காதலால் திரையில் முகம் காண்பிக்கும் முதல் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக வசனம் ஏதும் இல்லாமல் சிறிதாக நின்று செல்லும் கதாபாத்திரம்தான். என்றாலும், இது ஒரு சிறிய தொடக்கமாக இருக்கும் என்று கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் ஜோஜு.

இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் வசனம் பேசும் அளவுக்கு எந்த இயக்குநரும் அவருக்கு வாய்ப்பை வழங்கவில்லை. இடையில் பெற்றோர்கள் வற்புறுத்தலால், ஹோட்டல் மேனேஜ்மேண்ட் படிப்பில் சேர்ந்தார். இதற்கான ட்ரெயினிங்கிற்காக இரண்டு மாதம் கோவா செல்ல வேண்டிவந்தது. தனது லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு ரயில்வே ஸ்டேஷன் சென்றபோது கோவாவுக்கு செல்லும் ரயிலுக்கு பதிலாக முதலில் வந்தது தென்னிந்திய சினிமாக்களின் தாயகமாக விளங்கிய சென்னை செல்லும் ரயில். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், எதைப் பற்றியும் யோசிக்காமல் சினிமா ஆசையில் அந்த ரயிலில் ஏறிவிட்டார்.

சென்னையில் வாய்ப்பு தேடி அந்த இரண்டு மாதம் அலைந்து திரிந்து எதுவும் கிடைக்காமல் சொந்த ஊருக்கே திரும்பிசெல்லும் நிலை. சொந்த ஊரில் இருந்து மீண்டும் வழக்கம்போல் சிறிய வேடங்களில் நடிப்பு என வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்க, ‘தாதாசாகேப்’ படம் மூலமாக முதன்முதலில் ஒரு வசனம் பேசும் காட்சி கிடைத்தது. முதல்முறை டயலாக் பேசும் வாய்ப்பு, கூடவே பயம் என அந்தக் காட்சியில் அவரின் நடிப்பு மோசம் எனப் பேசப்பட்டது. ‘அன்று எனக்கு சுத்தமாக நடிக்க தெரியவில்லை’ என்று ஜோஜுவே பின்னாளில் ஒரு பேட்டியில் உண்மையை வெளிப்படுத்தினார்.

image

திறமைகள் இருந்தும் முயற்சி எடுக்காத ஒருவனைக் காட்டிலும், தன்னிடம் இருக்கும் குறைபாடுகளை அறிந்து அதனை களைய தொடர்ந்து முயற்சி எடுப்பவனுக்கே வெற்றிக்கான சாத்தியம் அதிகம் என்பதற்கேற்ப, சினிமாவில் தனது முயற்சிகளை தொடர்ந்துகொண்டே இருந்தார் ஜோஜு. வாய்ப்பு தேடி அலையும்போது பலமுறை அவரின் கண்முன்னே நிகழ்த்தப்பட்ட அவமானங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு சினிமா பயணத்தை முன்னெடுத்தார். சினிமா மீதான தீராக் காதல் காரணமாக ஜோஜு இப்படி அலைவதை பார்த்த அவரின் உறவினர் ஒருவர், ஒருமுறை ஜோஜுவை அழைத்துக்கொண்டு மனநல மருத்துவரிடம் காண்பித்துள்ளார்.

கவுன்சிலிங் மூலம் ஜோஜுவின் சினிமா பைத்தியத்தை மாற்றலாம் என்பது அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற உறவினரின் எண்ணம். ஆனால் அவரிடம் சிறிதுநேரம் பேசிய மனநல மருத்துவர் வெளியே வந்து, அந்த உறவினரிடம் சொன்னது: ‘ஜோஜு ஜார்ஜ் சினிமாவில் பெரிய நடிகராக வருவார் அல்லது சினிமாவை நம்பி ஒன்றும் ஆகாமல் போன பலரை போல் அவரும் வருவார்” என்றார். இந்தத் தருணத்தில்தான் ஜோஜுவின் சினிமா காதலுக்கு உரம் போட்டது 2010-ல் வெளிவந்த ‘பெஸ்ட் ஆக்டர்’ என்னும் படம். இதில் சிறிய வேடம்தான் என்றாலும் இதுவரை அவர் நடித்ததில் பாராட்டப்பட்ட காட்சியாக அது மாறியது. தனக்கும் நடிக்க வரும் என்பதை அந்தப் படத்தின் மூலம் தன்னை வசைபாடியவர்களுக்கு வெளிப்படுத்தினார்.

I have saved screenshot of Mammookka's message about Joseph: Joju George -  CINEMA - CINE NEWS | Kerala Kaumudi Online

பின்பு மெதுமெதுவாக சிறிதும், பெரிதுமாக வேடங்கள் கிடைக்க தொடங்கியது. இடையில் மம்முட்டியுடன் ஏற்பட்ட அறிமுகத்தால், மம்முட்டிக்கும் ஜோஜு ஜார்ஜின் சினிமா மீதான தீராக் காதல் தெரியவர, தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும், ஜோஜுவுக்கு கேரக்டர் கொடுக்கத் தொடங்கினார். அவரின் தயவால் பல வாய்ப்புகள் கிடைத்ததாலும், சினிமாவுக்கு வந்து 24 ஆண்டுகள் ஆன பின்புதான் 2018-ல் முதன்முதலாக ‘ஜோசப்’ படத்தில் ஹீரோவாக ஆனார் ஜோஜு. அதற்கு முன்னதாக ஜூனியர் ஆர்ட்டிஸாக அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை மட்டுமே 100-ஐ தொட்டிருக்கும்.

ஹீரோவான முதல் படத்திலேயே அபார நடிப்பை வெளிப்படுத்த தேசிய விருது, கேரள அரசின் மாநில விருதுகள் அவரின் கைகளில் தவழ்ந்து. அவருக்கு நடிக்கத் தெரியாது என கண்முன்னே வசைபாடிய அனைவருக்கும் அந்த ஒற்றைப் படம் மூலம் பதில் கொடுத்தார் ஜோஜு. இந்தப் படம் கொடுத்த வெற்றி காரணமாக அடுத்தடுத்து, ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’, சோலா, ‘நாயட்டு’, இதோ இப்போது ‘ஜகமே தந்திரம்’ என பெரிய கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இன்றைய தினம் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுவராக மாறியிருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் மிரட்டி வருகிறது. ஜோசப் படத்தில் ஒரு இண்டன்ஸ் ஆன கதாபாத்திரத்தில் நடித்தார் என்பதை தாண்டி ஜோசப் பாத்திரமாகவே வாழ்ந்தார். அப்படியே பொறிஞ்சு மரியம் ஜோஸ் என்ற கமர்சியல் படத்திலும் அற்புதமான நடிப்பினை வழங்கி இருந்தார்.

ஜோஜு பெரும்பாலும் விஜய் சேதுபதியுடன் ஒப்பிடப்படுகிறார். இருவரின் வாழ்க்கைப் பாதைகளும் மிகவும் ஒத்ததாகவே இருக்கின்றன. விஜய் சேதுபதியும் இதுபோன்ற சூழ்நிலையில் இருந்து வந்தவர்தான். ஹீரோ ஆன பிறகும் கூட சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறது. அதுவும் ஒரிரு காட்சிகள் மட்டுமே வரக் கூடிய டிரான்ஸ் போன்ற படங்களில்.

நடிகர் என்பதோடு ஜோஜு ஜார்ஜ் ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும் உருவெடுத்து வருகிறார். தமிழக ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட சார்லி படத்தின் இணைத் தயாரிப்பாளராக இருந்தார். மஞ்சு வாரியரின் அற்புதமான நடிப்பில் உருவான உடகரணம் சுஜாதா படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்தார். அதேபோல், அப்பு பத்து பப்பு (Appu Pathu Pappu) என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி அதில் படங்களை தயாரித்து வருகிறார். ஜோசப், சோலா, பொறிஞ்சு மரியம் ஜோஸ் படங்கள் அவரது பேனரில் வந்தவையே. சினிமா கலையின் மீதும் மலையாள சினிமா உலகின் முன்னோடிகள் மீதும் அவருக்கும் இருக்கும் மரியாதை அளப்பரியது. அவரது நேர்காணல்களை கவனித்தால் அவை புரியும். 

திரையில் சிறிய அளவில் முகம் காண்பித்தால் போதும் என்று இருந்தது ஜோஜுவின் ஆரம்ப கால ஆசை. பின்னர் வசனங்கள் பேசும் வேடம் கிடைத்தால் போதும் என்று அது மாறியது. இறுதியில் அதுவே அவரை ஹீரோவாக்கியது. ஒரு சில வருடங்கள் முயற்சி செய்து ஒன்றும் நடக்காமல் இருக்கும்போது எல்லோரையும் வசைபாடி கனவு வாழ்க்கைக்கு முழுக்கு போடுபவர்களுக்கு 24 வருடங்கள் தனது கனவுக்காக உழைத்து வெற்றி கண்ட ஜோஜு ஜார்ஜ் உண்மையில் ஒரு இன்ஸ்பிரேஷன்தான்.

தமிழ் சினிமா உங்களை வரவேற்கிறது ஜோஜு ஜார்ஜ்!

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.