செப்டம்பர் மாதம் தியேட்டரில் வெளியாகிறது ’கேஜிஎஃப் 2’?

”கொரோனா மூன்றாவது அலை வரவில்லையென்றால், ‘கேஜிஎஃப் 2’ செப்டம்பர் மாதம் தியேட்டரில் வெளியாகும்” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’  டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில், வரும் ஜூலை 16 ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்தது படக்குழு. அதன்படி, படம் வெளியாக இன்னும் 23 நாட்களே உள்ளன.

image

ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா என பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் அதிக கூட்டம் கூடும் இடம் என்பதால் தியேட்டர்கள் தாமதமாகத்தான் திறக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

இதனால், ’கேஜிஎஃப் 2’ வெளியீட்டுத் தேதியை படக்குழு தள்ளி வைத்திருப்பதாகவும், கொரோனா மூன்றாவது அலை வராவிட்டால் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமைக்காக அமேசான் ஓடிடி தளத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

”இந்தியாவில் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததால் மூன்றாம் அலை தவிர்க்க முடியாதது. இன்னும் ஆறு முதல் எட்டு வாரங்களில் கொரோனா மூன்றாவது அலை தாக்கக்கூடும்” என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM