தமிழக அரசு கொரோனா இரண்டாம்கட்ட நிவாரணமாக வழங்கிய ரூ. 2,000, மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய பை நேற்று வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழகலுங்கடிப்பகுதியைச் சேர்ந்த 90 வயது பாட்டி வேலம்மாள், அரசு வழங்கிய நிவாரணத்தொகை மற்றும் மளிகைப்பொருள்களை பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் பொக்கை வாய்காட்டி சிரிக்கும் புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் செம வைரலானது. அந்தப் புகைப்படத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், `இந்த ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு’ எனக் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

ஒரே நாளில் வலைதளங்களில் வைரலான கீழகலுங்கடியைச் சேர்ந்த மூதாட்டி வேலம்மாளிடம் நாம் பேசினோம்.

“எனக்கு 90 வயசு ஆவுது. நாப்பது வருஷத்துக்கு முன்னாடி வீட்டுக்காரரு இறந்துட்டாரு. என் மகனும், மகளும் தனித்தனியா வசிக்குறாங்க. நான் கீழகலுங்கடியில இருக்கேன். எனக்கு இங்க உள்ள நல்லவங்க சாப்பாடு தர்றாங்க. என் போட்டோ எங்க எல்லாமோ அனுப்பினதாச் சொன்னாங்க. எல்லாம் நல்லதுக்குத்தான்” என்று சொல்லி அதே பொக்கைவாய் காட்டிச் சிரிக்கிறார்.

தன் மகள் திருப்பூரில் இருப்பதாகக் கூறுகிறார் வேலம்மாள். மகளின் வீடு பூட்டியிருக்கிறது. அந்த வீட்டின் திண்ணையில்தான் வாழ்ந்துவருகிறார் வேலம்மாள். யாராவது கொடுக்கும் உணவை திண்ணையிலும், தெருவிலும் அமர்ந்து சாப்பிட்டு வருகிறார். மகளின் வீட்டினுள் வேலம்மாவை தங்க வைக்க ஊர்மக்கள் முயன்றும் அது நிறைவேறவில்லை என்கிறார்கள்.

வேலம்மாள் பாட்டி

வேலம்மாள் பாட்டியை புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பியிடம் பேசினோம்.

“எனக்குச் சின்ன வயசுல படிப்பு ஏறல. ஃபோட்டோ எடுக்கிறதுல ரொம்ப ஆர்வம் இருந்தது. என் மாமா மதன்குமார் எனக்கு ஒரு உள்ளூர் சேனல்ல வீடியோகிராஃபரா வேலை வாங்கிக்கொடுத்தார். அடுத்ததா சென்னையில ஒரு பத்திரிகையில ஃபோட்டோகிராஃபரா வேலைக்குச் சேர்ந்தேன். அந்த வேலையை விட்டுட்டு மறுபடியும் நாகர்கோவில் வந்தேன். அப்ப என்கிட்ட சொந்தமா கேமரா இல்ல. ஆனா புகைப்படம் எடுத்துச் சாதிக்கணும்கிற எண்ணம் இருந்தது.

என் ஆசையை அப்பாகிட்ட சொன்னேன். அவர், வீட்டு முன்னாடி ஒரு சென்ட் நிலத்தை வித்து ரெண்டரை லட்சம் ரூபாய்க்குக் கேமரா வாங்கித் தந்தார். அப்போ அவர் சொன்ன ஒரே விஷயம் இதுதான்: `நீ கல்யாண வீட்டுல புகைப்படம் எடுக்க கமிட் ஆகக்கூடாது. உன் புகைப்படத்தை உலகமே பேசணும்!’

மேலும், நான் புகைப்பட கலைஞனா மாற உத்வேகம் தந்தவர் ஜோதிநிர்மலா ஐ.ஏ.எஸ். அவங்க இன்னைக்கு வரைக்கும் என்னை ஒரு மகனாக நினைச்சு வழிகாட்டுறாங்க.

புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி

என் திறமையைப் பார்த்த நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக இருந்த சரவணக்குமார், என்னை மாநகராட்சியில தினக்கூலி அடிப்படையில் புகைப்படக் கலைஞரா நியமித்தார். அந்தப் பணி இப்பவும் தொடருது.

கொரோனா முதல் அலை வந்த சமயத்துல, கொரோனா பாதிச்சு இறந்தவங்க உடலை தகனம் செய்வதால அந்த நோய்த்தொற்று தங்கள் பகுதியில வரும்ங்கிற தவறான எண்ணம் தமிழக மக்களிடம் ஏற்பட்டிருந்தது. அந்த சமயத்தில நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனரா இருந்த சரவணக்குமார், மாநகராட்சி எரிவாயு தகன மேடையில கொரோனா பாதித்தவரின் உடல் போன்று பொம்மை உடலை தகனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன் பிறகு கொரோனா பாதித்தவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டது. அதை பிபிஇ கிட் அணிந்துகொண்டு நான் சென்று புகைப்படம் எடுத்தேன். கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வார்டில் பிபிஇ கிட் அணிந்து சென்று அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை, உணவுகள் பற்றின புகைப்படங்களை பதிவு செஞ்சேன்.

மூதாட்டி வேலம்மாளுடன் ஜாக்சன் ஹெர்பி

Also Read: கொரோனா: அரசின் உதவிகளைப் பெறமுடியாமல் தவிக்கும் திருநர் சமூகம்; தீர்வு என்ன?

தமிழக அரசு கொரோனா நிவாரணமாக வழங்கிய 2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருள்களை ரேஷன் கடைகள்ல நேற்று விநியோகம் செய்தாங்க. நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட கீழகலுங்கடி பகுதி ரேஷன் கடைக்கு நான் போனேன். அங்க பாட்டி வேலம்மாள் ரேஷன் பொருள்களை வாங்கிக்கொண்டு வீட்டுத் திண்ணையில உட்கார்ந்து இருந்தாங்க. `பாட்டி போட்டோ எடுக்கணும், அந்த ரேஷன் பொருளோட, பணத்தையும் காட்டுங்க’ன்னு சொன்னேன். அதுக்கு அந்தப் பாட்டி, `அந்தப் பணத்த காட்டமாட்டேன், அது நான் சேலை எடுக்க வச்சிருக்கேன்’ சொன்னாங்க.

அவங்ககிட்ட ஜாலியா பேசி, `சும்மா காட்டுங்க பாட்டி…’னு சொன்னேன். உடனே பணத்தையும், மளிகைப் பொருள்களையும் காட்டிட்டு சந்தோஷத்துல பொக்கை வாய் காட்டி சிரிச்சாங்க. அதை அப்படியே கேமராவில பதிவு செஞ்சேன். அடுத்ததா, அங்க இருந்து நான் பைக்குல வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கும்போது, என் மொபைல்ல ஒரு மெசேஜ் வந்தது. பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு வழங்கும் 5,000 என் வங்கிக் கணக்குக்கு வந்ததுக்கான மெசேஜ் அது.

அப்ப, அந்தப் பாட்டி, `நான் சேலை எடுக்க இந்தப் பணத்தை வெச்சிருக்கேன்’னு சொன்னது ஞாபகம் வந்தது. பாட்டிக்கு சேலை எடுத்துக் கொடுக்கலாம்னு நினைச்சேன். லாக்டெளன்ல துணிக்கடைகள் மூடியிருக்கிறதால, ஏ.டி.எம்-க்கு போய் 2,000 ரூபாய் எடுத்து அந்தப் பாட்டி வீட்டுக்குப் போய் அவங்ககிட்ட கொடுத்து சேலை எடுத்துக்கோங்கனு சொல்லிட்டு வந்துட்டேன்.

மூதாட்டி வேலம்மாள்

Also Read: முதலில் கொரோனா, இப்போது கெனைன் டிஸ்டம்பர் வைரஸ்; வண்டலூர் சிங்கங்களின் தற்போதைய நிலை என்ன?

அதன் பிறகுதான் அந்த ஃபோட்டோக்களை ஃபேஸ்புக்ல போட்டேன். கொஞ்ச நேரத்துல என்னை நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் ஆஷா அஜித் கூப்பிட்டாங்க. அந்த புகைப்படங்களை டி.ஐ.பி.ஆர் (DIPR – Directorate of the Information and Public Relations)-ல கேட்டதாச் சொன்னாங்க. அதுக்குப் பிறகு செய்தித்துறை இயக்குநர் என்கிட்ட பேசினார். நான் புகைப்படங்களை அனுப்பிவெச்சேன். என் புகைப்படங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது ரொம்பப் பெருமையா இருக்குது.

என் அப்பா ஒரு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டார். இப்போ அவர் இருந்திருந்தா பேரானந்தம் அடைஞ்சிருப்பார்” என்றவர், “ஒரு நாளாவது சி.எம்-க்கு போட்டோகிராஃபரா வேலை பார்க்கணும்கிறதுதான் என்னோட கனவு” என்றார்.

லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.