“குடிக்கு அடிமையானவர்களை, அதற்கான சிகிச்சைக்கு அழைத்துவருவது மிகவும் சிரமமான காரியம். ஆகவே, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும், இதற்கென பணியாளர்களை நியமித்தால், அவர்கள் மூலம் தங்கள் வீட்டிலுள்ள குடிக்கு அடிமையான நபர்களை குடும்பத்தினர் அழைத்து வருவார்கள்.”

கொரோனா பரவல் அதிகமிருக்கும் இந்த நேரத்தில், டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டுமா என்ற விவாதம் கடந்த சில நாட்களாக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. ‘இந்த நேரத்தில் ஏன் இந்தக் கடைகள்’ என்ற கேள்விக்கு, டாஸ்மாக் திறக்க ஆதரித்தவர்கள் முன்வைக்கும் விளக்கங்கள்…

  • அரசின் பொருளாதார தேவை சீராகும்
  • மதுக்கு அடிமையானவர்கள், மது கிடைக்காமல் இருந்தபோது மோசமாக நடந்துக்கொண்டனர். ஒருசிலர், கள்ளச்சாராயம் குடித்து இறந்தார்கள். அதனாலேயே அரசு அதை நெறிபடுத்த நினைக்கிறது. இதன்மூலம், மனரீதியான பாதிப்பிலிருந்து மது குடிப்போர் ஓரளவு மீளமுடியும்.

image

“இவை இரண்டுமே பக்குவமான அணுகுமுறை அல்ல” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அதற்கு அவர்கள் சொல்லும் விளக்கமாக “அரசு, தன்னுடைய  வருவாய்க்கு பிரச்னை எனும்போது, அதை அதிகரித்துக்கொள்ள வேறு நல்ல வழிகளை தான் தேடவேண்டுமே தவிர, மக்களின் உயிரைக் கெடுக்கும் கடையை திறந்து அதன்மூலம் ஆதாயம் தேடக்கூடாது.

மதுக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான வழி, போதை மறுவாழ்வு மையங்களை அதிகப்படுத்துவதுதான்; டாஸ்மாக் திறப்பு அல்ல. மட்டுமன்றி, மதுக்கடையில் வரிசையில் கூட்த்தில் நின்று கொரோனா பெற்று, மதுவினால் உடலில் நோய் எதிர்ப்புதிறன் குறைந்து இறப்பவர்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்பவையாக இருக்கின்றன.

சமூக ஆர்வலர்களின் கருத்துகளை ஆராய்ந்துபார்த்தால், மறுவாழ்வு மையங்களை அதிகப்படுத்துதல் என்ற விஷயத்தை ஏன் அரசு ஆர்வம் காட்டவில்லை என்ற எண்ணம் நமக்கு எழாமல் இல்லை. ஒருவேளை அரசும் டாஸ்மாக்கை வருவாய்க்கான கூடாரமாகத்தான் பார்க்கிறதா என சந்தேகிக்க வேண்டியுள்ளது.

image

போதைப்பொருள் தடுப்பு அதிகாரியான ஐ.ஆர்.எஸ். மரு.வெங்கடேஷ் பாபு இதுபற்றி நம்மிடையே பேசியபோது, “அரசை இந்த விஷயத்தில் நம்மால் பெரியளவில் குறை சொல்ல முடியாது. ஏனெனில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையமும், அப்பகுதிக்கான மறுவாழ்வு மையங்களாக செயல்பட வேண்டுமென்பது, சட்டம். ஆனால் அப்படியா நம் மக்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களை செயல்படுத்துகின்றனர்? இங்கு பல பேருக்கு, தடுப்பூசி போடவேண்டும் என சொன்ன பிறகுதான், எங்கே ஆரம்ப சுகாதார நிலையம் என தேட மனம் வந்துள்ளது. மக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது.

image

அதை ஏற்படுத்துவதில், அரசின் பங்கும் இருக்கிறது என்பதால், அரசிடம் சில கோரிக்கைகள் வைக்க விரும்புகிறேன்.

  • ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும், மனநல மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள். எனினும், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் அவர்களை நியமித்தால், இன்னும் கூடுதலாக – நேரடியாக நம்மால் மக்களை சென்றடைய முடியும். அதன்மூலம் பலரை மீட்கமுடியும்.
  • குடிக்கு அடிமையானவர்களை, அதற்கான சிகிச்சைக்கு அழைத்துவருவது மிகவும் சிரமமான காரியம். ஆகவே, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும், இதற்கென பணியாளர்களை நியமித்தால், அவர்கள் மூலம் தங்கள் வீட்டிலுள்ள குடிக்கு அடிமையான நபர்களை குடும்பத்தினர் அழைத்து வருவார்கள்.

image

  • மக்கள் தரப்பில், குடிக்கு அடிமையானவர்களை மீட்பது பற்றிய அடிப்படை புரிந்துணர்வு தேவை. அதை அரசு காணொலி வாயிலாகவோ, விளம்பரங்கள் வாயிலாகவோ மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். இதை குறிப்பிட்டு சொல்லக் காரணம், இங்கு பல வீடுகளில், மனநல மருத்துவர்தான் குடிக்கு அடிமையாகும் நபரை மீட்க சிகிச்சை அளிப்பார் என தெரியவில்லை. அப்படித் தெரிந்தால், தொடக்க நாட்களிலேயே அவர்கள் மனநல மருத்துவரிடம் அந்நபரை அழைத்து சென்றிருப்பார்கள். விழிப்புணர்வை காரணமாக, அந்நபர் போதைக்கு மிகவும் அடிமையாகும் சூழல் வந்து – அதன்பிறகு ‘மறுவாழ்வு மையங்களுக்குத்தான் செல்ல வேண்டும், நம் ஊரில் அது இல்லை. வேறு ஊருக்கு ஊரடங்கு நேரத்தில் செல்ல முடியவில்லை’ என்று கூறுகிறார்கள். இப்படியானவர்களுக்கு, ‘மது அடிமையாளர்களை, மனநல மருத்துவரிடம் அழைத்துச்சென்று ஆலோசனையும் உரிய மருந்தும் சரியாக கொடுத்தால், அவரை அதிலிருந்து மீட்க முடியும்’ என்ற புரிதலை கொடுக்க வேண்டும்.

இவை மூன்றும் நடைமுறையில் எந்தளவுக்கு சாத்தியமோ, அந்தளவுக்கு செய்தால்கூட மிகவும் உதவியாக இருக்கும்.

இவை அனைத்தையும்விட முக்கியமானது, டாஸ்மாக் கடைகளை மூடுவது. வருமானம் பார்க்கும் துறை, இது இல்லை என்பதை அரசு புரிந்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் கொரோனாவால் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கானோர் இறக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கையை, மது அதிகரிக்கும். ஒருபக்கம், தடுப்பூசி போடுங்கள் என சொல்லிவிட்டு, இன்னொருபக்கம் மனிதர்களை கொல்லும் ஆயுதத்தை அரசே அனுமதிக்கலாமா?

ஒருசிலர், ‘டாஸ்மாக் திறந்தால் என்ன? மறுவாழ்வு மையங்களை அதிகப்படுத்துங்கள். அதன்மூலம் அவரை மீட்டெடுக்க, குடும்பங்கள் முயலவேண்டும். குறிப்பிட்ட நபருக்கு சுயக்கட்டுப்பாடு முக்கியம். குடும்பத்தினருக்கு கூடுதல் பொறுப்புணர்வு வேண்டும்’ என்றெல்லாம் சொல்கிறார்கள். இப்படியான்வர்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றுதான். அது, ‘உங்களுக்கு பிடித்த, நீங்கள் பார்த்தவுடன் சாப்பிடத்தூண்டும் ஓர் உணவை ஒருபக்கம் வைத்துவிட்டு, அதை சாப்பிடாதே என இன்னொருபக்கம் உங்களை அழைத்தால், நீங்கள் செல்வீர்களா?’ உணவுக்கே நாம் யோசிப்போம்… இதுவோ, மது. குறிப்பிட்ட நபர், அதற்கு அடிமையாக இருக்கிறார். அவரிடம் போய், ‘இந்தக் கடை இருக்கும். இங்கு விற்பனையும் நடக்கும். நீ நினைத்தால், இதை வாங்கி அருந்தலாம். ஆனால் நீ வாங்காதே. மதுவை குடிக்காதே, வா மருத்துவமனைக்கு போகலாம். இதிலிருந்து மீளலாம்’ எனக்கூறினால், அவரிடமிருந்து எப்படி உங்களால் ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்க முடியும்?

ஒருவர் போதைக்கு அடிமையாகிறார் என்றால், அவரை அதிலிருந்து மீட்க, மருந்து மாத்திரை தரப்பட வேண்டும். கூடவே, அவருக்கு மது தரப்படாமல் இருக்க வேண்டும். இவை இரண்டும் நடந்தால்தான், அவரை மீட்க முடியும்.

image

அதைவிட்டுவிட்டு, ‘நான் டாஸ்மாக்கை திறப்பேன். நீ மருத்துவமனைக்கு செல்’ என்றால், அது மக்களின் மேல் பழிபோட்டுவிட்டு, நாம் ஒதுங்கிக்கொள்வதென்று ஆகிவிடாதா? அரசு இதை புரிந்துக்கொள்ள வேண்டும். அந்த புரிந்துணர்வோடு, டாஸ்மாக்கை மூடிவிட்டு, மறுவாழ்வு மையத்துக்கான பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். அதுவே தீர்வு.

இவை அனைத்துக்கும் முதன்மையாக, தன் வருவாய்க்கு வேறு வழியை அரசு தேட வேண்டும்” என்றார் அவர்.

– ஜெ.நிவேதா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.