லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சிராக் பாஸ்வான் நீக்கப்பட்டுள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகனான சிராக் பாஸ்வான் நீக்கப்பட்டார். ராம் விலாஸ் பாஸ்வானின் சகோதரர் பசுபதி குமார் பாஸ்வான் தலைமையின் கீழ் லோக் ஜனசக்தி கட்சி வந்தது. 6 எம்பிக்களில் 5 பேர் தனிக் குழுவாக செயல்பட மக்களவை சபாநாயகர் ஏற்கனவே ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் நடப்பது என்ன?

கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது பீகார் சட்டமன்றத் தேர்தல். இதில் பாரதிய ஜனதா கட்சி – நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மறுபுறம் காங்கிரஸ் – லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி கூட்டணி வைத்தது.

இதில் பெரும் இழுபறிகளுக்கு மத்தியில் நிதீஷ்குமார் ஆட்சியை தக்க வைத்திருந்தார். மற்றொருபுறம் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் இளம் தலைவரான தேஜஸ்வி யாதவ் 75 இடங்களில் வெற்றி பெற்று அம்மாநிலத்தின் முக்கிய எதிர்கால தலைவராக மாறினார்.

image

இதில் பரிதாபகரமான விஷயம், பீகார் அரசியலில் முக்கியத் தலைவராக பார்க்கப்பட்ட ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி 135 இடங்களில் போட்டியிட்டு வெறும் ஓர் இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. அக்கட்சி, தன்னுடைய முக்கிய வாக்கு வங்கிகளாக பார்க்கப்பட்ட இடங்களிலும் மிக மோசமான தோல்வியைத் தழுவியது.

பாரதிய ஜனதா கட்சியுடன் நிரந்தர கூட்டணி என்று சொல்லுமளவிற்கு மிக நெருங்கிய கூட்டாளியாக இருந்த லோக் ஜனசக்தி கட்சி பீகார் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை முறித்துக் கொண்டு தனித்துப் போட்டியிட்டது. குறிப்பாக ராம் விலாஸ் பஸ்வான் மறைந்த அதற்கு பிறகு, தன்னை முழுமையாக நிரூபிக்க கட்சியின் புதிய தலைவராக இருந்த அவரது மகன் சிராக் பஸ்வான் இந்த முடிவை எடுத்திருந்தார். ஆனால், அவரது முடிவு தவறாய் போய் முடிய, அந்த பாதிப்பு தற்பொழுது கட்சியில் வெளிப்படையாக தெரியத் தொடங்கியிருக்கிறது.

லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் சிராஸ் பஸ்வானையும் சேர்த்து ஆறு பேர் மக்களவை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 5 பேர் தற்பொழுது சிராக் பாஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதை முன்னின்று நடத்துபவர் ராம் விலாஸ் பஸ்வானின் தம்பியும், சிராஜ் பஸ்வானின் சித்தப்பாவுமான பசுபதிகுமார் பராஸ் ஆவார்.

அவருடன் சவுதிரி மெகபூ, வீணா தேவி, பிரின்ஸ் ராஜ், சந்தன் சிங், ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சிராக் பஸ்வானை நீக்கிவிட்டு பசுபதி குமார் குமார் தலைமையில் செயல்பட அனுமதி அளிக்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் வழங்கியுளளனர்.

ஆனால் இந்த இருவருக்கும் உள்ளான உள்கட்சி பூசல் என்பது கடந்த ஒரு வருடமாகவே இருந்து வந்தது. பசுபதி குமார் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை பாராட்டி வந்ததும், அதற்கு சிராக் பஸ்வான் மறைமுகமாக சாடி வந்ததும் தொடர்ந்து நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் பல தரப்பு தலைவர்களுடனும் தொடர்ந்து ஆலோசித்து வந்த பசுபதி குமார் தற்போது கட்சித் தலைவர் சிராஜ் பஸ்வானுக்கு எதிராக முழுமையாக கொதித்தெழுந்து உள்ளார்.

தனது சித்தப்பாவின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து கூறியுள்ள சிராக் பஸ்வான், “அவர் என் சொந்த ரத்தம் கிடையாது. கட்சியை சுயநலத்திற்காக உடைக்க பார்க்கிறார்கள். அவர் விரைவில் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்” என கூறியுள்ளார்.

image

அதற்கு பதிலளித்துள்ள பசுபதி குமார், “இப்போதிலிருந்து உன் சித்தப்பா இறந்துவிட்டார் என நினைத்துக் கொள்” என்று கூறியுள்ளார். மேலும் கட்சி உடைவதை தடுக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொள்வது மற்றவர்களுக்கு விருப்பமில்லாமல் இருந்ததும், அதை சிராக் செய்ததாலேயே தற்போது இந்த பிளவு ஏற்பட்டு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதை மெய்ப்பிக்கும் வண்ணம் போர்க்கொடி உள்ள 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாங்கள் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முழு ஆதரவையும் வழங்குவோம் என கூறியுள்ளனர்.

தொடர்ந்து கூட்டணியில் இருந்திருந்தால் ராம் விலாஸ் பஸ்வான் வழங்கியதைப் போல தனக்கும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என பசுபதி குமார் திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் கூட்டணி முறிவால் அவரது அந்த எண்ணம் நிறைவேறாமல் போகவே தற்பொழுது கட்சியை கைப்பற்ற அவர் முழு முயற்சியாக இறங்கி இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

கடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு சிறுபான்மையினரின் ஓட்டுகள் செல்லாமல் தடுத்து அதன் மூலம் பாஜக – நிதிஷ்குமாரின் வெற்றியை உறுதி செய்யவே சிராக் பஸ்வான் தனித்துப் போட்டியிடுகிறார் என பல்வேறு தரப்பினரும் சொல்லி வந்த நிலையில், தற்பொழுது அதே காரணத்திற்காக கட்சியே உடையும் அளவிற்கு சென்றிருக்கிறது என்றும் பீகார் அரசியலில் இது ஒரு முக்கிய திருப்பம் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

கிட்டத்தட்ட கட்சியில் முழுமையாக தனித்துவிடப்பட்ட நிலைக்கு போய் உள்ள சிராக் பஸ்வான் தான் இன்று நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.