தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் டாஸ்மாக்கைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக்கைத் திறக்க அறிவுறுத்தியிருந்தாலும் அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜ.க மற்றும் பா.ம.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டாஸ்மாக்கைத் திறக்கும் அரசின் முடிவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதுமட்டுமல்ல பா.ஜ.க தலைவர்கள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் திறப்பிற்கு எதிராகப் போராட்டங்களையும் நடத்தியுள்ளன. “பல்வேறு விமர்சனங்கள் வரும் என்கிற நிலையிலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக்கூடாது என்பதில் இந்த அரசு கவனமாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இயங்கும்.

மு.க.ஸ்டாலின்

கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்த நேரத்திலும் இந்தத் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்கிறேன். கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும். காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே கட்டுப்பாட்டோடு நடந்துகொள்கிற மக்களாக நம் தமிழக மக்கள் மாறவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்” எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.

Also Read: டாஸ்மாக் திறந்த முதல் நாள்… கொலையில் முடிந்த குடிபோதைத் தகராறு! – குமரியில் அதிர்ச்சி சம்பவம்

தமிழ்நாடு அரசின் மதுக்கடை திறப்பு குறித்து பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம் “சென்ற ஆண்டு இதே சூழலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் டாஸ்மாக் திறப்பு குறித்து ‘குடியைக் கெடுக்கும் அ.தி.மு.க, எடப்பாடி’ என்று விமர்சனங்களை முன்வைத்தார்கள். ஆனால், இன்று டாஸ்மாக் திறப்பு குறித்து ஆதரவாகப் பேசி வருகிறார்கள். அ.தி.மு.க செய்தது தவறு என விமர்சித்துவிட்டு இன்று தாங்களும் அதையே செய்துவிட்டு நியாயம் பேசுவதற்கு தி.மு.க-வினர் மன்னிப்பு கேட்க வேண்டும். டாஸ்மாக் திறந்தது அமைச்சர்கள் வருமானம் பார்ப்பதற்காக என்று சொன்ன தி.மு.க-வினர் இன்று திறந்திருப்பது யாருடைய வருமானத்திற்காக எனச் சொல்ல வேண்டும். இன்று தொற்று அதிகரிக்கும் நிலையில் நூலகங்கள், கோவில்களைத் திறப்பதில் கவனம் செலுத்தாமல் டாஸ்மாக் திறப்பிற்கு உரிய நெறிமுறைகள், பாதுகாப்பிற்கு ஆயிரம் போலீசார் என ஆயிரக்கணக்கான மக்களை ஒரே இடத்தில் கூடச் செய்வது மனிதாபிமானமற்ற செயல். டாஸ்மாக் கடைகளைத் திறந்து, கடந்த இரண்டு மாதங்களாக எந்தத் தொழிலும் செய்யாமல் வருமானமின்றி தவிக்கும் சுமார் 60 முதல் 70 சதவிகித உழைக்கும் மக்களிடமிருந்து வருமானத்தைப் பார்க்கும் அரசின் செயல் கண்டனத்திற்குரியது. காலமும், மக்களும் தி.மு.க-வின் செயலை எப்போதும் மன்னிக்கமாட்டார்கள்.

நாராயணன் திருப்பதி

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மது ஆலைகள் திறந்திருக்கிறது. அது குறித்து கேள்வி எழுப்புவதில்லை என்று கூறுகிறார்கள். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்திருக்கிறார்கள் என்று பேசுவதே தேவையற்றது. ஏனெனில் இந்தியாவிலேயே மதுவால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுவது தமிழகத்தில்தான். அதுமட்டுமல்ல பீகாரிலோ, கர்நாடகாவிலோ, புதுச்சேரியிலோ குடி நோயாளிகள் யாரையும் பார்க்க முடியாது. ஆனால், திராவிட கட்சிகளின் அதிகபட்ச சாதனையே தமிழர்களை பெரும் குடி நோயாளிகளாக மாற்றி வைத்திருப்பதுதான். மது ஆலை அதிபர்களின் நலன், அதிகாரிகளின் வருமானத்திற்காகவே இங்கே மதுக்கடைகள் திறந்திருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து தி.மு.க செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டோம் “புதுச்சேரி, கர்நாடகா போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்து வைத்திருக்கிறார்களோ அதே நோக்கம்தான் எங்களுக்கும். சரி, உண்மையில் பா.ஜ.க-வுக்கு மக்கள் மீது அக்கறை இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். 1969-இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மதுவிலக்கைக் கொண்டு வந்தபோது அதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஒன்றிய அரசு ஈடு செய்யும் என்று அறிவித்தார். எங்கே, தமிழக பா.ஜ.க தலைவர்கள் எல்.முருகன், வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி மக்கள் மீது அவ்வளவு நலனில் அக்கறை வைத்திருக்கிறார்கள், யோக்கியமானவர்கள் என்றால் மதுக்கடைகளைத் தமிழ்நாடு அரசு மூடட்டும். அதனால் வரும் வருவாய் இழப்பை ஒன்றிய பா.ஜ.க அரசிடம் வாங்கித் தருகிறோம் என்று சொல்லட்டுமே.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

பெட்ரோலில் இன்றைக்கு 32 ரூபாய் வரியாகப் பிடுங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதில் வெறும் 1.50 காசுகள் மட்டும்தான் மாநில அரசுக்குக் கொடுக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோலுக்கான வரி வசூலில் ஒன்றிய அரசுக்கு 60சதவிகிதம் என்றும் மாநில அரசுக்கு 40 சதவிகிதம் என்றும் இருந்தது. தமிழ்நாட்டிற்கு முறையாக ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகைகளைக் கேட்டு வாங்கித் தருவதற்கு இங்கிருக்கும் பா.ஜ.க-வினருக்கு வக்கு இருக்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்கள்.

அ.தி.மு.க-வுக்கு எல்லாம் இதைப் பற்றிப் பேசத் தகுதியே இல்லை. தி.மு.க அரசு தொற்று குறைந்ததும் வல்லுநர்களுடன் ஆலோசித்துத்தான் மதுக்கடைகளையே திறக்க அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் மதுக்கடைகள் மூடப்படவே இல்லையே. அவர்களுக்கெல்லாம் தி.மு.க-வை விமர்சனம் செய்ய என்ன தகுதியிருக்கிறது? உண்மையில் எதிர்க்கட்சியினருக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். பாண்டிச்சேரியில் இருக்கும் தமிழ் மக்களுக்காக மதுக்கடைகளைத் திறந்து தமிழ்நாட்டு மக்களுக்கும் விற்பனை பார்த்தவர்கள் தானே பா.ஜ.க-வினர். அப்போது எங்கே சென்றது தமிழ்நாட்டு மக்கள் மீதான அக்கறை. மதுக்கடைகள் திறப்பு குறித்து பா.ஜ.க, அ.தி.மு.க., பா.ம.க-வுக்கே தகுதி இல்லை. மக்களுக்கு எங்கள் மீது விமர்சனம் இருக்கலாம். அதற்கு நாங்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பா.ஜ.க போராட்டம்

மூத்த அரசியல்வாதி என்று சொல்லிக் கொண்டிருக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்-க்கு தெரியாதா மதுக்கடைகளைத் திறந்ததன் நோக்கம். வருமானம்தான் நோக்கம் என்றால் அதை ஒன்றிய அரசிடம் கேட்டுப் பெறும் வழிகளை அவர் அரசுக்குச் சொல்லலாமே. அதற்கு யாரும் தடை போடுகிறார்களா? எதிர்ப்பு அறிக்கை எழுதப் பயன்படுத்தும் அறிவை நல்லதுக்கும் பயன்படுத்தலாமே. இருக்கும் சுகாதார நெருக்கடியைச் சமாளிக்க வருமானம் தேவை என்பது மருத்துவர் ராமதாஸூக்குத் தெரியாதா? ஓரளவுக்கு நாடகமாடலாம். ஆனால், இப்படி கோமாளித்தனமான நாடகங்கள் ஆடக்கூடாது. அது நல்ல அரசியல் அல்ல” என விமர்சனங்களுக்குப் பதிலளித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.