உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 4 வயது குழந்தை ஷிவா. நேற்று காலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஷிவா, 150 அடி ஆள்துளை கிணற்றில் விழுந்துவிட்டான். உடனடியாக பேரிடர் மீட்புப் படை, ராணுவம், காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து குழந்தையை மீட்கும் பணிகளில் இறங்கினர்.

ஷிவா

Also Read: `மொத்த சீனாவையும் மாற்றிய முடிவு!’ – ஒற்றைக் குழந்தை திட்டத்தால் எப்படி முடங்கியது சீனா?

90 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். குழந்தைக்கு மூச்சுத்திணறல் வந்துவிடக்கூடாது என்பதற்காக குழாய் மூலம் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டது. மற்றொரு குழாய் மூலம் குழந்தைக்கு தண்ணீரும் கொடுக்கப்பட்டது.

ஜே.சி.பி உதவியுடன் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்தது. 8 மணி நேர தொடர் முயற்சிக்கு பலனாக, மாலை குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையை பத்திரமாக தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றியவர் ஆக்ரா எஸ்.எஸ்.பி முனிராஜ். தமிழ்நாட்டைச் சேர்ந்த முனிராஜ்க்கும் இந்த ஆபரேஷனில் முக்கிய பங்கு உள்ளது. அந்த திக் திக் நிமிடங்கள் குறித்து அவரிடம் பேசினோம்.

முனிராஜ்

“காலை 7.30 மணிக்குதான் இந்த சம்பவம் நடந்தது. அவர்களின் சொந்த ஆள்துளை கிணற்றில்தான் குழந்தை விழுந்தான். உடனடியாக நாங்களும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து விட்டோம். பிறகு ராணுவத்தினரும் வந்துவிட்டனர்.

முதலில் கேமிரா உதவியுடன், குழந்தையின் அசைவுகளை கண்காணிக்க தொடங்கிவிட்டோம். எங்கள் போலீஸாருக்கு சொன்ன ஒரே விஷயம், ‘எந்தக் காரணத்தை கொண்டும் அவர்களின் முயற்சிக்கு நாம் தடையாக இருக்கக் கூடாது’ என்பதுதான். சில நேரங்களில் மண் உள்ளே சென்று ஆபரேஷனில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீட்புப் பணி

நம்மால் அதுபோன்ற சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், அருகில் 50 அடிக்கு குழி தோண்டி, பிறகு அதனருகில் ஒரு குழி தோண்டி கீழ் பகுதியில் இருந்து குழந்தையை மீட்டுவிடலாம் என்று கூறினர். ஆனால், அதற்கு 15-20 மணி நேரம் ஆகலாம்.

குழந்தைக்கு ஆக்ஸிஜன், தண்ணீர், ஓ.ஆர்.எஸ், குளுக்கோஸ் போன்றவை கொடுத்து வந்தோம். குழந்தை அழுவது எங்களுக்கு தெளிவாக கேட்டது. அவனின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்தோம். மதியம் 1 மணியளவில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வந்தனர். அவர்கள் வந்ததும், மாநில பேரிடர் மீட்புப் படையின் திட்டத்தை B ஆக மாற்றிவிட்டோம்.

மீட்புப் பணி

தேசிய பேரிடர் மீட்புப் படையின் திட்டத்தை A ஆக மாற்றிவிட்டோம். அவர்கள் ஒருவகை கொக்கியை வைத்து மேலே இழுக்கும் திட்டத்தை கூறினார்கள். ஆரம்பத்தில் அதன் சாத்தியக் கூறுகள் குறித்து எங்களுக்கு தெரியவில்லை.

குழந்தை என்பதால், அவ்வளவு தூரம் தூக்கி ஏதாவது சிக்கல் வந்துவிடுமோ? என்று யோசித்தோம். ஆனால், அவர்கள் சமீபத்தில்தான் இந்தமுறையில் ஒரு ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்ததாக கூறினர். குழந்தையின் கை பகுதியும் சற்று மேலே இருந்தது. மணிக்கட்டு பகுதியில் நன்றாக இறுக்கி, தலையை சற்று நேராக வைத்துக் கொண்டால் போதும் என்றனர்.

குழந்தை மீட்பு

குழந்தையும் எங்களுக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்கினான். ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் குழந்தை கைப்பகுதியில் நன்றாக இறுகிவிட்டது. அந்த முயற்சிக்கு அரைமணி நேரத்திலேயே பலன் கிடைத்துவிட்டது.

8 மணி நேர தொடர் முயற்சிக்கு பிறகு, மாலை 4.30 மணியளவில் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டான். உடனடியாக அவனது உடல்நிலை குறித்து மருத்துவக் குழு சோதனை செய்தனர். குழந்தை கண் முழித்தபடி நன்றாக இருந்தான். எதற்கும், 24 மணிநேரம் குழந்தை மருத்துவ கண்காணிப்பில் இருப்பது நல்லது என்பதால், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்தோம்.

குழந்தை மீட்பு

குழந்தையின் பெற்றோர் கண்ணீருடன் நன்றி கூறினர். சமீபகாலத்தில் 16 மணி நேரத்துக்குள் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட ஆபரேஷன் இது என்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.