பிரெஞ்சு ஓபன் தொடரின் ஒற்றையர் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் செர்பியாவை சேர்ந்த 34 வயது வீரர் நோவாக் ஜோகோவிச். டென்னிஸ் விளையாட்டு உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் வென்றுள்ள பத்தொன்பதாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது. இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சின் ஆட்டத்தை பார்த்தால் பழையை தமிழ் சினிமா ஹீரோக்கள் போடும் சண்டை காட்சியை போல இருந்தது என்று கூட சொல்லலாம். ஏனெனில் வழக்கமாக அவர்கள் இரண்டு அடி வாங்கிய பின்புதான் சண்டை போடுவார்கள். அது போல கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் இடம் முதல் இரண்டு செட்களை பறிகொடுத்த ஜோகோவிச் அதற்கு பிறகு நடைபெற்ற மூன்று செட்களையும் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 

image

நடால், ஃபெடரர்  மற்றும் ஜோகோவிச் : ஒப்பீடு 

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரஃபேல் நடால் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் பெடரர் ஆகிய இருவரும் இதுவரை 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். அவர்களுடன் ஒப்பிடும் போது ஜோகோவிச் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை குறைவாகதான் வென்றுள்ளார். ஆனால் அதை மட்டுமே வைத்து யார் சிறந்த வீரர் என்பதை சொல்லிவிட முடியாது. ஒப்பீடுகள் இல்லாமல் பார்த்தால் மூவரும் செம வெயிட்டான வீரர்கள்தான். 

இதுவரை ஃபெடரரை (27 – 23) முறையும், நடாலை (30 – 28) முறையும் நேருக்கு நேராக மோதி வென்றுள்ளார் ஜோகோவிச். நான்கு விதமான கிராண்ட் ஸ்லாம்களிலும் இருவரையும் ஜோகோவிச் வீழ்த்தியுள்ளார். அதே போல இருவரையும் பலமுறை இறுதி போட்டிகளிலும் ஜோகோவிச் வீழ்த்தியுள்ளார். 

image

அதே போல ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன்,  விம்பிள்டன் மற்றும் அமெரிக்கன் ஓபன் என நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் இரண்டு முறை வென்றவராக திகழ்கிறார் ஜோகோவிச். நடால் இதுவரை தனது கரியரில் ஒரு முறை தான் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். ஃபெடரர் ஒரு முறை மட்டுமே பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய ஓபனை ஒன்பது முறை வென்றுள்ளார் ஜோகோவிச். இப்போது கூட களிமண் ஆடுகளங்களில் வீழ்த்த முடியாத வீரரான நடாலை பிரெஞ்ச் ஓபன் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் வீழ்த்தி இறுதி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் ஜோகோவிச். 

ஹார்ட் கோர்ட்களில் ஜோகோவிச் ஃபெடரரை 20 – 18 முறையும், நடாலை 20 – 7 முறையும் வென்றுள்ளார். அதே போல ஐந்து செட்கள் கொண்ட போட்டிகளில் ஜோகோவிச் 77 சதவிகிதம் வெற்றி வாய்ப்பை தன்பக்கம் தக்கவைத்துள்ளார். ஆனால் நடால் 63 சதவிகிதமும், ஃபெடரர் 58 சதவிகிதமும் வெற்றி வாய்பை கொண்டுள்ளனர். மேலும் டாப் 10 மற்றும் டாப் 5 வீரர்களுக்கு எதிரான போட்டிகளிலிலும் ஜோகோவிச் தனது சக்சஸ் ரேட்டை பிரகாசமாக வைத்துள்ளார். 

image

இவை அனைத்திற்கும் மகுடம் சேர்க்கும் விதமாக 326 வாரங்கள் தொடர்ச்சியாக உலகின் முதல் நிலை வீரராக ATP ரேங்கிங்கில் நீடித்து வருகிறார் ஜோகோவிச். 

– எல்லுச்சாமி கார்த்திக் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.