கடந்த ஓர் ஆண்டில் அதிகம் வளர்ச்சி அடைந்த குழுமமாக அதானி குழுமம் இருக்கிறது. இந்தக் குழுமம் புதிதாக சிமென்ட் துறையில் களம் இறங்குகிறது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமான அதானி சிமென்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜூன் 11-ம் தேதி இந்த நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதுவரை இந்த நிறுவனம் செயல்பாட்டை தொடங்கவில்லை. ஆனால், அனைத்து வகையான சிமென்ட் உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்த நிறுவனத்தின் தலைமையகம் இருக்கும் என்றும் அதானி குழுமம் தெரிவித்திருக்கிறது.

எப்.எம்.சி.ஜி, துறைமுகம், விமான நிலையம், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் அதானி செயல்பட்டுவருகிறது. மத்திய அரசு கட்டுமானத்துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், இதுவரை மந்தமாக இருந்த கட்டுமானத்துறை அடுத்த சில ஆண்டுகளுக்கு வேகம் எடுக்கும் என்னும் எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில் அதானி குழுமம் சிமென்ட் பிரிவை தொடங்கி இருக்கிறது. அதானி குழுமத்தின் முடிவு காரணமாக அடுத்த பெருந்தொற்று முடிந்த பிறகு சிமென்ட் துறையில் ஏற்றம் இருக்கும் என்றே சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

image

கட்ச் காப்பர்:

இந்த ஆண்டில் ஏற்கெனவே சில தொழில்களில் அதானி குழுமம் செயல்பாட்டை தொடங்கி இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் காப்பர் தொழிலில் அதானி குழுமம் இறங்கியது. கட்ச் காப்பர் லிமிடெட் என்னும் பெயரில் புதிய நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் காப்பர் கேதோடு மற்றும் காப்பர் ராட்களை தயாரிக்க இருக்கிறது. எலெட்க்ரிக்கல், பாக்கேஜிங், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளுக்கு காப்பர் முக்கியமான மூலப்பொருள்.

முந்த்ரா விண்ட்டெக்

கடந்த சில நாட்களுக்கு முன்பு (ஜூன் 7) முந்த்ரா விண்ட்டெக் என்னும் நிறுவனத்தையும் அதானி குழுமம் தொடங்கி இருக்கிறது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இந்த நிறுவனம் இருக்கும். விண்ட் டர்பைன் ஜெனரேட்டர்களை தயாரிப்பதற்காக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது.

மேலும், கடந்த மார்ச் மாதம் மகாநதி மைன்ஸ் அண்ட் மினரல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தையும் பதிவு செய்திருக்கிறது. சுரங்க துறையில் செயல்படுவதற்காக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு இந்த ஆண்டும் மட்டும் 43 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட ஆறு நிறுவனங்கள் உள்ளன. அதானி குழும பங்குகள் சந்தையில் உயர்வதால் மேலும் இரு துணை நிறுவனங்களை பட்டியலிட திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் அதானி வில்மர் (உணவு துறை) ஆகிய இரு நிறுவனங்களை பட்டியலிட திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது. அதானி குழுமத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது.

– வாசு கார்த்தி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.