காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எண்ணெய் கிணறு ஏலத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசை  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய எரிசக்தி இயக்குநரகம் சார்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த 10 ம் தேதி கண்டறியப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வகை எண்ணெய் கிணறுகளுக்கான சர்வதேச அழைப்பாணையை தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 75 இடங்களுக்கான இந்த சுற்றில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியிலும் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளையும் உள்ளடக்கி உள்ளது.

கடந்த மார்ச் 2016ல் மத்திய அரசால் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கை  HELP (Hydrocarbon Exploration Licensing Policy) அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ONGC மற்றும் OIL India நிறுவனங்கள் கச்சா எண்ணெய் எடுக்க கையகப்படுத்திய பகுதிகளில், ஆய்வின் போது வணிக ரீதியாக சாத்தியமில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட சிறு மற்றும் நடுத்தர எண்ணெய் வயல்களை, சர்வதேச அளவில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டு ஏற்கனவே இரண்டு சுற்று ஏலம் முடிவடைந்துள்ளது.

இதன் முதல் சுற்றில், தமிழகத்தின் நெடுவாசல் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியும் இருந்தது.ஏற்கனவே கச்சா எண்ணெய்க்காக கையகப்படுத்தபட்டுள்ள இந்த பகுதியில் HELP கொள்கை மூலம் ஒற்றை அனுமதி என்கிற பெயரில் கச்சா எண்ணெய் அனுமதியுடன் மீத்தேன்,  ஷேல் கேஸ், டைட் கேஸ் உள்ளிட்ட பல வகையான எண்ணெய் மற்றும் எரிபொருட்களை எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. இதன் காரணமாக நெடுவாசல் பகுதியில் மக்கள் பெரும் தொடர் போராட்டங்களை நடத்தினர், அதனை தொடர்ந்து அந்த பகுதியை ஏலம் எடுத்த, எண்ணெய் எடுக்கும் பணியில் முன் அனுபவம் இல்லாத ஜெம் லேபாரட்டரி நிறுவனம் வேலைகளை தொடங்க மாநில அரசு தடை விதித்தது. அதேபோல் பாண்டிச்சேரி அரசும் தடை விதித்தது.

image

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2019 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் புதிதாக எண்ணெய் எடுப்பதற்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி வட்டத்தில், நெடுவாசலுக்கு அருகே உள்ள ’வடத்தெரு’ பகுதியிலும் மேலும் பவளப்பாறைகள் அதிகம் உள்ள மன்னார் வளைகுடா பகுதியில் (நிலம் மற்றும் ஆழமற்ற கடல் பகுதியில்), ஏற்கெனவே கச்சா எண்ணெய் எடுக்க அனுமதிப்பெற்று சாத்தியமில்லா சூழலில் ONGC நிறுவனத்தால் கைவிடப்பட்ட பகுதிகளில், பிராக்கிங் உள்ளிட்ட நில மற்றும் நீர் வளத்திற்கு ஆபத்தான முறைகளை கையாள அனுமதிக்கப்பட்ட புதிய முறையில் ஏலம் விடப்பட்டுள்ளதை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கவலையோடு பார்க்கிறது.

உடனடியாக மேற்கண்ட பகுதிகளை ஏலத்திலிருந்து விலக்க வேண்டுமென மத்திய அரசை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொள்கிறது. இது விசயத்தில் மாநில அரசும், உரிய விதத்தில்  தலையிட வேண்டும் எனவும்   தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.