பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் கடன் தவணை செலுத்துவதற்கு அவகாசம் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளே பொதுமுடக்கத்தை அமல்படுத்தி வருவதால், வங்கி கடன் அவகாசத் திட்டத்தில் உத்தரவிட வேண்டிய மத்திய ரிசர்வ் வங்கி மவுனம் காத்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை பரவிய போது, தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசே பொதுமுடக்கத்தை அறிவித்த்து. அப்போது, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியோர், அதற்கான தவணை செலுத்த, இந்திய ரிசர்வ் வங்கி, மூன்று மாதம் அவகாசம் வழங்கியது.

தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ள நிலையில், மாநில அரசுகளை பொதுமுடக்கத்தை அறிவித்து வருகின்றன. இந்தியா முழுவதும் மத்திய அரசு சார்பில் பொதுமுடக்கம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

பல மாநிலங்களில் விதிக்கப்பட்டு பல கட்டுப்பாடுகள் காரணமாக பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பெரும்பான்மையான நிறுவனங்களில் ஊதியம் பிடித்தம் செய்துள்ளதால், வாங்கிய கடன்களை செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். எனவே, கடந்த ஆண்டு போன்று தற்போதும் கடன் தவணை செலுத்த, அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு, மத்திய அரசே பொதுமுடக்கம் அறிவித்ததால், ரிசர்வ் வங்கி தலையிட்டு கடன் தவணைக்கான அவகாசத்தை வழங்கியது. இம்முறை மாநில அரசுகளே பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதால் ரிசர்வ் வங்கி மவுனம் காப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கி தனது மவுனத்தை கலைத்து, உடனடியாக கடன் தவணைக்கான அவகாசத்தை வழங்க வேண்டும் என்பதே அனைத்துதரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.