ரிலேஷன்ஷிப்பைப் பற்றிய தொடர் என்றதும் பலரும் கேட்ட கேள்வி `நம்ம ஊருக்கு செட்டாகுமா?’ என்பதுதான். அவர்கள் கேட்டதிலிருந்து ஒன்று புரிந்தது. ஆண் பெண் உறவைப் பற்றிய புரிதல் காலத்துக்கேற்ப மட்டும் மாறக்கூடியதல்ல; சமூகத்துக்கு சமூகம் மாறக்கூடியதுதான். மேற்கத்திய கலாசாரத்தில் ஆண் – பெண் என்ன செய்வார்கள்? முதலில் அறிமுகம், பின் டேட்டிங், பிறகு காதலிப்பதாக உறுதியாகத் தெரிந்தால் காதலைச் சொல்வது, அங்கிருந்து சேர்ந்து வாழும் நிலைக்குச் (Livin) செல்வது. சேர்ந்து வாழ முடிவு செய்யும்போதுதான் பெற்றோர்களிடமே சொல்வார்கள். அதன் பின், அந்த வாழ்க்கை பிடித்தால், பார்ட்னரோடு காலம் முழுவதும் வாழ்ந்திடலாம் எனத் தோன்றினால் புரொபோஸ் செய்வது, புரொபோஸல் ஏற்றுக்கொள்ளப்பட்டால் `engaged’, பின்னர் திருமணம். இதில் எந்த நிலையிலும் ஒத்துவராவிட்டால் பிரேக்அப்.

Breakup is not recommended; But also not that unaccepted.

இந்தியச் சூழலில் இவை சாத்தியமில்லை என்பது நாமறிந்ததே. அதற்காக பிரேக்அப் என்பதே மகா பாவம்; தவறு எனச் சொல்லிவிட முடியுமா? எந்தப் பிரச்னைக்கும் பிரேக்அப் தீர்வில்லை; அதற்காக பிரேக்அப் ஏற்கக்கூடாத விஷயமுமில்லை. இன்று பிரேக்அப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். இதுவரை இந்தத் தொடரில் நாம் பார்த்த `ஐடியல் ரிலேஷன்ஷிப்’க்கான விஷயங்களாக இல்லாமல், நம் சமூகத்துக்கு உட்பட்ட, இப்போது நிலவும் சிக்கலான விஷயங்களையும் சேர்த்தே பார்க்கலாம்.

அது என்ன சிக்கலான விஷயம்? ரிலேஷன்ஷிப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான உரிமைகளும் பொறுப்புகளும் உண்டு. ஆனால், பிரேக்அப் என வரும்போது சற்றே பெண்கள் பக்கம் சாய்வோடு யோசிக்க வேண்டியிருக்கிறது. காரணம், இந்தியச் சமூகம் ஆணாதிக்கச் சமூகமாக இருப்பதே. இங்கே பெண்களின் வாழ்வு ஆண்களோடு ஒப்பிட்டால் அவ்வளவு எளிமையானதல்ல. அதற்கான காரணங்களைச் சொல்ல தனி தொடர்தான் எழுத வேண்டும். இந்தச் சூழலில் ஒரு பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவிட்டு `சப்பை’ காரணங்களுக்காக ஓர் ஆண் பிரேக்அப் செய்வதை ஏற்க முடியாது. நியாயமான காரணங்களோடு நிகழும் பிரேக்அப்கள் வேறு. சின்னச் சின்ன விஷயங்களுக்காக செய்வதை, பெண்ணுக்கு அதில் பாதகம் என்னும்போது கொஞ்சம் நேரமெடுத்து, பொறுமையுடன் யோசிக்கலாம் என்கிறேன்.

பிரேக்அப்பில் மூன்று முக்கியமான நிலைகள் உண்டு.

– எப்போது செய்ய வேண்டும்,

– எப்படிச் செய்ய வேண்டும்,

– பிரேக்அப் செய்த பின் என்ன செய்ய வேண்டும்?

முதலில் எப்போது செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருவருக்குமான முக்கியத்துவத்தில் சமநிலை இல்லாமல் போகும்போதே அந்த உறவே சுமையாகும். என்ன செய்தாலும் அது நிம்மதியைத் தராது. இரண்டு மனிதர்கள் ஒன்றாக வாழ்ந்து, பகிர்ந்து, இருவரும் வளர்வதற்கே ரிலேஷன்ஷிப். அதில் ஒருவருக்கு வலி மட்டுமே மிஞ்சுகிறதென்றால் அந்த ரிலேஷன்ஷிப்புக்கு அர்த்தமேயில்லை. அந்தச் சமயத்தில் பிரேக்அப் தேவையான ஒன்று.

Breakup

Also Read: எப்போது ஒரு ரிலேஷன்ஷிப் `toxic’ ஆக மாறுகிறது #AllAboutLove – 18

ஒரு ரிலேஷன்ஷிப் டாக்ஸிக் ஆக மாறிவிட்டதென நினைத்தால் பிரேக்அப் தவிர்க்க முடியாதது ஆகிறது. எப்போது ஓர் உறவு அப்படி மாறுகிறதென சென்ற வார அத்தியாயத்திலே பார்த்தோம்.

Physical abuse எனப்படும் உடல்சார்ந்த வன்முறை நிகழ்ந்தால் அது பிரேக்அப்புக்கான காரணமாக நிச்சயம் இருக்கலாம். `ஒரே ஒரு முறைதான் அடிச்சேன். அதுக்கே பிரேக்அப்னு சொல்றா’ என்ற குரல்களும் எழுந்திருக்கின்றன. `தப்பட்’ என்ற இந்திப்படம் கூட அதைத்தான் பேசியது. ஆனால், ஒரே ஒருமுறை என்றாலும் அதை மன்னிக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை அந்தப் பெண்தான் முடிவு செய்ய வேண்டும். அவள் வேண்டாம் என முடிவெடுத்தால் அதில் தவறேதுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Also Read: “ `ஒரு எமோஷன்ல’ மனைவியை அடிப்பவர்கள், தன் மேலதிகாரியை அடிக்க முடியுமா?”- `தப்பட்’ எழுப்பும் கேள்வி

சரி. ஆண்கள் மட்டும்தான் அடிக்கிறார்களா… பெண்கள் அடிப்பதில்லையா? இதுவும் நிகழும். ஆனால், வித்தியாசம் இருக்கிறது. ஆண்கள் அடிப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடு. பெண்கள் அடிப்பது ஆற்றாமையின் வெளிப்பாடு. இரண்டையும் சமமாகப் பார்க்கவே கூடாது. இதற்காகத்தான் இந்தியச் சூழல் குறித்து ஆரம்பத்தில் சொன்னேன்.

டீன் ஏஜில் ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைந்தவர்களுக்கு பிரச்னை வேறு மாதிரி வரும். ஒரு மனிதன், சமூகத்தின் ஓர் அங்கமாக மாறுவது (Human being to social being) என்பது 18 – 25 வயதில்தான் முழுமையடையும். இந்த இடைவெளியில் எல்லோருக்கும் உலகம், வாழ்க்கை மற்றும் மனிதர்கள் மீதான பார்வையும் புரிதலும் நிறைய மாறும். சில சமயம், இருவரும் ஒன்றாக இந்தக் காலத்தை எதிர்கொண்டு ஒரே மாதிரியோ, ஒருவரையொருவர் புரிந்துகொண்டே வளர்வார்கள். இன்னும் சிலர், அப்படியே எதிரெதிர் நபர்களாக மாறிவிடக்கூடும். அப்படி மாறினால், இருவரும் இனி சேர்ந்து பயணிப்பது சாத்தியமின்றியோ, சிரமமாகவோ ஆகலாம். அல்லது ஒருவருக்கு இந்த மாற்றம் புரிந்தும், இன்னொருவருக்கும் புரியாமலும் போகும். அப்போது ஒருவர் பிரேக்அப் கேட்பதும் இன்னொருவர் மறுப்பதும் நடக்கலாம். இது சிக்கலான சூழ்நிலைதான். ஆனால், இங்கே பிரேக்அப் கேட்பதில் தவறேதுமில்லை.

Breakup

Also Read: ரிலேஷன்ஷிப்பில் பொய் சொல்லலாம்தான்; ஆனால்..?! #AllAboutLove – 17

அடுத்து காரணத்தை விளக்க வள்ளுவரைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்

(அதிகாரம்: வலியறிதல் குறள் எண்: 475)

மயிலிறகு என்பது மிகவும் எடை குறைவான பொருள்தான். இது என்ன செய்துவிட போகிறது என்று, அதை வண்டியின் மேல் அளவுக்கு அதிகமாக ஏற்றினால், வண்டியின் அச்சாணி முறிந்து விடும் என இதற்குப் பொருள்.

சின்னச் சின்ன விஷயங்களாக இருக்கும். ஒவ்வொன்றையும் தனித்தனியே பேசினால் `இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ எனத் தோன்றும். ஆனால், அதையே ஆண்டு முழுவதும் அனுபவித்தால் மனசு தாங்காது. தினமும் 6 மணிக்கு சந்திப்பது ஒரு ஜோடியின் திட்டம். ஒரு நாள் தாமதமாகலாம். 5 – 6 நாள் கூட ஆகலாம். ஆனால், எல்லாம் நாள்களும் 7.30-க்கு வருவதே ஒருவர் வழக்கமென்றால் என்ன செய்ய முடியும்? சரியென சந்திப்பை 7.30-க்கு மாற்றினால் 9 மணிக்கு வருகிறவரை என்ன செய்ய முடியும்? இது சின்ன உதாரணம். இப்படி எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கொஞ்சம் என சுமையை ஏற்றிக்கொண்டே போனால் அச்சாணி போல உறவும் முறிந்துதான் போகும். அதுவும் இயல்பானதுதான்.

திருமணம் அல்லது லிவிங்கில் இணைபவர்களுக்கு சில ஆண்டுகளில் ஒரு பிரச்னை வரும். அது, `நீ இப்பலாம் பேசுறதே இல்லை. ரொம்ப மாறிட்ட’. கொஞ்சம் சிக்கலான சிக்கல்தான். இருவரும் தனித்தனியே வாழ்ந்தபோது இருவருக்குமான நேரமென்பது ஒப்பீட்டளவில் குறைவு. அதனால், சந்திக்காத நேரத்தில் நிகழ்ந்தவற்றை சந்திக்கும்போது பகிர நிறைய இருக்கும். சேர்ந்து வாழும்போது தெரியாத விஷயங்கள் குறைவாகவும், அதே சமயம் நேரம் அதிகமும் இருக்கும். இதை எளிதில் பேசி சரி செய்யலாம். இது போன்ற பிரச்னைகளுக்காக பிரேக்அப் வரை போக வேண்டியதில்லை.

இந்தியச் சூழல் பற்றி சொன்னதால் இன்னொரு விஷயத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறது. குறிப்பாகப் பெண்களுக்கு. புதிய பாதை படம் பார்த்திருக்கிறீர்களா? தன்னைப் பாலியல் வன்புணர்வு செய்தவனையே காதலித்து, கல்யாணம் செய்து திருத்தப் பார்ப்பாள் நாயகி. யாரும் யாரையும் நிஜத்தில் திருத்த முடியாது. அப்படித் திருத்த முனைவதும் நல்லதல்ல. ஒருவரின் குணம் தவறென பட்டாலோ, ஒத்துவராது என நினைத்தாலோ விலகுவதே சரி. ஒருவனுக்கு ஒருத்திதான் என்ற அடிப்படைவாதத்திலிருந்து இந்தியச் சமூகமே எப்போதோ நகர்ந்து வந்துவிட்டது. எனவே, ஒரு தவறான முடிவால் தவறான நபரைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிந்தால் விலகுங்கள். அதில் தவறேதுமில்லை.

பிரேக் அப் தவறில்லைதான். ஆனால், அதற்கு நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது. அவசரத்தில் செய்யப்படும் பிரேக்அப் பற்றி பின்னர் யோசித்து யோசித்து வருந்துபவர்கள் நம்மில் பலர் உண்டு. பிரேக்அப் என்பதை ரிலேஷன்ஷிப்பில் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதும் தவறுதான். அந்தச் சொல்லைப் பயன்படுத்தக்கூட யோசிக்க வேண்டும்.

Suffering is too personal என்பார்களே.. அது போல பிரேக்அப் என்பது தனிப்பட்ட விஷயம். ஒரே விதியோ காரணமோ எல்லோருக்கும் பொருந்தாது. அவரவர் வாழ்வு அவரவர் முடிவுதான். ஆனால், ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இருவருக்கும் அந்த முடிவு நியாயமாகவும், அவரவர் வாழ்க்கையை சரியாக்க உதவுவதாகவும் இருக்க வேண்டுமென்பதே விஷயம்.

– அடுத்த வாரமும் பேசுவோம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.