புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னை குறித்து தானாக வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம், அதன் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் மத்திய அரசியம் உச்ச நீதிமன்ற நிதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொரோனா பேரிடர் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம், அதன் மீதான விசாரணையை விரைவாக நடத்தி வருகிறது. இன்றைய தினம் இந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக்பூஷண் தலைமையிலான அமர்வில் வந்தது. அப்போது வாதங்களை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, “புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இன்னும் முழுமையாக ரேஷன் அட்டைகள் கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்களின குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும், இன்னும் அது முழுமையாக செயல்படுத்தப்படவில்லை” என புகார் கூறினார்.

image

மேலும், “மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம்’ கூட, ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது” என்று அவர் கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், “அடையாளம் காணப்பட்ட அத்தனை ஏழைகளுக்கும், இந்தத் திட்டத்தின் கீழ் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் வரும் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ரேஷன் அட்டை இல்லாத நபர்களை எப்படி கண்டறிவீர்கள்? அவர்களுக்கு எப்படி உணவு பொருட்கள் வழங்குவீர்கள்? ரேஷன் அட்டை இல்லாதவர்களை கண்டறிவது மாநிலங்களின் பணி என்று கூறுகிறீர்கள். ஒருவேளை மாநில அரசுகள், அது தங்களது திட்டமல்ல என கூறிவிட்டால், அதற்கு மாற்றாக என்ன செய்யப் போகிறீர்கள்?” என அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர், “இது தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்துவிட்டு, ஒரு வாரத்தில் பதில் அளிக்கிறோம். அதற்கு உண்டான கால அவகாசம் வழங்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார்.

இது ஒருபுறமிருக்க, “புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்கள் மற்றும் தரவுகளை பதிவேற்றும் பணிகளை ஏன் இன்னும் செய்து முடிக்கவில்லை?” என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தான் அந்தப் பணிகளை முடிக்கவில்லை எனக் கூறியது.

image

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “ஒரு செயலியை உருவாக்க கூடவா உங்களால் முடியவில்லை? ஒரு சின்ன வேலைக்கு எதற்காக இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்கிறீர்கள்?” என கடுமையாக கேள்வி எழுப்பினர். மேலும், “அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து வெளியிடும் பணிகளையும் ஏன் இன்னும் முடிக்காமல் இருக்கிறீரகள்?” என மீண்டும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய அரசு சார்பில், “தற்பொழுது செயலிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் பணிகள் அடுத்த நான்கு மாதத்தில் நிறைவடைந்துவிடும். அதன் பிறகு தொழிலாளர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். இது மிகவும் நுட்பமான பணி என்பதால் சற்று கால தாமதம் ஆகலாம்” என விளக்கம் அளிக்கப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “ஏற்கெனவே மாநிலங்கள் தரப்பில், இது குறித்த தரவுகளை பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். அவற்றை ஒருங்கிணைத்து, தேசிய அளவிலான ஓர் இணையதள பக்கத்தில்தான் உங்களை இதனை வெளியிட சொல்கிறோம்” எனக்கூறி, “எனினும் இதனை செய்து முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என்பது தொடர்பான விளக்கங்களை அளிக்க கால அவகாசம் வழங்குகிறோம்” என கூறி வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

– நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.