’ஜகமே தந்திரம்’ படம் ஒரு பிரிட்டிஷ் படைப்பு என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, “ இப்படத்தின் இசைப்பணிகளுக்கு நிறைய நேரம் கிடைத்தது. உலக அளவில் பயணப்படும் படம் என்பதால் நிறைய மெனக்கெட்டேன். பல இடங்களில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இந்த படத்தின் இசை நம் மக்களுக்கு அந்நியமாக இருக்ககூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இந்த படம் ஒரு வகையில் பிரிட்டிஷ் படைப்பென்றே சொல்லலாம்.

ஆகையால்தான் பிரிட்டிஷ் பேண்ட் குழுவினர் மற்றும் இசை கலைஞர்கள், ஸ்காட்டிஷ் இசை கலைஞர்கள் என உலகம் முழுவதிலிருந்தும் பல திறமையாளர்களை இந்தப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். மதுரை நாட்டுப்புற இசையையும் இப்படத்தில் முயற்சித்திருக்கிறேன். படப்பிடிப்பிலும் கலந்து கொண்டதால் படத்தில் இசை, காட்சிகளில் எப்படி பொருந்தும், எது பொருந்தாது என்கிற தெளிவு இருந்தது. இது ஒரு புதுவிதமான அனுபவம். ஒரு கலைஞனாக, பல விதமான புதிய முயற்சிகளுக்கு இப்படத்தில் இடம் கிடைத்தது.

“ரகிட ரகிட” பாடல் முதல்முறையாக எனது ஸ்டூடியோவிற்கு வெளியே பதிவு செய்த பாடல். அந்த பாடலே ஒரு அனுபவ உணர்வின் வெளிப்பாடு தான். ரசிகர்கள் அந்த அனுபவத்தை உணர வேண்டும் என்று நினைத்தோம். படத்தின் மொத்த குழுவினருக்கும் எனது நன்றிகள். குறிப்பாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. இப்படத்தில் அவருடன் இணைந்து நூற்றுக்கணக்கான புதியமுயற்சிகளை செய்தேன்.” என்றார்.

முன்னதாக, தனுஷ் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் தனுஷூடன் இணைந்து பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மலையாத்தில் ‘ஜோசப்’, ’நாயட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்ததின் மூலம் கவனம் பெற்றவர் ஜோஜு ஜார்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணனின் இசையில் அண்மையில் இந்தப் படத்தின் பாடல்கள அனைத்தும் வெளியாகி வரவேற்பை பெற்றது கவனிக்கத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.