காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக பெரும்பாலும் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும். மேட்டூரில் தண்ணீர் இல்லாத சமயத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது தாமதமாகும். மேட்டூரிலிருந்து வரும் தண்ணீரை நம்பியே டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வந்ததடைந்ததும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

கல்லணையில் ஆய்வு செய்த ஸ்டாலின்

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் ரூ.65.10 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 647 பணிகள் ஆறு, வாய்க்கால்கள் என 4,061 கி.மீட்டர் தூரத்திற்கான பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மேட்டூர் அணையை திறக்க உள்ள நிலையில் இன்று கல்லணை புனரமைப்பு பணி மற்றும் ஆறு, வாய்க்கால்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

வெண்ணாறில் தூர் வாரும் பணி ஆய்வு

இதற்காக திருச்சி வந்த ஸ்டாலின், அங்கிருந்து கார்மூலம் கல்லணை வந்தடைந்தார். கல்லணையில் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளின் தலை பகுதிகளில் நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.122 கோடியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளதை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற தூர் வாரும் பணிகளின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அவரிடம் நீர்ப்பாசனத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் பணிகள் குறித்து எடுத்துக் கூறினர்.

பின்னர் கல்லணை ஆய்வு மாளிகையில் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தூர்வாருவதில் இதுவரை நடந்துள்ள பணிகள், தற்போது நடைபெறும் பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் அதிகாரிகள் எடுத்து கூறினர். பின்னர் வல்லம் அருகே உள்ள முதலைமுத்து வடிகால் வாரியில் ரூ.40 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டுள்ளதையும், தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் ரூ.17 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டுள்ளதையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆற்றுக்கரையில் சாலை

முதல்வர் வருகையையொட்டி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பள்ளியக்கிரஹாரம் வெண்ணாற்றில் பார்வையிட்ட பகுதியில் ஆற்றின் கரையோரம் முதலமைச்சர் ஸ்டாலின் காரில் வந்து இறங்கி செல்வதற்கு வசதியாக மண்ணையே மேடாக்கி கார் உள்ளே வர, வெளியே செல்வதற்கு என இரண்டு இடங்களில் சாலை அமைத்திருந்தனர்.

ஏற்கெனவே வெண்ணாறான அந்த இடம் தூர்வாரப்பட்டு சுத்தமாக இருந்தது. ஆனால் ஸ்டாலின் பார்வையிட வேண்டும் என்பதற்காக சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அதே இடத்தில் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு தூர்வாரும் பணி ஊழியர்கள் மேற் கொண்டனர். இதனை பார்த்த விவசாயிகள் சிலர் சுத்தம் செஞ்ச இடத்துலேயே சும்மாவே ஓட்டுறத பாரு என கமெண்ட் அடிக்கவும் செய்தனர். குறித்த நேரத்தில் தூர் வாரப்பட்டு, மேட்டூர் அணையும் திறப்பட்ட இருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.