நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், முத்து மனோ. சட்டக் கல்லூரி மாணவரான அவர் தன் நண்பர்களுடன் வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருந்ததாக போலீஸாரால் ஏப்ரல் 8-ம் தேதி கைது செய்யப்பட்டார்

சிறையில் கொலை செய்யப்பட்ட முத்து மனோ

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முத்து மனோ மற்றும் நண்பர்கள், ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். 15 நாள் காவலுக்குப் பின்னர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறைக்குக் கொண்டுவரப்பட்ட சில நிமிடங்களிலேயே முத்து மனோவை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல, அங்கிருந்த கைதிகள் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். அவர் சிறைத்துறையினரின் உதவியுடன் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

Also Read: சிறை வார்டன் உட்பட 3 பேர் கொடூரக் கொலை! – வேலூரை அலறவைத்த ரௌடிக் கும்பல்

இது தொடர்பாக முத்து மனோவின் தந்தை சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டனர். அதன்படி சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

சிறைச்சாலையின் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் சிறைக் கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிறைச்சாலையின் அதிகாரிகள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், சிறைக் கைதிகள் 7 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

உறவினர்கள் போராட்டம்

முத்து மனோ கொலை வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் மீதும் வழக்கு தொடர வேண்டும் என உறவினர்களும் பெற்றோரும் வலியுறுத்தி வருகிறார்கள். அந்த கோரிக்கைக்காக கடந்த 50 நாளாக முத்து மனோ உடலை வாங்க மறுத்து போராடி வருகிறார்கள்.

முத்து மனோ உயிரிழந்து இன்றுடன் 50 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், பாளையங்கோட்டை சிறையின் கண்காணிப்பாளரான கிருஷ்ணகுமார் சென்னைக்கு மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருச்சி சிறையின் கண்காணிப்பாளரான சங்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கண்டன பேனர்

அரசின் இந்த நடவடிக்கையை முத்து மனோவின் பெற்றோரும் உறவினர்களும் வரவேற்றுள்ள போதிலும், கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.