ஒரு மாநிலத்தில் தேர்தல் வருகிறது என்பதை முக்கிய பிரமுகர்கள் கட்சித் தாவுவதில் இருந்தே கண்கூடாக தெரிந்துகொள்ள முடியும். அப்படி உத்தரப் பிரதேச மாநில தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பாஜகவிற்கு தாவி வரும் சூழலில் அங்கு அரசியல் களத்தில் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.

403 சட்டமன்ற இடங்களைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலம்தான் நாட்டிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் ஆகும். இங்கு பெறக்கூடிய வெற்றி கட்சி, மாநிலங்களவையில் அக்கட்சியின் பலத்தை கூட்டும். மேலும் ‘நாட்டின் மிகப்பெரிய மாநிலத்தை ஆட்சி செய்யும் கட்சி’ என்ற பெருமையும் அக்கட்சிக்கு கிடைக்கும். அதனால் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல், எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் எட்டு மாதங்களில் நடைபெறவுள்ள அந்தத் தேர்தலுக்காக, தீவிரமான தேர்தல் பணிகளில் களமிறங்கியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

image

இந்நிலையில், இத்தேர்தலுக்காக பிற கட்சிகளை சார்ந்தவர்கள் தங்கள் வசம் கொண்டு வரும் முன்னெடுப்பை கையில் எடுத்திருக்கிறது பாஜக. அதன் விளைவாக, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கியமானவராக பார்க்கப்பட்டு வரும் ஜிதின் பிரசாதா பாரதிய ஜனதாக் கட்சிக்கு தாவியுள்ளார். இவர், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சச்சின் பைலட் ஆகியோருக்கு இணையாக ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவர். மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக இவர் கடுமையாக வேலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் தலைமையின் மீது அதிருப்தியில் இருந்த 23 மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகவும் இவர் இருந்து வந்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க, இன்னும் பல மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்த நாட்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன. காங்கிரஸ் கட்சியை தவிர சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் பாஜகவிற்கு அடுத்தடுத்து வர இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்று வரும் உத்தரப் பிரதேச அமைச்சரவையிலேயே, கட்சிக்கு எதிராக சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், குறிப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிரான மனநிலையில் இருப்பதாகவும், எனவே விரைவில் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரலாம் எனவும் தகவல்கள் வெளியாகின. மேலும், பாஜக தலைமை வரும் தேர்தலில் யோகி ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த போவதில்லை என்ற தகவலும் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அமைச்சரவை மாற்றம் முழுமையும் வதந்தியே என முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத். அதேபோல யோகிதான் முதல்வர் வேட்பாளர் என பாஜக தலைமை அறிவித்தது.

image

இதற்கிடையில், தற்பொழுது உத்தரப் பிரதேச அரசியல் நிலவரம் குறித்து பேசுவதற்காக யோகி ஆதித்யநாத் டெல்லியில் முகாமிட்டு இருக்கிறார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். மேலும் நாளை பாஜக தேசிய தலைவர் நட்டாவையும், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவிருக்கிறார் யோகி.

பிரதமர் நரேந்திர மோடியிடம் மிக நெருங்கி இருந்தவரும் – ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து கட்டாய விருப்ப ஓய்வு பெற்றவருமான பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த அரவிந்த் குமார் சர்மாவிற்கு, மாநில பாஜகவின் சில நிர்வாகிகள் அதீத முக்கியத்துவம் வழங்குவதாக விமர்சனங்கள் வருகின்றனர். இப்படியான சின்ன சின்ன குழப்பங்களும் பிரதமர் மற்றும் முதல்வர் யோகி இடையேயான சந்திப்பிற்கு பிறகு முழுமையாக தீர்ந்துவிடும் என பாஜகவின் டெல்லி வட்டாரத் தலைவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரியங்கா காந்தி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து கட்சியை வலுப்படுத்தும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த முயற்சிகள் எதுவும், தனது வெற்றி வாய்ப்பை எந்தவகையிலும் பாதிக்கக்கூடாது என்பதற்காக அனைத்து வகைகளிலும் தேர்தல் வியூகங்களை யோகி அமைக்கின்றார் என்ரும், அதுதொடர்பாகவே முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் டெல்லி பயணம் அமையும் என்றும் கூறப்படுகிறது.

– நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.