செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் பகுதியில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியை நடத்திவருபவர் சிவசங்கர் பாபா. 72 வயதாகும் இவர், 30 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய வேலூர் மாவட்டம், தற்போது திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து பிழைப்பு தேடி சென்னை வந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சிவசங்கரன். சென்னையில் டிரான்ஸ்போர்ட் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டார். சிறு வயது முதல் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுகளைக்கொண்ட சிவசங்கரன், பாபா மீதான பக்தி காரணமாக `சிவசங்கர் பாபா’ என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார்.

பள்ளி

கிழக்கு கடற்கரை சாலையில் ஆசிரமத்தைத் தொடங்கிய சிவசங்கர் பாபா, கர்னாடக இசைப் பின்னணியில் நடனமாடுவது பிரபலம். அவருக்கு பக்தர்கள் கூட்டமும் அலைமோதியது. சிவசங்கர் பாபாவின் ஆசீர்வாதத்துக்காக பக்தர்கள் காத்திருந்தனர். இந்தச் சமயத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் ஆசிரமம் அமைக்கப்பட்ட இடத்தின் அருகிலுள்ள கிராம மக்கள் சிவசங்கர் பாபாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். அதனால் ஆசிரமத்தை அங்கிருந்து கேளம்பாக்கத்துக்கு மாற்றினார். அப்போது நடிகர் ரஜினியின் தோட்டத்தின் அருகில் 64 ஏக்கர் இடத்தை சுஷில் என்ற பக்தர், சிவசங்கர் பாபாவுக்கு தானாமாகக் கொடுத்தார். அந்த இடத்தில் 96-ம் ஆண்டு ஆசிரமத்தைத் தொடங்கிய சிவசங்கர் பாபா, இடத்தை தானமாக கொடுத்த பக்தர் சுஷில் என்பவரின் பெயரையும் சேர்ந்து சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியைத் தொடங்கினார். குறைந்த கட்டணம், இயற்கையான சூழல், தரமான கல்வி கிடைத்ததால் கேளம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களின் குழந்தைகளை அங்கு சேர்த்தனர். பெரும்பாலானவர்கள் பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்தனர்.

இந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்தது. 64 ஏக்கர் இடத்தில் ஆசிரமம், கல்வி நிலையம் ஆகியவற்றைக் கட்டிய சிவசங்கர் பாபா, தன்னுடைய பக்தர்களுக்காகத் தனி வீடுகளையும், அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் கட்டினார். அவற்றில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கியிருக்கின்றனர். சிவசங்கர் பாபா, தன்னைக் கடவுளாகவே கருதி பக்தர்களுக்குக் காட்சியளித்துவந்தார். ஆசிரமம் அமைக்கப்பட்ட இடத்துக்கு `ஸ்ரீ ராமராஜ்யா’ எனப் பெயரிட்டார் சிவசங்கர் பாபா. அந்த வளாகத்தில் சர்ச், கோயில்கள், மசூதிகள், புத்த, ஜெயின் மதக் கோயில்களும் கட்டப்பட்டன. கோயில்களில் பக்தர்களே தேங்காய் உடைத்து பூஜை செய்துகொள்ளலாம். பெருமாள், கிருஷ்ணர், ராதை, விநாயகர் சிலைகளுக்கு அபிஷேகம் நடக்கும்போது சிவசங்கர் பாபாவும் அலங்காரத்துடன் காட்சியளிப்பாராம். அப்போது அவருக்கும் பக்தர்கள் அபிஷேகம், பூஜை செய்வார்கள். ஊர்வலமும் நடத்தப்படும்.

குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை

தன்னைக் கடவுளாகவே கருதிய சிவசங்கர் பாபா, ஆசிரியைகள், பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லை கொடுத்தாகச் சொல்லப்படுகிறது. இதற்கு சிவசங்கர் பாபாவின் பக்தர்கள் எதுவும் சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அங்கு குடியிருப்பவர்களின் ஒப்புதலோடு நடந்த இந்தச் சம்பவங்களுக்கு எதிராக யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்தச் சூழலில்தான் இந்தப் பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை சிவசங்கர் பாபா, பள்ளி நிர்வாகிகள் மீது முன்வைத்தபோதிலும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த அளவுக்கு செல்வாக்குடன் சிவசங்கர் பாபா இருந்தார்.

சென்னை கே.கே.நகர் பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் உள்ளிட்ட சில தனியார் பள்ளிகளின் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபா மீதும் அந்தப் பள்ளியில் படித்த சில மாணவிகள் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டைப் பதிவு செய்தனர். இது தொடர்பான தகவல் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்துக்குச் சென்றதும், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

Also Read: பாலியல் குற்றச்சாட்டு: பிஎஸ்பிபி பள்ளியைத் தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்!

சிவசங்கர் பாபா

இது குறித்து சிவசங்கர் பாபா நடத்திவரும் பள்ளியில் பயின்ற மாணவிகள் சிலரிடம் பேசினோம். “சிவசங்கர் பாபா ஆசீர்வாதம் என்ற பெயரில் மாணவிகளை அணைத்து முத்தம் கொடுப்பார். அதைப் பார்க்கும் ஆசிரியர்களும், அங்கு பணியாற்றுபவர்களும் `கடவுளை நீ சந்தோஷப்படுத்தியதற்கு புண்ணியம், பாக்கியம் செய்திருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள். சிவசங்கர் பாபா செய்த பாலியல் தொல்லைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள், மாணவர்கள் பள்ளியிலிருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்குப் பயந்து யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பலர், தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்லாமல் அமைதியாக இருந்துவந்தனர். ஒருசிலர் கூறிய புகார்களுக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆசிரமத்துக்குள் நடந்த இந்தப் பாலியல் தொல்லை குறித்து தைரியமாக யாரும் புகார் கொடுக்காததால் கடவுளாகவே வலம்வந்த சிவசங்கர் பாபாவால், சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவித்துவந்தோம். தற்போதுதான் சமூக வலைதளங்களில் சிலர் புகாரளித்திருக்கின்றனர். சிவசங்கர் பாபாவுக்கென அங்கு சொகுசு பங்களா ஒன்று இருக்கிறது. அந்த பங்களாவே மர்மங்கள் நிறைந்த பகுதி. அங்கு சென்றவர்களுக்கு மட்டுமே சிவசங்கர் பாபாவின் இன்னொரு முகம் தெரியும்” என்றார்கள்.

சிவசங்கர் பாபா குறித்து நம்மிடம் பேசிய கேளம்பாக்கம் பகுதி மக்கள், கேளம்பாக்கத்தில் அவர் ஆசிரமம் தொடங்குவதற்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையிலும், அவரின் சொந்த ஊரிலும் ஆசிரமம் தொடங்கியிருக்கிறார். மூன்றாவதாகத்தான் கேளம்பாக்கத்தில் ஆசிரமத்தைத் தொடங்கியிருக்கிறார். முதலில் சமூக சேவைகளில் ஈடுபட்டுவந்த அவரை இந்தப் பகுதி மக்கள் கடவுளாகவே பார்த்தனர். அதன் பிறகுதான் அவரின் சுயரூபம் தெரிந்தது. ஆசிரமம் அமைந்துள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு இடங்களும் உள்ளன. அதை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை” என்றனர்.

பள்ளியில் விசாரணை

சிவசங்கர் பாபாவின் விளக்கத்தைப் பெற பல தடவை முயன்றோம். ஆனால் அவரின் விளக்கம், செய்தி வெளியிடும் வரை கிடைக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடுவதற்குத் தயாராக இருக்கிறோம்.

சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பேசும் ஆடியோவும், புகார்களும் சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் நேரத்தில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணையில் என்னென்ன தகவல்கள் வெளியாகப் போகின்றனவோ என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.