Press "Enter" to skip to content

முழு ஊரடங்கிலும் தடையில்லாமல் நடக்கும் சீரியல் ஷூட்டிங்!

தமிழகத்தில் அமலில் இருக்கும் தளர்வில்லாத கொரோனா முழு ஊரடங்கு முடிய இன்னும் நான்கு நாள்கள் இருக்கின்றன. ஜூன் 7-ம் தேதியுடன் அந்த ஊரடங்கு முடியுமா அல்லது திரும்பவும் நீட்டிக்கப்படுமா என்பதும் தெரியவில்லை. இந்தச் சூழலில், ஏற்கெனவே சர்ச்சையைக் கிளப்பிய ‘சீரியல் ஷூட்டிங்’ விவகாரம் மறுபடியும் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.

முன்னதாக, லாக்டௌன் தொடங்கிய மே 10-ம் தேதிக்குப் பிறகும் அரசின் உத்தரவுக்குச் செவி சாய்க்காமல் ரகசியமாக சில சீரியல்களின் ஷூட்டிங்குகள் நடைபெற்றது நினைவிருக்கலாம். அப்படி நடந்த ஒரு ஷூட்டிங்கினால் பிரைம் டைம் சீரியல் ஒன்றின் யூனிட்டில் சுமார் 30 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளான செய்தியும் விகடன் தளத்தில் வெளியாகி இருந்தது. அவர்களுக்குத் தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த ஏற்பாடும் செய்யபடவில்லை. இதனால், அதுவரை சீரியல் ஷூட்டிங்கிற்கு மட்டும் அரசிடம் சிறப்பு அனுமதி கேட்கலாம் எனச் சொல்லி வந்த பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அதன்பிறகு, “மே 31 வரை எந்த ஷூட்டிங்கிலும் பெப்சி தொழிலாளர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்” என அறிவிக்க, உடனடியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

Also Read: லாக்டெளனை மீறி டிவி சீரியல் ஷூட்டிங்: அம்மாவைப் பறிகொடுத்த நடிகை, அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?!

மே 31-ம் தேதி வரை எல்லா சேனல்களிலுமே ஒளிபரப்ப எபிசோடுகள் கைவசம் இருந்தன. ஜூன் முதல் தேதியிலிருந்து சீரியல்கள் ஒளிபரப்பில் என்ன மாற்றங்கள் வருமென எல்லோரும் எதிர்பார்த்திருந்த தருணத்தில்தான், இப்போது “மீண்டும் சீரியல் ஷூட்டிங் ரகசியமாக நடக்கிறது” என்கிற பரபரப்பு.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்

’’சும்மா பேருக்கு ரெண்டு நாள் ஷூட்டிங்கை நிறுத்தினாங்க. பிறகு பழையபடி ரகசியமா சிலர் அங்கங்கே ஷூட்டிங்கைத் தொடங்கி நடத்திட்டுதான் இருந்தாங்க. ஒரு முன்னணி சேனல் தன்னுடைய அலுவலகத்துக்குள்ளேயே ஷூட் நடத்தியதா தெரிய வந்துச்சு. ஒரு சேனலைப் பார்த்து இன்னொரு சேனல்னு இறங்க, இப்ப பல சீரியல் ஷூட்டிங்குகள் ரகசியமா நடந்துட்டுதான் இருக்கு. நிலைமை கைமீறி போயிட்டதாலதான் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி வெளிப்படையா சில விஷயங்களைப் பேசினார்’’ என்றார் சீனியர் சீரியல் ஹீரோ ஒருவர்.

இந்த விவகாரம் குறித்த ஆர்.கே.செல்வமணியின் பேச்சும் பட்டும் படாமலும்தான் இருக்கிறது. ‘’அரசு அறிவித்துள்ள தளர்வில்லா லாக்டௌனுக்கு ஆதரவு தர்றதுங்கிறதுதான் பெப்சி நிலைப்பாடு. நாம ஸ்ட்ரைக் அறிவிக்கலை. லாக்டௌன்ல இருக்கோம். ஆனா, சிலர் ஷூட்டிங் நடத்தறாங்கன்னா, அதுல பெப்சியைச் சேர்ந்த கலைஞர்கள் கலந்துக்கறதுக்கு எந்த தடையுமில்லை. ஆனா, ஏதாவது பிரச்னை வந்தா ஷூட்டிங் நடத்தறவங்கதான் – அதாவது சேனலோ, தயாரிப்பாளர்களோதான் மருத்துவம், இழப்பீட்டுக்கு பொறுப்பேத்துக்கணும். மத்தபடி பெப்சி அதிகாரப்பூர்வமா அரசு அறிவித்த லாக்டௌனை ஆதரிக்கிறது. ஷூட்டிங்ல கலந்துக்கச் சொல்லி எதையும் இப்ப அறிவிக்க முடியாது. அரசு அனுமதி கொடுத்தபிறகுதான் அறிவிக்க முடியும்’’ எனச் சொல்லியிருக்கிறார் செல்வமணி.

முழு ஊரடங்கிலிருந்து அத்தியாவசியமான சில சேவைகளுக்கே கூட தளர்வுகள் ஏதும் அறிவிக்கப்படாத சூழலில், சீரியல்களின் ஷூட்டிங் தன்னிச்சையாக நடைபெறுவது குறித்து சீரியல் ஆர்ட்டிஸ்டுகள் சிலர் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.

“முழு ஊரடங்கு போட்ட பிறகுதான் சென்னையில ஒரளவு நிலைமை சரியாகிட்டு வருது. இந்தச் சூழல்ல கூடுதலா சில நாள்கள் பொறுக்காம மறுபடியும் ஷூட்டிங் போறதுங்கிறது ரிஸ்க்தான். ஆனா வற்புறுத்திக் கூப்பிடுறப்ப என்ன சொல்றதுனு தெரியலை. வர மறுத்த சிலரை சீரியல்ல இருந்து தூக்கற வேலையும் நடக்குது. பெப்சியும் இந்த விஷயத்துல தெளிவான முடிவை எடுக்கலைங்கிறது வருத்தமா இருக்கு’’ என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நடிகை.

ரவிவர்மா (வலது)

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ரவிவர்மாவிடம் பேசினேன்.

‘’ஐதராபாத்ல ஷூட்டிங்கிற்கு அனுமதி தர்றாங்கன்னு இங்க இருந்து சில யூனிட்கள் அங்க போய் எடுக்கறதா கேள்விப்பட்டேன். சங்கத்துல இருந்து நடிகர்களுக்கு ’எச்சரிக்கையா இருங்க’ன்னு வேண்டுகோள் விடுக்கலாம். ஆர்டர் போட முடியாது. பிரச்னைகள் வந்தா சம்பந்தப்பட்டவங்க பொறுப்பேத்துக்குவாங்கன்னா போறவங்க போகட்டும்னு விட்டாச்சு. மத்தபடி டிவி நடிகர் சங்கமுமே அரசு உத்தரவுக்குக் கட்டுப்படறோம்” என்றார் இவர்.

நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களின் உயிருடன் விளையாடி, இவ்வளவு ரிஸ்க் எடுத்து எதற்காக சீரியல் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்பதுதான் புரியவில்லை!

More from televisionMore posts in television »