“பறையிசை என்றாலே சாவுக்கு அடிக்கிறதுதானேன்னு இழிவா பாக்குறாங்க. ஆனா பறைதான் ஆதித்தமிழனோட இசை. ஒவ்வொரு பூர்வகுடிக்கும் சொந்தமான இசை. நாற்பது வருசத்துக்கு முன்னாடி நாள் முழுக்க பறை அடிச்சப்போ எனக்கு கிடைச்ச வருமானம் காலணா! 2008-ல சீனாவுல வெறும் பத்து நிமிஷம் மேடையில ஏறி பறை வாசிச்சத்துக்கு கிடைச்ச சன்மானம் ஐயாயிரம் ரூபாய்! காசு பணத்த விடுங்க, ஒரு கலைஞனா எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்த குடுத்தது இந்தப் பறைதான். பதிலுக்கு நான் இந்தக் கலைக்கு என்ன செய்யப்போறேன் அல்லது என்ன செஞ்சுருக்கேன்னு எடுத்துச் சொல்றதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை. ஒத்த வரில சொல்லணும்னா பறைதான் எனக்கு உயிர்!”

– பறை இசையின் ஜதிக்கட்டுகள் போல எந்தப் பாசாங்கும் இல்லாமல் பேசுகிறார் வேலு ஆசான். ஒரு கலைஞனுக்கே உண்டான சத்தியமான வார்த்தைகள். ஒரு மாலையில் பசுமலை உச்சியில் நிகழ்ந்த சந்திப்பு இது…

அரை நூற்றாண்டு கலைஞனின் ஆரம்பப் புள்ளி ஏது?

வேலு ஆசான்

“என்னோட முழுப்பேரு வேல்முருகன். சொந்த ஊரு மதுரை அலங்காநல்லூர்தான். அப்பா பேரு ராமைய்யா… அவரும் ஒரு பறையிசை கலைஞர். என் பையனும் இப்போ பறையிசை கலைஞராதான் இருக்கார். எனக்கு பள்ளிப்படிப்புன்னு பெருசா எதுவும் இல்ல. பள்ளிக்கூடத்துக்குப் பரீட்சைக்குப் போனப்ப, திண்டுக்கல்ல இருந்து பன்னீர் வாத்தியாரோட பறை இசைக்குழு முடுவார்பட்டிக்கு ஒரு சாவு வீட்டுக்கு வந்துருக்காங்கன்னு ஊருக்கார் ஒருத்தர் சொன்னாரு… அப்ப அந்தப் பரீட்சை அட்டையை தூக்கிப்போட்டுட்டு சாவு வீட்டுக்கு கெளம்பி போயிட்டேன். இடையில பொருளாதார தேவைக்காக அட்டை கம்பெனி, சைக்கிள் கடை, கரும்பு ஆலைன்னு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். ஆனாலும் ஆடுற கால் ஆடுறதுக்குன்னே பழக்கப்பட்டுருக்கும்போல… வேலைக்குப் போற இடத்துலயும் எதாச்சும் பாட்டோ இசையோ கேட்டா கால் தன்னாலயே ஆட்டம்போட ஆரம்பிச்சது. கிடைக்கிற தட்டு முட்டு சாமான் வச்சு கூட தப்பு அடிக்க ஆரம்பிச்சேன்.

சாவுக்கு அடிக்கிறான்னு என்னைய ஒதுக்க ஆரம்பிச்சாங்க. களவாடுனா தாண்டா கேவலம் கலைக்கு ஏதுடா கேவலம்னு எதைப்பத்தியும் யோசிக்காம முழுமூச்சா பறை இசைக்கு என்னைய ஒப்புக்கொடுக்க ஆரம்பிச்சேன்.”

பறையிசை மீது மட்டும் ஏன் சாதிய சாயம் பூசப்படுது..?

“அதான் எனக்கும் புரியல, எல்லா கலைகளும் இங்க ஒண்ணுதான். அதே ஜதிக்கட்டுகள்தான். என்ன இசைக்கருவிகள் மட்டும்தான் மாறுபடுது. இந்தப் பறைக்கும் மாட்டுத்தோல்தான். மத்த இசைக்கருவிகளுக்கும் விலங்கு தோல்தான்! இன்னும் சொல்லப்போனால் ஆதிகாலத்துல பறையை எல்லாவிதமான சடங்குகளுக்கும் பயன்படுத்தி இருக்காங்க. அது சந்தோஷமா இருக்கட்டும், துக்கமா இருக்கட்டும், ஒரு தகவல் சொல்லுறதுக்கா இருக்கட்டும். ஆரம்பத்துல வேட்டைக்குப் போன மனுஷன் எதிர்ல வர்ற விலங்குகள் கிட்ட இருந்துதப்பிக்க ஒரு ஒலி எழுப்பிட்டே போறான். அப்படித்தான் பறை உள்ள வருது.

ஒவ்வொரு சடங்குமுறைக்கும் ஒரு அடி இருக்கு இந்தப் பறையில்! சாமி கும்புடுறதுக்கு ஒரு அடி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அடி, மஞ்சுவிரட்டுக்கு ஒரு அடி, புலி ஆட்ட அடி, சாமி வேட்டை அடின்னு… இப்படி நிறைய சொற்கட்டுகள் இருக்கு.

இதை வெறும் சாவுக்கான இசையா சுருக்குறது ரொம்பவே குறுகிய மனப்பான்மை. இது அப்படி சொல்றவங்களோட அறியாமையைத்தான் காட்டுது.”

வேலு ஆசான் பறை வகுப்பு

சினிமா வாய்ப்புகள் எப்படி?

“முதன் முதலில் கார்த்திக் ராஜா இசையில் ‘முருகா’ படத்துக்குத்தான் வாய்ப்பு வந்தது. ரெக்கார்டிங் அப்போ அவுங்க குடுக்குற டைமிங்ல நம்ம இசை உட்காரணும்னு ரொம்ப சவாலான பணியா இருந்துச்சு. அங்க ஆரம்பிச்சு ‘தர்மதுரை’, ‘பேட்ட’, ‘சூரரைப் போற்று’, ‘அண்ணாத்த’-ன்னு வந்துருக்கு. ‘பேட்ட’-யில் ரஜினி சார் கூட நடிச்சுட்டேன். ‘அண்ணாத்த’ சூட்டிங் ஸ்பாட்ல பார்த்தவர் கரெக்டா அடையாளம் கண்டுபிடிச்சுட்டார்.

‘பெரியார் விருது’ வாங்க போயிருந்தப்போ விஜய் சேதுபதி வந்திருந்தாரு. பார்த்த உடனே ஆசானேன்னு கட்டிப்புடிச்சுட்டாரு.

அதுபோக ‘சென்னை சங்கமம்’ல நம்ம இசைக்குழுதான் முக்கியமான குழுவா பார்க்கப்பட்டது. அந்த நேரம் நாட்டுபுறக்கலையும் கலைஞர்களும் ரொம்பவே புத்துணர்வு பெற்ற தருணம். இப்போ ‘நீலம் பண்பாட்டு மைய’த்தோட மார்கழி மக்களிசையிசையிலும் பயணிச்சுட்டு இருக்கோம்.”

கொரோனா எப்படியான தாக்கத்தை உண்டு பண்ணிருக்கு?

“பறையிசை கலைஞர்களுக்கு வருஷத்துல அஞ்சு மாசம் ஆறுமாசம்தான் வேலை இருக்கும். இப்போ வாழ்வாதாரத்த இழந்து தவிக்கிற சூழல் உருவாகிருக்கு. இன்னும் எத்தனை மாசம் இப்படி இருக்கும் தெரியல! இப்போவே பத்து வருஷம் பின்னோக்கி போன மாதிரியான ஒரு மனநிலையில இருக்காங்க.”

வேலு ஆசான் பறை வகுப்பு
வேலு ஆசான் பறை வகுப்பு

உங்களோட பயணத்தோட இலக்கு என்ன..?

“பத்து நாள்ல முறையா பறையை நீங்க கத்துக்கலாம். யாருவேணா கத்துக்கலாம். சமர் கலைக்குழு மூலமா வெளியில வந்து பெரிய இடத்துக்கு போன நிறைய இளைஞர்கள் இருக்காங்க.

நான் வெறும் கேள்வி ஞானத்துல கத்துக்கிட்டவன்தான். இன்னைக்கு ரொம்பவே முன்னேறி பறையிசை ஆய்வுகள், நிறைய அடி முறைகள், தனித்தனியாவே நிறைய அடிமுறைகள்னு உருவாக்கிட்டு இருக்கேன். அதற்கான ஆய்வுகளும் மேற்கொண்டு வர்றேன். எந்தக் கலைஞனாக இருந்தாலும் பறையை நோக்கி வரவேண்டும் என்பது என்னோட கனவு. இந்த மண்ணின் கலையை எல்லோருக்குள்ளயேயும் கொண்டு போயி சேர்க்கணும். அதுக்கான வேலைகளில்தான் இருக்கேன். பறையிசை நுணுக்கங்கள் பத்தியும் வரலாறு பத்தியும் ‘தமிழ் இனத்தின் இசை’ என்கிற யூட்யூப் சேனல் வழியா பயிற்றுவித்து வருகிறேன். சொந்தமா ஒரு கலை, அதை அழியவிடாம காப்பாத்த வேண்டிய பொறுப்பு எல்லாருக்கும் இருக்கு! அதை நோக்கிதான் என்னோட பயணம் இருக்கும்.”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.