‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ என பலரையும் பாடவைத்திருக்கும் பழமையான புதிய ‘டிஸ்போ’ (Dispo) செயலியை அறிமுகம் செய்துகொள்வோம் வாருங்கள்.

புதுமையான செயலி என்று அறிமுகம் செய்வதற்கு மாறாக, ‘பழமையான செயலி’ என குறிப்பிடுவதால் குழம்ப வேண்டாம். டிஸ்போ செயலியை பொறுத்தவரை பழமையான தன்மைதான் புதுமையே. அந்தக் காலத்திற்கு அழைத்துச்செல்லும் தன்மையே இந்த செயலியை பிரபலமான புகைப்பட செயலியான இன்ஸ்டாகிராமுக்கு எதிரான செயலி என பேச வைத்திருக்கிறது.

இன்ஸ்டாகிராமுக்கு மாற்றாகவும் போட்டியாகவும் எத்தனையோ புகைப்பட செயலிகள் அறிமுகம் ஆகியிருந்தாலும், டிஸ்போ வேறுபட்டு நிற்கிறது. டிஸ்போவில் அப்படி என்ன தனிச்சிறப்பு என பார்க்கலாம்.

‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட புகைப்பட செயலிகளில் என்ன செய்யலாம்? விதவிதமாக படம் எடுக்கலாம், எடுத்த படங்களை உடனே பார்த்து ரசிக்கலாம், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். படங்களை லைக் செய்யலாம், கருத்து தெரிவிக்கலாம்… இன்னும் பலவற்றை செய்யலாம்.

ஆனால், ‘டிஸ்போ’வில் படம் எடுத்தால், அந்தப் படங்களை உடனே பார்க்கவும் முடியாது, பகிரவும் முடியாது. மாறாக மறுநாள் காலை குறிப்பிட்ட நேரத்தில்தான் படங்களை பார்க்க முடியும்.

இன்று எடுக்கும் படங்களை மறுநாள்தான் பார்க்க முடியும் என்பது ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு விநோதமாக தோன்றலாம். ஆனால், அந்தக் காலத்தில் கேமராவில் படம் எடுத்த பிறகு, புகைப்படச்சுருளை கழுவி அச்சிட்ட பிறகே படங்களை பார்க்க முடியும்.

டிஜிட்டல் கேமராக்களுக்கு முந்தைய அனலாக் காலத்தில், கேமராக்களை புகைப்பட சுருளை பயன்படுத்துவதும், பின்னர் அவற்றை கழுவி படமாக்குவதும்தான் இயல்பாக இருந்தது. இந்தப் பழைய இயல்பு தன்மையைதான், இன்ஸ்டாகிராம் காலத்தில் ‘டிஸ்போ’ ஸ்மார்ட்போன்களுக்கு கொண்டு வந்திருக்கிறது.

படம் எடுத்த கையோடு ஸ்மார்ட்போன் திரையில் அந்தப் படத்தை பார்த்து, உடனே திருத்தங்களை மேற்கொண்டு மேம்படுத்துவதற்கு மாறாக, டிஸ்போ செயலி, பழைய கேமராக்களில் படம் எடுப்பது போல, மறுநாள்தான் படங்களை பார்க்கலாம் எனும் தன்மையுடன் அமைந்துள்ளது.

டிஜிட்டல் கேமராக்களின் உடனடித் தன்மையை இப்படி தலைகீழாக மாற்றி இருப்பதன் மூலம், ‘டிஸ்போ’ செயலி நாம் விரும்பும் நிகழ்வை படம் எடுத்தவுடன், அதைப் பார்க்கவோ, பகிரவோ வழி செய்யாமல், அந்த நிகழ்வில் மூழ்கியிருக்க வழி செய்கிறது.

image

கண் முன் நிகழும் தருணத்தை அனுபவிப்பதற்கு பதிலாக, அந்தக் காட்சியை படம் பிடித்து, பகிர்ந்துகொண்டு உரையாடுவதில் கவனம் செலுத்தும் நம் காலத்து அந்நியத்தன்மையை பலரும் விமர்சித்து வரும் நிலையில், படம் பிடித்தாலும் நிகழ்காலத்தை ரசித்து மகிழ இந்த செயலி வழி செய்வதாக கருதப்படுகிறது.

அது மட்டும் அல்ல, ‘டிஸ்போ’ செயலியில் புகைப்படங்களை மேம்படுத்துவதற்கான ஃபில்டர் வசதி எல்லாம் கிடையாது. ஃபில்டர்களால் மெருகேற்றுவதற்கு பதிலாக கொஞ்சம் மங்கலாகவே படங்களை உருவாக்கித்தருகிறது இந்த செயலி.

இந்த செயலியில் எடுக்கும் படங்களை, மறுநாள் காலை குறிப்பிட்ட நேரத்தில் பார்க்கலாம். அதன் பிறகு அந்தப் படங்களை செயலியில் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், லைக் வசதி, கமெண்ட் வசதி எல்லாம் கிடையாது. அந்த வகையிலும் இன்ஸ்டாகிராம் தன்மையில் இருந்து விடுதலை அளிக்கிறது.

இந்த செயலியின் வடிவமைப்பும் கூட ஆடம்பர அம்சங்கள் இலலாமல் எளிமையாகவே இருக்கிறது. பழைய கால கேமரா போன்ற தோற்றத்தில் பிளாஷ்லைட் மற்றும் கிளிக் வசதி மட்டுமே இருக்கின்றன.

அதேபோல பிளாக்ரோல் எனும் கூடுதல் வசதியும் இருக்கிறது. இந்த செயலிக்கான சமூக ஊடகத் தன்மை என இதை குறிப்பிடலாம். பிளாக்ரோல் வழியே மற்றவர்கள் படங்களை பார்ப்பதோடு, அவர்களை பின் தொடரவும் செய்யலாம். விரும்பினால், மற்றவர்களோடு இணைந்து படம் எடுத்து பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.

வித்தியாசமான செயலியாகதான் இருக்கிறது அல்லவா? அதனால்தான் இணைய உலகில் அண்மைக் காலமாக இந்த செயலி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த செயலி, கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் ஐபோனுக்கான வடிவில் அறிமுகமானது. துவக்கத்தில் அழைப்பின் பேரில் மட்டுமே இந்த செயலியை பயன்படுத்தும் நிலை இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு இந்த செயலி திடீரென பிரபலமானது. எல்லோரையும் பழைய நினைவுகளில் மூழ்க வழி செய்ததே இதற்கான காரணமாக சொல்லப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று எல்லோரையும் வீட்டிலேயே முடக்கிப்போட்டு, சமூக வாழ்வில் ஒரு வித நிச்சயமற்றத்தனமையை உண்டாக்கிய நிலையில், பலரது மனமும் பழைய கால நினைவுகளுக்கு ஏங்குவதாக உளவியல் நோக்கில் விளக்கம் சொல்லப்படுகிறது.

இந்தப் பின்னணியில், பயன்படுத்தியதும் தூக்கியெறியும் டிஸ்போசபில் கேமரா பிரபலமாக இருந்த காலத்தில் படம் எடுப்பது போன்ற உணர்வை தரும் டிஸ்போ செயலி பலருக்கும் பெரும் ஆறுதல் அளிப்பதாக கருதப்படுகிறது. மேலும், உடனடி பகிர்வு தன்மை இல்லாமல், படங்களை மறுநாள் பார்க்கும் வாய்ப்பும், ஈர்ப்புடையதாக அமைந்துள்ளது.

image

எல்லாவற்றையும் விட முக்கியமாக தற்கால சமூக ஊடகங்களின் மாமூலான அம்சங்கள் எதுவும் இல்லாத சமூக ஊடக செயலியாக அமைந்திருப்பதும் பலருக்கும் ஆசுவாசம் அளிக்கிறது.

இந்த செயலியை மையமாக கொண்டு பழைய நினைவுகளில் மூழ்கும் அம்சத்தை இன்னும் விரிவாக ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் முக்கியமான நம் காலத்து செயலியான இந்த டிஸ்போ செயலி உருவாக்கம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள் உள்ளன. யுடியூப் பிரபலமாக அறியப்படும் டேவிட் டோப்ரிக் (David Dobrik) என்பவர் தனது சகாவுடன் இணைந்து இந்த செயலியை அறிமுகம் செய்தார். முதலில் டேவிட்ஸ் டிஸ்போசபில் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், பின்னர் டிஸ்போ என அறிமுகம் ஆனது.

டேவிட்டின் யூடியூப் செல்வாக்கு இந்த செயலிக்கான வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், டேவிட்டின் மற்றொரு சகா தொடர்பான சர்ச்சையால் இந்த செயலி நிர்வாகத்தில் இருந்து அவர் வெளியேறியது தனிக்கதை.

இந்த செயலி பற்றி இன்னொரு முக்கிய விஷயம். இப்போதைக்கு இந்த செயலி ஐபோனில் மட்டுமே செயல்படுகிறது. ஆண்ட்ராய்டு போன்களுக்கு என இதே பெயரில் கொஞ்சம் மாற்றத்தோடு பல செயலிகள் இருந்தாலும் அவை எதுவும் அதிகாரபூர்வமானது அல்ல.

டிஸ்போ செயலியின் இணையதளம்: https://dispo.fun/

– சைபர்சிம்மன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.